நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

விரியும் உலகு !
நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் .செல் 9965039935
நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி .
விலை ரூபாய் 60
கூடு பதிப்பகம் ,31.காளியம்மன் கோவில் தெரு ,பிள்ளையார் பாளையம்
,திண்டுக்கல் . 6240001.

அட்டைப்பட வடிவமைப்பு  நன்று .வித்தியாசமாக உள்ளது .கவிவேந்தர்
மு .மேத்தா அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது .
"இக்கவிதைத் தொகுதி புதுக்கவிதைக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி ,நற்பெயரை
உண்டாக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது எனக்கு . கவிவாணனின்நாளைய
வெற்றி ஊர்வலத்தை என் கண்கள் இப்போதே கனாக் காண்கின்றன "
புதுக்கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் கணிப்பு உண்மையே .நூல் ஆசிரியர்
கவிஞர் கவிவாணன் பல்வேறு இதழ்களில் எழுதி வரும் படைப்பாளி .நல்ல
சிந்தனையாளர் .வத்தலக்குண்டில் வசித்த போதும், மதுரையில் இலக்கிய விழா
என்றால் கலந்து கொள்ளும் இலக்கிய ஆர்வலர். நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்
தன மகளின் கிறுக்கலை   உற்று நோக்கி கவிதை வடித்துள்ளார் .குழந்தைகளின்
கிறுக்கலை ரசித்தவர்கள் உணரும் நல்ல கவிதை .

விரியும் உலகு !
என் வீட்டில் எந்த வெள்ளைத்தாளும்
என் மகளின் கிறுக்கல் இல்லாமல் இருந்ததில்லை !
இதழ் கூப்பியும் சத்தமிட்டும்
எழுதத் துவங்கும்  போது
உலகம் அவளுக்காக விரிகின்றது !

முயற்சி ! கவிதையில் தேனில் நனைந்த தேனீ  திரு்ம்பப் பறக்கும் முயற்சியை
காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

ஆற்றொழுக்கமாய் !
எந்தப் பொழுதையும் சுவாரசியமாக
ஆக்கும் கலை !
வாழ்வை ருசிக்க வைக்கும் !

உண்மைதான் .எந்த ஒரு செயலையும் கஷ்டப்பட்டு செய்வதை விட்டு இஷ்டப்பட்டு
செய்தால் வாழ்க்கை இனிக்கும் .கவலைகள் காணாமல் போகும்.
அன்று வெள்ளையனே வெளியேறு ! இயக்கம் நடத்தினார்கள் .ஆனால் இன்று
சுயநலத்தின் காரணமாக "வெள்ளையனே  கொள்ளையடிக்க வருக ! வருக ! என்று
வரவேற்று ரத்தினக் கம்பளம் விரிக்கின்றனர் .அரசியல்வாதிகளின் முகத்திரை
கிழிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ .

சில்லறை வணிகம்
அன்னிய  முதலீடு
சில்லறையான  அரசு !

வெள்ளாடு என்பார்கள் ஆனால் பார்த்தால் கருப்பாக இருக்கும் .அதனை
உணர்த்தும் ஹைக்கூ .

இருட்டின்
எச்சம்
வெள்ளாடு !

உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு .ஆனால் அம்மா என்ற உறவுக்கு ஈடு இணை இல்லை
.அதனை உணர்ந்து எழுதிய கவிதை .

உலகை முதலில் அறிமுகப்படுத்தியவள் !
உலகில் முதலில் அறிமுகமானவள் அம்மா !

ஈழத்தில் நடந்த தமிழனப் படுகொலை மறக்க முடியாதது .மன்னிக்க முடியாதது
.படைப்பாளிகளால்  தாங்கிக் கொள்ள முடியாத  கொடூரம் .நூல் ஆசிரியர் கவிஞர்
கவிவாணன் ஈழம் பற்றி எழுதி உள்ளார் .

பீனிக்ஸ் தமிழன் !
நிர்வாணம் என்பது பிறப்பில் இருக்கலாம் !
இறப்பிலுமா ?
முள் தைத்த விழிகளோடும்
முள் தைத்த மனசோடும்
புத்தன் அழுகிறான் !
மீட்கப் படுவான்
மீள்வான் மீண்டும் இதே ஈழத்தில்தமிழன்  !

மனு தர்மம் என்பது மனித அதர்மம் என்பதை கண்டு கேட்டு உணர்ந்து கவிதை
வடித்துள்ளார் .

தீட்டு !
கிழ்  வெண்மணி தொடக்கமெனில்
கிளைபரப்பி உத்தப்புரத்திலும் உதிக்கிறது !
அந்த வருணாசிரம  நஞ்சு !
இன்னும் விட்டு விடாது
தொட்டுத் தொடர்கிறது
தீட்டுப் பாரம்பரியம் !

உலகமயம் தாரளமயம்  என்றபெயரில் நம் நாட்டையே அன்னியருக்கு விற்று வரும்
அவலம் கண்டு கொதித்து , நொந்து எழுதியுள்ள கவிதை .

அன்னியமயமாதல் !
வால்மார்ட் வந்தால் என்னவாகும் ?
உனக்கான தாய்ப்பால் கூட
பாலிதீன் பைகளில் விற்பனையாகும் !

உண்மை ! இந்த அன்னிய வரவேற்பு அமோகமாக நடந்தால் இவர் எழுதியதும் நடக்கலாம் .
( ஒரு சிற்றிதழில் தொடராக வெளிவந்த கவிதைகளில் ஒரு சில மட்டும் ) என்று
நூலில் உள்ளது .எந்த சிற்றிதழ் என்பதை அடுத்த பதிப்பில் மறக்காமல்
குறிப்பிடுங்கள் .இன்று சிற்றிதழ்கள் தான் ஆபாசமின்றி தரமாக வருகின்றன.
எழுத்துப்பிழை பல இடங்களில் உள்ளது .அடுத்த பதிப்பில் திருத்தி
வெளியிடுங்கள் .
நாரில் பூச்சுடி கவிதைகள் மிக நன்று .

வியர்வையின் விருட்சங்கள்
பொன்னைக் கண்டுபிடிக்கும் !
பரிமாணமும் பரிணாமமும்
திசைகளைக் கற்றுத் தருகிறது !
பரிமாற்றமும் பரஸ்பரமும்
வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது !

கேள்விகள் வேள்விகள் ! என்று தலைப்பிட்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை
பெரியார் வழியில் ஏன் ? என்று கேள்விகள் கேட்டு சிந்திக்க வைத்துள்ளார்.
பாராட்டுக்கள் .

தலித்துகளுக்கு யாகம் வளர்த்து
பாரதி அணிவித்த பூணூல்  ஏன்  தொடரவில்லை ?

வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வேலை ஏய்ப்பு அலுவலகமாகி விட்ட அவலத்தை
உணர்த்தும் கேள்வி ?

வாய்ப்பே வழங்காத போது
எதற்கு வேலை வாய்ப்பு ?

மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுத் தருவது சிறந்தது ! என்று சீன
பழமொழி உண்டு .ஆனால்  இன்று ஆள்வோர் மீன் தரும் வேலையைத்தான் செய்து
வருகின்றனர் .அதனைச் சாடி ஒரு கவிதை.

வண்ணத் தொலைகாட்சி
மின்விசிறி மிக்சி கிரைண்டர் அரிசி
எல்லாம் இலவசமெனில்
எப்போது உழைக்க ?

கவிஞர் கவிவாணன் தொடர்ந்து படைத்து வரும் படைப்பாளி .கவிஞர் என்பதையும்
தாண்டி நல்ல நண்பர் .பண்பான ,அன்பான சிறந்த மனிதர். தொடர்ந்து படைக்க
வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .


கருத்துகள்