அழகுயரக் கண்ணாடி ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


அழகுயரக் கண்ணாடி !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .thabushankar@yahoo.com
நூல் விமர்சனம் கவிஞர்  இரா .இரவி .
விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி கோவை .விலை ரூபாய் 80
.
அழகுயரக் கண்ணாடி நூலின் தலைப்பே  வித்தியாசமாக உள்ளது .ஆள் உயரக் கண்ணாடி கேள்விப்பட்டு இருக்கிறோம் .அழகுயரக் கண்ணாடி  இப்போதுதான் கேள்விப்படுகிறோம் .நூல் ஆசிரியர் கவிஞர்  தபூ சங்கர் புதிய சொல் பயன்படுத்துவதில் வல்லவர் .காதலர்கள் போற்றும் கவிஞராக உள்ளார் ..நூலை பதிப்பித்த விஜயா பதிப்பகம் தபூ  சங்கர் நூல் என்றாலே, கூடுதல் கவனம் எடுத்து நூலிற்கு அழகு கூட்டி விடுகின்றனர் ..இந்த நூலில் கவிதை அழகா?நூல் அழகா ? என்று பட்டிமன்றம் நடத்தினால் நடுவரால் தீர்ப்பு சொல்ல முடியாது .அவ்வளவு வனப்பு .பாராட்டுக்கள் .

முதல் கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர்  தபூ சங்கர் .

 உலகத்தின் 
எல்லா மொழிகளிலும் 
அன்பான சொல் 
அம்மா ...
அழகான சொல் 
காதல் ...

முதல் கவிதையில் காதலுக்கு மதிப்பு அளித்து நூல் முழுவதையும் படிக்க வைத்து விடுகிறார் .
நூலை வித்தியாசமாக காணிக்கையாக்கி உள்ளார் பாருங்கள் .

பிள்ளைகளின் 
காதலை ஏற்றுக் கொள்ளும் 
பெற்றோர்களுக்கு ...

காதலுக்கு சாதி ,மதம் இல்லை என்பதை மெய்பிக்கும் விதமாக எள்ளல் சுவையுடன் .இஸ்லாமியர் கட்டிய தாஜ்மகாலுக்கு இந்து வழக்கப்படி வித்தியாசமாக வேண்டுதல் வைத்துள்ளார் பாருங்கள் .

தாஜ்மகாலுக்கு 
காவடி எடுப்பதாக 
வேண்டிக் கொண்டிருக்கிறேன் 
நீ என்னை காதலித்தால் ...

 காதலியை எப்படி? வித்தியாசமாக வர்ணிக்கிறார் . பாருங்கள் .

உனக்கு முன்னே இருப்பவர்கள் 
உன்னை வரவேற்கிறார்கள் !
உனக்குப் பின்னே இருப்பவர்கள் 
உன்னை  வழியனுப்புகிறார்கள் .!
நீ வீதியில் நடந்துபோகும் 
ஒவ்வொரு முறையும் 
இதுதான் நடக்கிறது !

ஒவ்வொரு கவிதையிலும் ஒரு வித்தியாசம் காட்டி விடுகிறார் .

பாகனைப் பந்து விளையாடும் 
மதங் கொண்ட யானையைப் போல 
இந்த ஊரை விளையாடுகிறது 
திமிர் கொண்ட உன் பேரழகு !

நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் மேற்கோள் காட்டுவது மரபு அன்று .
ஆனால் தபூ  சங்கர் நூலைப்  படித்தால் மரபை மீறி அனைத்து கவிதைகளையும் மேற்கோள் காட்டி விடுவோமோ? என்ற அச்சம் பிறக்கும் . எல்லாக் கவிதைகளும் பிடித்தாலும் ,மிகவும் பிடித்த கவிதைகளை மடித்து வைப்போம் என்று முடிவு எடுத்து மடித்து வைத்தால் கடைசியில் எல்லா பக்கமும் மடிக்கப் பட்டு இருக்கும் .

வெப்பமயமாதாலுக்கு பலரும் பல காரணம் சொல்லி வருகின்றனர் .ஆனால் தபூ சங்கர் எள்ளல் சுவையுடன் சொல்லும் காரணம் ரசிக்கும் படி உள்ளது .

உன் அழகைப் பார்க்கின்ற 
பெண்கள் விடும் 
ஏக்கப் பெருமூச்சில்தான் 
இந்த உலகம் 
வெப்பமயமாகின்றதோ ! 

நூலின் தலைப்பை பாடி உள்ள கவிதை இதோ !

ஆளுயரக் கண்ணாடியெல்லாம் 
போதாது .
ஓர் 
அழகுயரக் கண்ணாடி
வேண்டும் 
நீ உன் பேரழகை 
சரி பார்த்துக்கொள்ள .

அழகு உயர கண்ணாடி உதவும். ஆனால் அழகுயரக் கண்ணாடி ஒன்று உள்ளது என்பது தபூ சங்கர் மட்டுமே அறிந்த ரகசியம் .

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கலைப் பொக்கிசங்கள் உள்ள கண்காட்சி அமைந்துள்ள இடம் ஆயிரங்கால் மண்டபம் .அது பற்றியும் பாடி உள்ளார் .

ஆயிரங்கால் மண்டபத்தில் 
அழகான கால்கள் 
அதைக் காண வந்த 
உன் கால்களே !

கவிதைக்கு பொய் அழகு என்பது உண்மை .அதிலும் காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை ஒன்று .

நீ எட்டிப் பார்த்த கிணற்றில் 
உன் பிம்பம்  விழுந்த நீரைக்
குடித்த  அயிரமீன்கள் எல்லாம் 
வைரமீன்களாகிப் போயின தெரியுமா ?

அயிரமீன்கள் வைரமீன்களாகிப் போவது இல்லை ஆனால் இந்தக் கவிதையைப் படிக்கும் காதலி முகம் வைரமாக ஜொலிக்கும்  என்பது உண்மை .

முத்தம் பற்றி ஒரு ரசிக்கும் கவிதை இதோ !காதலியிடம் முத்தம் பெற்றவர்கள் எண்ணிப் பார்த்து ரசிக்கும் மிக நல்ல கவிதை .

நான் கொடுத்த முத்தத்தை 
என்ன செய்தாய்  என்று கேட்கிறாயே  ..
உன் முத்தத்தை  நான் என்ன செய்ய முடியும் ..
உன் முத்தம்தான் 
என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது 
என்னை .

நூல் முழுவதும் இனிய புதுக்கவிதைகளை காதல் ரசம் சொட்டச்  சொட்ட வடித்துள்ளார். புதுக்கவிதைகளை  புது உத்தியுடன் படைத்து வருகிறார் .கவிஞர் தபூ சங்கர் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் 

கருத்துகள்