புன்னகை வெளிச்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


புன்னகை வெளிச்சம் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் அ .கௌதமன் .செல் 8870748997 
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மைவிழி பதிப்பகம்   4/26 ராகவேந்திரா இரண்டாவது தெரு ,சதாசிவம் நகர் ,மடிப்பாக்கம் ,சென்னை .91.

விலை ரூபாய் 30.



திருச்சியில் வாழ்ந்து வரும் நூல் ஆசிரியர் கவிஞர் அ. கௌதமன் தமிழகஅரசு தணிக்கையாளராகப் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருபவர் .ஹைக்கூ திருவிழாவை மிகச் சிறப்பாக திருச்சியில் நடத்தியவர் .தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .நெத்திச்சுட்டி என்ற முதல் நூல் வெற்றியைத் தொடர்ந்து வந்துள்ள இரண்டாவது நூல் இது .திரு கி .நடராசன் அவர்களின் அணிந்துரை மிக நன்று ."வாழ்க்கை விளையாட்டைப் பாதியில் நிறுத்திக் கொண்ட என் அன்புச் சகோதரன் இளவழகனுக்கு காணிக்கை "என்று வித்தியாசமாக காணிக்கையாக்கி உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிஞர் கௌதமன் தணிக்கையாளர் என்பதால் விலைவாசி ஏறும் காரணத்தை அறிந்து ஹைக்கூ வடித்துள்ளார் .

இலவசங்கள் தொடர்வதால் 
ஏறுகிறது 
விலைவாசி !

.அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டு வீடு தேடி வருவார்கள் .வென்றதும் காணமல் போய் விடுவார்கள் .அரசியல்வாதிகளின் நடப்பை ஹைக்கூவாக்கி உள்ளார் .
தலை காட்டாத வேட்பாளரை 
மவுனமாகத் திட்டினார்கள் 
"முண்டம் " என்று !

ஜோதிடர் கூண்டுக் கதவை திறந்து கிளியை வெளியில் விட்டபோதும் .கிளி நெல்லைத் தின்றுவிட்டு பறக்க முயற்சி செய்யாமல் திரும்பவும் கூண்டுக்குள் சென்று விடும் நிலையை காட்சிப் படுத்தி உள்ளார் .


விரும்பவில்லை விடுதலை 
நெல்லுக்கு அடிமை 
கூண்டுக்கிளி !

கிளி போல மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை குறியீடாக உணர்த்தி உள்ள்ளார் .

வாக்களிக்க லஞ்சம் தருகிறார்கள் .மக்களும் சந்தோசமாக வாங்கிக் கொள்கிறார்கள் .வென்றவர்களும்  அய்ந்து வருடங்களில் சின்ன மீனைப் போட்டு திமிங்கிலத்தை பிடிப்பதைப் போல கோடி  கோடியாக சுருட்டி விடுகின்றனர் .இதனையும் குறியீடாக உணர்த்தும் ஹைக்கூ .படைப்பாளி நினைக்காததையும் வாசகனை நினைக்க வைப்பது சிறந்த ஹைக்கூ .

மஞ்சள் பூசியதால் 
மகிழ்ந்தது ஆடு 
பலியாகப் போவதை அறியாமல் !

இன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பகல் கொள்ளை நடக்கும் இடமாகி விட்டது .பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க  மிகச் சிரமப் படுகின்றனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ .

மகன் புத்தகம் சுமபதற்காகத் 
தந்தை சுமக்கிறார் 
பெருங்கடன் !

அன்று அறங்காவலர்கள் சொந்தப் பணத்தை கோவிலுக்கு செலவளித்தார்கள் .ஆனால் இன்று அறங்காவலர்கள் சிலர் கோயில் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள் .அந்த அவலத்தை தணிக்கையாளர் என்பதால் உற்று நோக்கி ஹைக்கூ வடித்துள்ளார் .

அறங்காவலர் வீடு 
அலங்கரித்தன 
கோவில் மரங்கள் !

இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி பாடாத கவிஞன் கவிஞன் இல்லை .நூல் ஆசிரியர் கவிஞர் அ .கௌதமன் ஹைக்கூ எழுதி உள்ளார் .

வேறு நாடு போகலாமா ?
புத்தன் கலக்கம் 
இலங்கை !

ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன புத்தரை வணங்கிக் கொண்டு பேராசை பிடித்து அலைந்து தமிழர்களை அழிந்து மகிழ்ந்த சிங்களர்கள் புத்தரை வணங்கும் தகுதி இழந்து விட்டனர் .

சிந்திக்க வைக்கும் நல்ல ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் . 


கருத்துகள்