கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

கலகக்காரர் பெரியார் !

நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

அஞ்சுகம் பதிப்பகம் ,65.மேலப் பச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005.
விலை ரூபாய் 40  செல் .8608341428

திருப்பரங்குன்றத்தின் தமிழ்க்குன்று புலவர் தமிழ்க்கூத்தனார் கவிதைப்
பட்டறை வளர்ப்பில் வளர்ந்த கவிஞர் நூல் ஆசிரியர்  கவிஞர்
ஜீவா.வியர்வையின் தாகங்கள் , கருகும் பிஞ்சுகள்  ,கலைஞரின் போர்க்களம்
என்ற நூல்களின் ஆசிரியர் .நான்காவது படைப்பாக கலகக்காரர் பெரியார்
வந்துள்ளது .நூல் வெளியீட்டு விழாவிற்கு  திருப்பரங்குன்றம்சென்று
இருந்தேன்.

நூலை வெளியிட்டதோடு நின்று விடாமல் விழாவில் மிக அதிக முறை ரத்த தானம்
செய்த திரு .ஜோஷ் அவர்களுக்கும் மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகம்
நடத்துபவருக்கும் விருது வழங்கி பாராட்டினார் .நூல் ஆசிரியர்  கவிஞர்
ஜீவா கவிதை எழுதுவதோடு நின்று விடாமல் எழுதுவது போல வாழ்கிறார் என்பதை
பறை சாற்றியது .

புதுக்கவிதை நூலாக மலர்ந்துள்ளது .நூலில் தி .மு .க .பொருளாளர் திரு
ஷ்டாலின் வாழ்த்துரையும் ,தி .க .தலைவர் திரு கி .வீரமணி அணிந்துரையும்
உள்ளது .

தன்னடக்கத்துடன் நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா எழுதிய என்னுரையில்
" எழுத்து்லகில்    நான் ஒன்றும் ஜாம்பவான் அல்ல .எனக்கு தெரிந்தவரை
உண்மையை தைரியமாக பேசிய எழுதிய ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் .எந்த
பிரதி பலனும் இல்லாமல் தீண்டாமை , மூட நம்பிக்கை, அடிமைத்தளைக்கு
எதிராகவும் அறிவுப் பூர்வமான வாதங்கள் முன் வைத்து சமரசமின்றி போராடிய
ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் ."

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றியே முழுவதும் எழுதியுள்ள புதுக்
கவிதை நூல் இது .தந்தை பெரியார் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இளைய
தலைமுறையினர் படிக்க வேண்டிய நூல் இது .புதுக் கவிதையால் தோரணம் கட்டி ,
பகுத்தறிவு விதை விதைத்துள்ளார் .பாராட்டுக்கள்.

 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மீது அளப்பரிய பற்றும் பாசமும்
மிக்கவன் நான் .இந்த நூலைப்  படித்து முடித்ததும் தந்தை பெரியார் மீதான
மதிப்பை மேலும் உயர்த்தியது .

அறிவு வலிமை மிக்க தந்தை பெரியார் பற்றி மிக மிக எளிமையான சொற்களில்
சிறப்பாக வடித்துள்ளார் .

அம்மா சோறு ஊட்டினாள் !
அய்யா சூடு சொரணை ஏற்றினார் !

சின்னச் சின்ன வரிகளின் மூலம் பாரிய பெரிய கருத்துக்களை பதித்துள்ளார் .

மோதி கிழிக்க
வேண்டிய சாதியை
ஓதியா வளர்ப்பது !
.
சாதியை , சாதி வெறியை வளர்த்து விடும் சாதிச் சங்கத் தலைவர்களுக்கு
புத்தி புகட்டுகின்றது .

சட்டமன்றம் போகாத
சட்டாம் பிள்ளை
ஈரோட்டிலிருந்து
இமயம் வரை
கொதித்த எரிமலை !

இறுதி மூச்சு உள்ளவரை தமிழ்ச் சமுதயத்திற்காக  உழைத்த மாமனிதர் தந்தை
பெரியார் பற்றி பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டி உள்ளார்
.பாராட்டுக்கள் .

சூரியனுக்கு
எப்படி அஸ்தமனம் இல்லையோ !
அது போல்தான்
அய்யா உன் கொள்கையும் !
மதத்திற்கும்
மடமைக்கும்
எதிரி நீ !
மனிதத்தில்
உறுதி நீ !

தந்தை பெரியாரை உணர்ந்து , அறிந்து ,ஆய்ந்து வரிகளை வடித்துள்ளார் .

நீ மேடையேறிய போதெல்லாம்
பாடை ஏறியது ஆரியம் !

நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா ,தந்தை பெரியாரைப போலவே சமரசத்திற்கு
இடமின்றி மனதில் படத்தை துணிவுடன் எழுதி உள்ளார் .

எமக்கு எழுச்சி
ஊட்டிய
அறிவுக் கிட்டங்கி !

ஹைக்கூ வடிவில் மிக நேர்த்தியாக பெரியாரை எழுதி உள்ளார் .

போதி  மரத்தில்
புத்தனுக்கு
ஞானம் பிறந்ததாம் !

அய்யா நீங்கள்
வந்த பிறகுதான்
தமிழனுக்கு மானம் பிறந்தது !

கவிதைகளில் ஞானம் ,மானம் என்று சொல் விளையாட்டு விளையாடி படிக்க சுவை
கூட்டி உள்ளார் .

தந்தை  பெரியார் செய்த கலகங்கள் யாவும் தமிழர்க்கு நன்மையாகவே முடிந்தது
வரலாறு . கலகக்காரர் பெரியார் ! நூலின் தலைப்பை உணர்த்தும் கவிதை இதோ .

குலக்கல்வியை
எதிர்த்த
கலகக்காரர் பெரியார் !

தந்தை பெரியார் இந்த மண்ணில் பிறக்காது போயிருந்தால் தமிழரின் நிலையை
எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கு .அவரால் விளைந்த நன்மையை நூல்
முழுவதும் பட்டியல் இட்டு உள்ளார் நூல் ஆசிரியர்  கவிஞர் ஜீவா.

கள்ளிப்பாலில் இருந்து தப்பிய
எங்கள் கரிசல் மண்ணின் பெண்கள்
கலெக்டர்கள் ஆனது - நீ கொடுத்த கல்வியால் !

கல்வியின் சிறப்பை எடுத்து இயம்பி எல்லோருக்கும் கல்விக்கான வாய்ப்பை
வாங்கித் தந்தவர் தந்தை பெரியார் .யாரும் மறுக்கவோ  மறைக்கவோ முடியாத
உண்மை வரலாறு.

கல்லாமை அகற்றிவிட்டால்
இல்லாமை .ஒழிந்துவிடும் !
விஞ்ஞான விளக்கேற்றிய
மெய்ஞானி பெரியார் !

யார் பெரியார் வித விதமாக படம் பிடித்து காட்டுகின்றார் .

இறைப்பற்றை
வெறுத்தவர் !
இனப்பற்றை
விதைத்தவர் !

தந்தை பெரியாருக்கு சூட்டியுள்ள புகழ் மாலை இந்த கவி நூல் .புரியாமல் ,
அறியாமல் மன சாட்சி இன்றி தந்தை பெரியாரை விமர்சிப்பவர்கள் வாங்கிப்
படிக்க வேண்டிய நூல் இது .
கொள்கைக்குன்று தந்தை பெரியார் பற்றி எழுதிய  திருப்பரங்குன்றத்துக்
கவிஞர்  ஜீவா அவர்களுக்கு பாராட்டுக்கள் .

கருத்துகள்