அப்படிப் பார்க்காதே ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .சி .மதிராஜ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


அப்படிப் பார்க்காதே !  
நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .சி .மதிராஜ் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வெளியீடு ;நக்கீரன் பதிப்பகம் ,105.ஜானிஜனா கான் சாலை ,இராயப்பேட்டை ,சென்னை .14.விலை ரூபாய் 80
.
கவிஞர் அறிவுமதி ,கவிஞர் யுகபாரதி ,கவிஞர் தபூ சங்கர் கவிஞர் பெரு இளங்கம்பன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் ,கண்ணைக் கவரும் வண்ண புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள நக்கீரன் பதிப்பகதிற்கு பாராட்டுக்கள் .கவிஞர் தபூ சங்கர் பாணியிலேயே பலரும் காதல் கவிதை எழுத ஆரம்பித்து விட்டனர் .நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .சி .மதிராஜ் .அவர்களும் காதல் ரசம் சொட்டச் சொட்ட காதலியைப் பார்த்துப்  பாடுவது போல கவிதைகள் வடித்துள்ளார் .காதல் திரைப்படங்கள் பார்க்க சலிப்பதில்லை .அது போல தான் காதல் கவிதைகளும் படிக்க சலிப்பதில்லை . 
 "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் ". 
என்ற  கூற்று வள்ளலார் சொன்னது எல்லோரும் அறிந்த ஒன்று .கவிஞர் மதிராஜ் கூற்று வித்தியாசமானது .

உன்  கூந்தலிலிருந்து 
வாடிய பூக்களைக் 
கண்ட போதெல்லாம் 
வாடினேன் !

காதலியை நேரடியாக திட்டாமல் சுற்றி  வளைத்து காதலியின் ஆசிரியரைத்  திட்டுகிறார் .ரசிக்க வைக்கும் கவிதை .

கடிதத்தில் கொடுக்கும்
முத்ததைக் கூட 
கணக்குப் பார்த்து 
அனுப்பும் கருமி நீ 
ஒழிக  
உன் கணக்கு டீச்சர் !

காதல் சக்தி மிக்கதுதான் ,மழையில் நனையாதே ! என்று அப்பா ,அம்மா ,ஆசிரியர் சொன்னால் கேட்காதவன் ,காதலி சொன்னால் உடன் கேட்டுக் கொள்ளும் ,கீழ்படியும் காதலன் கவிதை .

மழை  பிடிக்காத 
முதல் காதலி 
நீயாகத்தானிருப்பாய் 
இனி 
நனையாமலிருக்கிறேன்  !
.
காதலி முன் கவிதை எழுத வரவில்லை என்பதை சமாளிக்கும் விதமாக ஒரு கவிதை .

எதிரிலேயே 
உட்கார்ந்து கொண்டு 
என்னைப்பற்றி 
ஏதாவது 
எழுத்து என்கிறாய் !
புதிதாய் வார்த்தைகள் 
கிடைக்காத களைப்பில் 
கசக்கி எறியப்பட்ட 
காகிதங்கள் 
கிடக்கின்றன 
கவிதைபோல !

எள்ளல் சுவையுடன் காதல் கவிதை , படித்திட வாசகர் அனைவருக்கும் பிடிக்கும் .

நீ கரடி என்று 
செல்லமாய் 
எனையழைக்கும் 
காரணம் புரியாமல் 
தவித்தேன் !
கொஞ்ச நாளாய் 
படுக்கையில் 
கரடி பொம்மையை 
நீ கட்டியணைத்து 
உறங்குவதைக் 
காணும் வரை !

காதலி  குண்டூசி தந்தாலும் அதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் காதலர்கள் உண்டு .
நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .சி .மதிராஜ் அவர்களும் அந்த வகைதான் .

என் பிறந்தநாளில் 
நீ பரிசளித்த  
எழுதுகோலை 
பத்திரப்படுத்தியிருக்கிறேன் 
பயன்படுத்தாமல் 
நாளை நம் குழந்தை 
கிறுக்கி எழுதுவதற்காக !

காதலியின் பாராட்டை யாரும் மறப்பதில்லை .மனதிற்குள் அசை போடும் மலரும் நினைவலைகள் .

உனக்கு ஒண்ணுமே தெரியலைடா  
என்று சொன்ன நீயேதான் !
எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது 
என்கிறாய் !
உனக்கு எப்படித் 
தெரிந்ததென்று 
தெரியவில்லை 
எனக்கு ! 

கவிதைகளில் பொய்யும் அழகுதான் .

கரையொட்டி 
நீ குளித்த குளத்தில் 
பூக்களை உதிர்த்து 
வரி வரியாய் 
கவிதைகள் அனுப்பியது 
நானாக செய்ததல்ல 
ஆற்றங்கரை மரம் 
தானாக செய்தது !

கவிஞனுக்கு காதலியைப் பாடும்போது நிலவைப் பாடாமல் இருக்க முடியாது .நூல் ஆசிரியர் இவரும் நிலவை ஒப்பிட்டு பாடி உள்ளார் .

ஒவ்வொரு நாளின் 
நிலவிலும்  
தேடிக் கொண்டிருக்கிறேன் !
நாம் இருவரும் 
முதன் முதலாய் பார்த்த 
அந்த முழுநிலவை !

காதலில் வென்றவர்களை விட தோற்றவர்கள்தான் காதல் கவிதை எழுதுவதில் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ,காதல் தோல்வியை உணர்த்தும் கவிதை உள்ளது .
காதலில் தோற்று கவிதை எழுதுவதை விட ,காதலில் வென்று காதலியின் கரம் பிடிப்பதே நன்று .

என் குழந்தைக்கு 
உன் பெயரை 
வைப்பதில் 
விருப்பமில்லை எனக்கு 
என்றேனும் குழந்தையை 
அதட்ட நேரிடலாம் !

நூலுக்கு அப்படிப் பார்க்காதே !   என்று வித்தியாசமான தலைப்பிட்டு கவிதை முழுவதையும் பார்க்க வைத்து, படிக்க வைத்து விட்டார் . பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் .சி .மதிராஜ் .அவர்களிடம்  சிறிய வேண்டுகோள் தங்களின் முன் எழுத்தில் உள்ள ஆர் .சி என்ற ஆங்கில எழுத்துக்களை  நீக்கி விட்டு தமிழ் எழுத்துக்களை எழுதுங்கள் .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்