ஒரு கவிஞனின் வாக்கு மூலம் !நூல் ஆசிரியர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்,விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஒரு கவிஞனின் வாக்கு மூலம் !

நூல் ஆசிரியர் கவி
ருவிச் செம்மல் , அறிவர் ,கவிஞர் ஞான ஆனந்தராஜ் . செல் 9443855548.

விமர்சனம்
கவிஞர் இரா .இரவி .

வெளியீடு ; வனிதா பதிப்பகம் ,11.நானா தெரு ,பாண்டி பஜார் ,தியாகராயர் நகர், சென்னை .17. தொலை பேசி  42070663.

நூலின் அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .வித்தியாசமாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள்பாசமிகு  தந்தை திரு .
கே .
ஞாமுத்து அவர்களுக்கு காணிக்கையாக்கி
உள்ளார் .  

பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ
வா .மு .சேது ராமன் ,முனைவர் அவ்வை நடராசன் ,தமிழ்த்தேனீ
முனைவர் இரா .மோகன் ,மதுரை இறையியல் கல்லூரி  முதல்வர் எம் .ஞாவரம் ஆகியோரின் அணிந்துரையும் ,வாழ்த்துரையும் நூலின் சிறப்பை ஓங்கி ஒலிக்கின்றது.

நூல் ஆசிரியர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்களின் முந்தைய நூலான  கவிதைக்கூத்து நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன். நூலின் விமர்சனத்தை இணையத்தில் பதிவு செய்து விட்டு தகவல் தந்தேன். படித்து விட்டு மனம் மகிழ்ந்து பாராட்டினார் .நீங்களும் இணையம் தொடங்குங்கள் உங்கள் கவிதைகள் பல லட்சம் வாசகர்களை சென்று அடையும் என்றேன் .உடன் இணைய வேலைகளை முடித்து தொடங்கி வைக்க என்னை அழைத்தார் .அந்த மேடையிலேயே  இந்த நூலும் வெளியிடப் பட்டது. விழாவில் அணிந்துரை வழங்கிய பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா .மு .சேது ராமன் ,முனைவர் ,தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ,மதுரை இறையியல் கல்லூரி  முதல்வர்
 எம் .
ஞாவரம் ஆகியோரும் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தினார்கள்.  தேவாலய  கூட்ட அரங்கம் நிரம்பி வழிந்தது .மத போதகரின் பேனாவில் இருந்து பல முற்போக்கு கருத்துக்கள் கவிதையாக வந்துள்ளது .இவரைப் போலவே மற்ற மத போதகர்களும் படைப்பாளியாக வேண்டும் .இந்நூலில் மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடி ஒளிவு மறைவு இன்றி பதிவுசெய்துள்ளார் .
 

எதிரி
உங்களை
வீரனாக்குவான் !

எதிர்ப்பு
உங்களை
அறிவாளியாக்கும் !

அறிவை அறுவடை செய்
ஆன்றோர்கள்  மனதில்
விதைக்கப்படுவாய் !


நூல் ஆசிரியர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்கள் தன்  அறிவை அறுவடை செய்து நூலை வாசிக்கும் வாசகர்களின் மனங்களில் நல்ல கருத்துக்களை விதைத்து உள்ளார் .பாராட்டுக்கள் .மத போதகரிடமிருந்து இவ்வளவு கவிதைகளா? என்று  வியந்து போனேன் .

அரசியல்வாதிகளின் அவல நிலையை உற்று நோக்கி துணிவுடன் கவிதை வடித்துள்ளார் .

ஊழலை ஒழிப்பதற்கு
உத்தமர் வருகிறார்
போராட்ட நிதி கேட்டு !


கருப்பு மச்சம் உள்ளது என்று சொல்லி வரதட்சணை அதிகம்கேட்பவர்களுக்காக  ஒரு கவிதை இதோ !

மச்சம் உச்சம் !

கன்னத்தில் கருப்பு மச்சம்
பெற்றோருக்கு அச்சம்
அசிங்கத்தின் மச்சமல்ல
அழகின் உச்சம் !


புத்தகம் என்பது சாதாரணம்  அல்ல மிகவும் சிறந்தது உயர்ந்தது .அம்மா மனைவி  மூலம் புத்தக மேன்மை உணர்த்துகின்றார் .

புத்தகம் பேச வைக்கும் !
தாய்  பேசுகின்ற  புத்தகம் !

புத்தகம் வாசிக்க  வைக்கும் !மனைவி வசிக்க  வைக்கும் புத்தகம் !

திரைப்படத்தின் சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர் பாணியில் ஒரு கவிதை இதோ !

சம்சாரத்தைத் தொட்டால்
வாழ்க்கையில் பங்கு !
மின்சாரத்தைத் தொட்டால் 
வாழ்க்கையில் சங்கு !


சோலை ,இளைஞர் ,கொசு ,இசைச்சித்தர்  சிதம்பரம் ஜெயராமன் ,வாலிபக் கவிஞர் வாலி ,பொங்குகபுரட்சி இப்படி பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் வடித்து உள்ளார் .

தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு இருந்தும் தமிழக நெய்வேலியில் இருந்து இந்த நிமிடம் வரை  தடையின்றி  மின்சாரம் கர்னாடகத்திற்கு வழங்கி வருகிறோம் .ஆனால் நன்றி மறந்த  அவர்களோ, நமக்கு தண்ணீர் வழங்க மறுத்து வருகின்றனர் .தமிழக முதல்வரே நேரடியாக சென்று கேட்டும் மறுக்கின்றனர் .உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கினாலும் தண்ணீர் வழங்க மறுக்கின்றனர் .பேசி பயனற்று நீதி மன்றம் செல்கிறோம் .நீதிபதிகளோ பேசிப் பாருங்கள் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை.கேரளாவில் அணையில் தண்ணீர்  தேக்க மறுக்கிறார்கள் ,கர்னாடகத்தில் அணையில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள்.ஆந்திராவில் புதிய அணை கட்டி தண்ணீர் தடுக்க துடிக்கிறார்கள் .தொடர்ந்து அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து, தேசியத்தை கேலி கூத்தாக்கி வருகின்றனர் .தண்ணீருக்காக உலகப்  போர் வரும் என்று ஒரு ஆய்வு சொன்னது ,ஆனால் தண்ணீருக்காக உள்  நாட்டுப்  போர் வந்துவிடுமோ ? என்று அஞ்ச வேண்டி உள்ளது .இதை எல்லாம் பார்த்து உணர்ந்து ஒரு கவிதை .

பாரதியே !

நதிகளைப் பற்றிப் பாடினாய் -அதின்
விதிகளைப் பார்த்தாயா ? நீ பாடலுக்குள்
அக்கினியை வைத்தாய் - இப்போது
அக்கினிக்குள்  பாடலைப் போட்டு விட்டார்கள்
நதிகள் மனித வாழ்வுக்கு ஆதாரம்
மனிதனோ நதிகளுக்கு சேதாரம் !

விதியை நம்பாதவன் நான். எனவே ,விதி அல்ல அண்டை மாநிலங்களின் சதி என்பது என் கருத்து .


வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பன் .கூடவே இருந்து குழி பறித்து காட்டிக் கொடுக்கும் துரோகம் இன்று தொடர்கின்றது .
எட்டப்பன்களை திரைப்படத்திலும் ,நம் நாட்டிலும்,இலங்கையிலும்  பார்த்தோம்.அதனை உணர்த்திடும் கவிதை .

எட்டப்பன் பெயரை எவரும் சூட்டிக் கொள்வதில்லை !
ஆனால் செயல்பாடுகளில் அவனை விஞ்சும் அநேகரை
க் காணலாம் !

அயல்நாடுகளில்நேரத்தை பொன்னுக்கும்  மேலாக மதிக்கின்றனர் .ஆனால் நம் நாட்டில் நேரத்தை சிரிதும் மதிப்பதே இல்லை .சில முக்கிய புள்ளிகள் விழாவிற்கு தாமதமாக செல்வதை வாடிக்கையாக கொண்டவர்களும் உண்டு. பார்வையாளர்கள் அனைவரின் நேரத்தையும்  வீணடிக்கிறோம் என்பதை உணருவதே இல்லை .அவர்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு கவிதை !

தாமதம் !

இந்த வார்த்தை சோம்பேறிகளின் சொர்க்கம் !
எத்தனைமுறை எப்படித்தான் சொன்னாலும்
வேகம் என்பதற்கு விளக்கம் கேட்
ப்பார்கள் !
தாமதம்  செயல்பாடுகளின் சுக்கம் !
இதனால் வாழ்க்கையே கனக்கும் !

இன்று மனித வாழ்க்கையில் நீதி மன்றம் ஒரு அங்கமாகி விட்டது ,முன்பு பெரியவர்கள் சொல்வார்கள் நீதி மன்றம் செல்லக் கூடாது என்று .
ஆனால் இன்று குடும்ப பிரச்சனை தொடங்கி
,ஊர் பிரச்சனை,மாநில பிரச்சனை,பிற நாட்டு பிரச்சனை வரை  நீதி மன்றம் செல்ல வேண்டிய அவல நிலை . காரணம் மனித மனங்கள் சுய நலத்தால் சுருங்கி விட்டதே .அதனை உணர்த்த எள்ளல் சுவையுடன் ஒரு கவிதை .

இயேசுவே பிறப்பதற்கு இடம் இல்லை யென்று  பின் வாங்கி விடாதே !
நீதி மன்ற வாசல்கள் காத்திருக்கின்றன அங்கு வந்து பிறந்து விடு !
ஏனென்றால் ஆலயத்திற்குப் போவதை விட அங்குதான் அடிக்கடி
போகிறோம் !


நூல் ஆசிரியர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்  அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .சில கவிதைகள் வசன நடையில் உள்ளது .அடுத்த நூல் எழுதும் போது  கவித்துவம் கூட்டுங்கள் .தொடர்ந்து எழுதுங்கள்.
 --

கருத்துகள்