மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !


மதுக்கடை !  கவிஞர் இரா .இரவி !

அரசாங்கம் நடத்தும்
அவமானச்சின்னம்
மதுக்கடை ! 

பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
மதுக்கடை ! 

காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
மதுக்கடை ! 

குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு மதுக்கடை ! 

வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
மதுக்கடை ! 


ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் மதுக்கடை ! 

போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
மதுக்கடை ! 

விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
மதுக்கடை ! 

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
மதுக்கடை ! 

இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
மதுக்கடை ! 

இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
மதுக்கடை ! 
மது !      கவிஞர் இரா .இரவி .

கண்மூடி குடிக்கின்றாய்
விரைவில் கண் மூடுவாய்
 
மது !  

உள்ளே போனதும்
உன்னை இழப்பாய் 
 
மது !  

இரண்டும் அழியும்
பணம் குணம் 
மது !   

இறங்க இறங்க
இறங்கும் உன் மதிப்பு 
மது !  

குடலை அரிக்கும்
உடலை வருத்தும் 
மது !   

மனக்கட்டுப்பாடு இருந்தால்
மனம் நாடாது 
மது !  

மற்றவர்கள்
து என துப்புவார்கள்
மது !  

உழைப்பை வீணடிக்கும்
இறப்பை விரைவாக்கும் 
மது !   

குற்றவாளியாக்கும்
சிறைக்கும் அனுப்பும் 
மது !   

சூது ஆடுவாய்
சொத்து இழப்பாய் 
மது !  

மாது வெறுப்பாள்
துணையை இழப்பாய்
மது !   

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்      கவிஞர் இரா .இரவி
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன்  இல்லை உணர்ந்திடுவாய்
குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்
பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்
இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே
குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்
இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்
போதையால் உன் வாழ்க்கைப்பாதைத்  தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்
குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக்  கும்மாளமிடுவது தப்பு
மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்
பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்
குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்
மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்
சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய்

கருத்துகள்