திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !  
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !தொலைபேசி 0422-256313
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

குமரன் பதிப்பகம் ,19.கண்ணதாசன் சாலை ,சென்னை .17.தொலைபேசி 044- 24353742.
விலை ரூபாய் 70.

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களை கோவை வசந்த வாசல் கவி மன்றம்  நடத்திய விழாவில் கோவையில் சந்தித்து உரையாடி இருக்கிறேன் .அவரது படைப்புகளை படித்து மகிழ்ந்தவன் .கோவையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவர் .எழுத்து பேச்சு செயல் மூன்றிலும் தன்னம்பிக்கை விதைத்து வருபவர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறையின் இயக்குனராகவும் ,கோவை கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலாரகவும் பணியாற்றி வருகிறார் .

நமது நம்பிக்கை மாத இதழில் ஜனவரி 2011 தொடங்கி 20 மாதங்கள் தொடராக வந்தது .கட்டுரையாக இதழில் படித்தப் போதும் நூலாக மொத்தமாக படித்ததில் சுகம்.கவிதை உறவு இதழில் ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன் அவர்களும் மிகச் சிறப்பாக இந்நூலுக்கு விமர்சனம் எழுதி இருந்தார்கள் .சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நூல் படிக்கும் வாசகர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது .புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எட்டாம் வகுப்பு படித்தப்போது அவரை முதன் முதலில் மேடை ஏற வைத்து அழகு பார்த்த நற்றமிழாசிரியர் திரு .கா .ச .அப்பாவு அவர்களின் புகைப்படத்தை வாங்கி அச்சிட்டு அவருக்கு நூலைச்  சமர்ப்பித்தது சிறப்பு .வாய்ப்புத் தந்த ஆசிரியரை  மறக்காமல் நன்றியை நன்கு பதிவு செய்த பாங்கு .இன்றைய மாணவ சமுதாயம் மனதில் நிறுத்த வேண்டிய கருத்து .

.சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வைர வரிகளை சிந்தனை வரிகளை அணிந்துரை எழுதிய முனைவர் கோ .சேகர் குறிப்பிட்டு உள்ளார்கள் .

முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் 
உன்னைச் சிறைப் பிடிக்கும் !
எழுந்து நடந்தால் எரிமலையும் 
உனக்கு வழி  கொடுக்கும் !

.சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை விதைக்கும் அற்புத வரிகள் .இந்நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இந்த வரிகளை நினைவில் கொண்டு செயல் படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இனிமையான மனிதர் ,பண்பாளர் ,எழுத்தாளர் ,கவிஞர் ,பேச்சாளர் ,செயலர் ,அலுவலர் சகலகலா வல்லவர் .
இவரின் இன்றைய நிலைக்கு காரணம் ,அரசியல், திரைப்படம் இரண்டும் இன்றி கோவையில் இருந்து வரும் முதல் தன்முன்னேற்ற மாத இதழின் ஆசிரியர் இல .செ .கந்தசாமி அவர்களின் உரைதான் .கல்லூரி நாட்களில் விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டு இருந்த தன்னை மடைமாற்றம் செய்தது என்பதை நன்றியுடன் குறிப்பிட்டு உள்ளார் .நன்றி மறப்பது நன்றன்று என்று திருக்குறளை வாழ்வில் கடை பிடித்த காரணத்தால் வெற்றிப் பெற்று உள்ளார் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நூல் படிக்கும் வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார் .இன்று  உப்புச் சத்து நோய் வந்தவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் உப்பை தவிர்த்து சாப்பிட்டு வருகின்றனர் .ஆனால் அவர்களால் நட்பை தவிர்க்க  முடியாது .அதனை உணர்த்தும் அற்புத வரிகள் இதோ !

உப்பில்லாமல்  கூட உயிர் வாழலாம் - ஆனால் 
நல்ல நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது !

முற்றிலும் உண்மை ! நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் .இந்த வாசகத்தை நேற்று மதுரையில் ஓடும் ஆட்டோ முதுகில் படித்தேன் .இதுதான் படைப்பாளியின் வெற்றி .நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் யார் ? என்று தெரியாமலே அவர் எழுதிய வாசகம் பிடித்து எழுதி வைத்துள்ளனர் .இப்படி நூல் முழுவதும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய  வைர வரிகளின் புதையலாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சிந்தனையாளர் முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்லுவதைப் போல நாம் புரட்டும் புத்தகம் அல்ல இது .நம்மை புரட்டும் புத்தகம் . 
 
"அவமானங்கள் நம்மைச் சிதைத்துவிடக் கூடாது .சீராகச்  செதுக்க வேண்டும் .யாராவது நம்மை அவமானப்படுத்தினால் ,நாம் வார்த்தைகளால் அவர்களுக்கு பதில் சொல்லக் கூடாது .வாழ்ந்து காட்ட வேண்டும் .அவமானங்களையே  எழுச்சியாய் உருவாக்கும் உந்து சக்தியாய் மாற்றிப் பழக வேண்டும் ."

நூலில் உள்ள மேற்கண்ட வரிகளை வாழ்வில் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம் .வாழ்வியல் கருத்துக்களை வெற்றிச்   சூத்திரங்களை சொல்லித் தரும் நூல் .
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  உறங்கிக் கொண்டு  இருக்கும் தன்னபிக்கையை உசுப்பி விடும் வரிகள் .

" முற்றுப்புள்ளிகளை முயற்சிப்புள்ளி களாக்கினால் நீங்களே ஒரு முக்கியப்புள்ளி ஆவீர்கள் ."

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கல்லூரி காலத்தில்  கடைப்பிடித்த மூன்று கட்டளைகளை கவனியுங்கள் .

1.இனிமேல் நன்கு படிப்பது , நல்ல மதிப்பெண்களை பெறுவது .
2.எந்தப் போட்டியானாலும் அதில்  கலந்து கொள்வது .வெற்றியோ தோல்வியோ அது குறித்து கவலைப்படுவதில்லை .
3.நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது உருப்படியான காரியங்கள் செய்வது .

மாணவ பேரவைத் தேர்தல் பற்றி ,பெற்ற வெற்றி பற்றி ,காந்தியடிகள் குறிப்பிட்ட 7 பாவங்கள் பற்றி குறிப்பிட்டு வல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது ,நல்லவனாகவும் வாழ வேண்டிய அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார் .

கட்டுரைகளின் தலைப்புகளே நம்பிக்கை விதைக்கின்றன .நம்பிக்கைதான் என் மூலதனம் .
சிந்தனை மின்னல் தெறித்தது ,கூர்மையும் நேர்மையும் சிறகுகள் ,திறமை வளர்ந்தால் நம்பிக்கை பிறக்கும் ,உதவுபோதெல்லாம் உயர்கிறோம் ,முயற்சியும் பயிற்சியும் வெற்றியின் சிறகுகள் ,கூட்டு முயற்சி கோடி நன்மை ,மனதில் நம்பிக்கை நாற்று வளர்த்தேன் ,வெற்றியும் தோல்வியும் பாடநூல்களே .

நம்மை நாம் செதுக்கிக் கொள்ள உதவும் நூல் . விதி என்று ஒன்றும் இல்லை மதியால் உயரலாம் ,உழைப்பால் சாதிக்கலாம், முயற்சியால் முன்னேறலாம் என்பதை பயிற்றுவிக்கும் நூல் .வாழ்வில் சந்தித்த அனுபவங்களை , வெற்றியின் ரகசியத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்ட நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன்  அவர்களுக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
-- 
-- 

கருத்துகள்