விசும்பில் சிறுபுள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விசும்பில் சிறுபுள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் .

நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி .

விலை ரூபாய் 20 . இலக்கு பதிப்பகம் ,132 .வங்கி ஊழியர் குடியிருப்பு
,திருவானைக்காவல் ,திருச்சிராப்பள்ளி .620005.

அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .ஹைக்கூ கவிதைகள் ஆறிலிருந்து அறுபது வரை
ரசிக்கும் வடிவம் .சிறுபான்மையினர் சிலர் ஹைக்கூவை குறைவாக விமர்சனம்
செய்து வருகின்றனர் . நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன் ஹைக்கூ
நுட்பம் அறிந்து விசும்பில் சிறுபுள் நூல்
படைத்துள்ளார் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு இதழ்களில் படித்து
இருக்கிறேன் ,மொத்தமாக நூலாக பார்த்ததில் மகிழ்ச்சி .
பாராட்டுக்கள் .கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியை
பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ என்பதை துளிப்பா என்று குறிப்பிட்டுள்ளார்
.ஹைக்கூ என்பதை துளிப்பா,மின்பா ,வாமனப்பா, கெய்க்கூ ,என்று அழைத்தாலும்
ஹைக்கூ என்ற சொல்லே பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட  சொல்லாக உள்ளது.

ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு வகை .ஏழைச்சிறுமி விளையாட்டு
மைதானத்தில் கொலுசை  தொலைத்து விட்டு வந்து குடிசை வீட்டிற்கு வந்தவுடன்
அம்மாவிடம் திட்டு வாங்கும் காட்சியை கண் முன் கொண்டு வந்து வெற்றி
பெறுகின்றார் .

விளையாட்டு மைதானத்தில்
ஒற்றைக் கொலுசு
குடிசையில் விசும்பல் ஒலி !

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால்
வறுமையின் காரணமாக குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலம் நடந்து கொண்டே
உள்ளது .

பணிக்கு செல்கிறான்
சிறுவன்
பள்ளிச் சீரு்டையில் !

மதத்தின் பெயரால் நாட்டில் வன்முறை நிகழ்ந்து வருகின்றது.அதனால்தான்
தந்தை பெரியார் கடவுளை மற ! மனிதனை நினை ! என்றார் .அன்று மனிதனை
நெறிப்படுத்த உருவாக்கப் பட்ட மதங்கள் இன்று மனிதனை வெறிப்படுத்த
பயன்பட்டு வருகின்றது .அதனை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ .

மதவாதிகளின் ஆட்டம்
கால்பந்தானது
மனிதநேயம் !

தங்கத்தின் விலை ஏற ஏற நாட்டில் வன்முறை பெருகி வருகின்றது. ஏழைகளின்
வாழ்வில் கவலை பெருகி வருகின்றது .வரதட்சணை பற்றியும் ஏழை தந்தையின்
பாசம் பற்றியும் உணர்த்தும் ஹைக்கூ .

ஒவ்வொரு நகையிலும்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
தந்தையின் வியர்வை வாசம் !

கரை புரண்டு தண்ணீர் ஓடிய மதுரை வைகை ஆறில்  இன்று மாடு கட்டி மாட்டு
தொழுவமாக உள்ளது .நமது நாட்டில் ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி
வருகின்றது .மணல் கொள்ளையோ அமோகமாக நடந்து வருகின்றது .இதனை உணர்த்தும்
ஹைக்கூ .

இறந்து  போன நதிக்கு
நினைவுச் சின்னமாய்
பாலம் !

மூட நம்பிக்கையின் காரணமாக நம் நாட்டில் மண்ணுக்கும் , தீயுக்கும்
இரையாகும் கண்களை மனிதனுக்கு தர மறுத்து வரும் மனிதர்களுக்கு  புத்தி
புகட்டும் விதமாக ஒரு ஹைக்கூ இதோ் !

சிதைந்த மலரை உயிர்ப்பித்தது
உதிர்ந்த மலர்
கண் தானம் !

விளை  நிலங்கள் எல்லாம் வெகு வேகமாக வீட்டடி  மனைகளாகி வருகின்றது .எதிர்
காலத்தில் உண்ண  உணவே கிடைக்காத நிலை வருவது உறுதி .

நெற்பயிர்கள்
நின்ற இடத்தில
தொட்டிச் செடிகள் !

கவிதைக்கு கற்பனை அழகு .மிக வித்தியாசமாக சிந்தித்து ஹைக்கூ
வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

அடங்காத தாகமோ
இரவு முழுவதும்
நீர்  பருகும் நிலா !

நூல் ஆசிரியர் கவிஞர் பா .சேது மாதவன்நிறைய ஹைக்கூ கவிதைகளில் காட்சிப்
படுத்தி வெற்றி பெறுகின்றார் .

சோறு கேட்டு
கரையும் காகம்
பூட்டிய வீடு !

மனிதர்களின் ஆடை சுத்தமாக உள்ளது ஆனால் மனம் மிக , மிக அழுக்காக உள்ளது
.இதனை உணர்த்தும்  ஹைக்கூ  ஒன்று .

பாவங்களைக் கழுவ
கங்கை ஆறு
மன அழுக்குகளுக்கு ?

கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளார் .ஆனால் கோடிகள் பல செலவழித்தும்
இன்னும் கங்கை அழுக்காகவே உள்ளது .கங்கையில் குளித்து பாவம் போக்குவதை
விட மனிதாபிமானத்துடன் பாவமே செய்யாமல் வாழ்வதே சிறப்பு .

எள்ளல் சுவையுடன் ஒரு ஹைக்கூ படித்தவுடன் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு
வந்து விடும் .

கையை முந்தி வந்து
லஞ்சம் கேட்டது
போலீஸ்காரர் தொந்தி !

திருடனை ஓடிப்பிடிக்க முடியாமல் தொந்தியும் தொப்பையுமாக காவலர்கள் பலர்
இருப்பதைப்  பார்க்கிறோம் .

"மனைவியிடம் திட்டு வாங்காத கணவனே உலகில் இல்லை ." என்று அறுதி இட்டுக்
கூறலாம் .இவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் , அறிவாளியாக இருந்தாலும்
மனைவியிடம் திட்டு வாங்குவது வாடிக்கை .வீட்டுக்கு வீட்டு வாசப்படி
போன்றது .திட்டு வாங்குவது.யாரவது என் மனைவியிடம் நான் திட்டு வாங்கியதே
இல்லை என்று சொன்னால் அது பொய்யாகவே இருக்கும் .

கடவுள் ஆனார்
கணவர்
மனைவி  அர்ச்சனை !
சுண்டக் காய்ச்சிய பாலாக ,சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விதமாக
சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பா
.சேது மாதவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .




கருத்துகள்