ஹைகூ வானம்.
நூலாசிரியர்
:வீ.தங்கராஜ்.
மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.
கோபுர நுழைவாயில்:
அண்டசராசரத்தின் மூலமாம் 'அணுவில்' துவங்கி அமிழ்தினும் இனிய
'தமிழ்' எனும் சொல்லில் நிறைவுறுகின்றது
கவிஞர் வீ.தங்கராஜ் அவர்களின்
ஹைகூ வானம் நூல்!மண்ணில்
இருந்து மலையேறி "குறிஞ்சிப்பூக்கள்" பறித்து அவற்றை மாலையாகத்
தொடுத்து தமிழன்னைக்குச் சூட்டி அழகுபார்த்த இக்கவி
இன்று ஹைகூ எனும் ஏணி
கொண்டு விண்ணுலகு ஏறி வானம் தொட்டிருக்கின்றார்!
வாசிப்போரின் மனதில் ஹைகூவிற்கான
ரிஷி மூலத்தையும் நதிமூலத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகின்றது இந்நூல்!
நாற்பாலா?நயம்பாலா?
ஐம்பெரும் பூதங்கள் முதற்பகுப்பாய்,ஓரறிவு முதல் ஐந்தறிவு
வரையானது இரண்டாம் பகுப்பாய்,இவ்விரண்டின் மாசு-மாசுக்கட்டுப்பாடு மூன்றாம்
பகுப்பாய்,ஐந்தறிவு மனிதனுக்கு ஆறாம் அறிவைச் சுட்டிக்காட்டுவது
நான்காம் பகுப்பாய்-என நயமாகத் தொகுக்கப்
பட்டிருப்பதால் வாசிப்போர் ஒரு
நூறு பக்கங்களையும் எவ்வித அலுப்பும் சலிப்புமின்றி
பாங்காய் கடந்து சென்றுவிடுகின்றனர் என்பது
உண்மை! நாற்பாலின் தலைப்பிற்கு ஏற்றவாறு, கவி பாடுவதில் சிறந்த நம்மவர்
நால்வர்-அயலவர் நால்வர் -என
இவ்விருவர்களின் வார்த்தைகளை ஒவ்வொரு பகுப்பிலும் வரவேற்பு
வளையமாய் வைத்திருப்பதால் அவை ஹைகூ வானத்தின்
வானவில் போல் பரிமளிக்கின்றன!
அழகியல்
உணர்வா?ஆக்கப்பூர்வ உணர்வா?
காற்றுவாக்கில் நம்மைக்கடந்து செல்கின்ற
,நாம் கண்டுகளிக்கின்ற காட்சிகளெல்லாம் இக்கவிஞருக்கு கருவாகிவிடுகின்றது!ஆம்!இவரது கரங்களில்
வானம் நெசவு செய்கின்றது!மேகம்
தலை துவட்டுகின்றது!மழைத்துளிகள் மடல் வரைகின்றன!பூக்கள்
பூஜை செய்யப்புறப்படுகின்றன!பகலவனும் பால்நிலவும் பக்கத்திற்குப்பக்கம் போட்டிபோட்டு நகர்கின்றன!இரவும் பகலும் இடையிடையே
தலைகாட்டுகின்றன!குளிர் காலம்-கோடைக்காலம்
என பருவகாலங்களோ ஆங்காங்கே பளிச்சிடுகின்றன!மொத்தத்தில் கேள்விக்குறியும் ஆச்சர்யக்குறியுமாய்,படிமமும் குறியீடுமாய்,ஹைகூ அனைத்தும் முத்திரை
பதித்துச் செல்கின்றன! சில
ஹைகூ தத்துவங்களை உதிர்க்கின்றன!ஒருசில மானிடவாழ்விற்கு எச்சரிக்கை
விடுக்கின்றன!இயற்கையை பற்பல ஹைகூக்கள் வர்ணித்துச்
செல்கின்றன!சிற்சில சமூக இழிநிலையைச்
சாடுகின்றன!மொத்தத்தில் அழகியல் உணர்வோடு ஆக்கப்பூர்வமான
உணர்வுகளையும் இந்நூல் ஊட்டிவிடுகின்றது எனலாம்!
தத்துவார்த்த
ஹைகூ ஒன்று!
"விதையின் வாழ்க்கை
மரணத்தின் தொடக்கம்
உயிர்த்தெழுதலின் அற்புதம்!(ப.45)
தற்பெருமையாளனுக்கானச்
சாட்டையடிக் கவிதை இதோ!
"நித்தம் பயணித்தாலும்
சுவடுகள் பதிப்பதில்லை
நிலவும் சூரியனும் வானில்!"
மூடத்தனத்தை
முறியடிக்கும் முத்திரை ஹைக்கூ:
அவன் தைத்த செருப்பில்
ஊரே நடக்கிறது!
அவனுடையது கக்கத்தில்!(ப.91)
எது முதல் எதுவரை?
எது முதல் எதுவரை?
சில்வண்டு முதல் சிட்டுக்குருவிவரை,கரையான்
முதல் கரடிவரை,எலிமுதல் எருமைவரை,மின்மினிப்பூச்சி முதல் வண்ணத்துப்பூச்சிவரை,புற்றீசல்
முதல் பூனைவரை -என ஓரறிவு உயிர்
முதல் ஐந்தறிவு உயிர்வரை அனைத்தும் ஆறறிவு உயிர்களுக்கு முச்சிறுவரிகளில்
பாடம் கற்றுத்தந்துவிடுகின்றன!தவளைகள் தத்துவம் பேசுகின்றன!எலிகள் எதிர்காலவாழ்விற்கு எச்சரிக்கை
விடுக்கின்றன!
பலூன் பாடம் கற்றுத் தரும்விதம்
இதோ!
"குடியரசுதின விழா!
வானில் வண்ணபலூன்கள்!
தேசிய ஒருமைப்பாடு!
கருவறை
முதல் கல்லறை வரை,பூமி
முதல் வானம்வரை-கவி வீ.தங்கராஜ்
அவர்களின் ஹைக்கூப்பயணம் தொடர்கின்றது!இதோ மண்ணிலிருந்து விண்ணிற்குப்பாயும்
கவியின் சாகசம்!
"இயங்காத விண்கலங்கள்!
விண்ணை மாசாக்கும்
வானக்குப்பை!"
ஒரே கல்லில் இரு மாங்காயாக
ஒரு ஹைகூ!
"நூலக அடுக்கில்
வரிசை கலையாமல்
முதிர்கன்னியாய் புத்தகங்கள்!"
என்று கவி கூறுவதில் வாசிப்பின்
குறைபாடும்,பெண்மை சந்திக்கும் அவலமும்
ஒற்றை வரியில் சொல்லப்பட்டுவிடுகின்றது!
பெண்மையின்
பேரவலம் சொல்விளையாடலில் இதோ!
"ஐம்பாலில்
பெண்ணுக்கு
கள்ளிப்பால்!"(ப.87)
அழகியலை
ஊட்டும் அற்புத ஹைக்கூ!
"நீலப்பட்டில் முத்துமாலை!
கூடு திரும்புகின்றன
கொக்குகள்!"(ப.32)
மனதை ஈர்த்த ஹைக்கூ!
"மௌனமாய் வந்து
நிறைய பேசியது
தகரக்கூரையில் மழை!"(ப.35)
மனமார...
ஹைக்கூ எனும் சிறகு
ஏற்று நாற்றிசையும் பறந்ததோடு மட்டுமல்லாமல்,மண்ணிலிருந்து விண்ணிற்கும் பயணித்து சமூகத்தை உற்றுநோக்கியிருக்கும் கவிஞர் வீ.தங்கராஜ்
அவர்களின் இலக்கியப்பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக