மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் !

நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ 

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மணிமேகலைப் பிரசுரம் தணிகாசலம் சாலை ,சென்னை 
விலை ரூபாய் 15.

நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ.  அவர்கள் குழந்தை நாவல் ,குழந்தை காவியம் ,குழந்தைப் பாடல் ,கட்டுரைகள் ,வைரவரி சிந்தனைகள் என எழுதி வரும் பன்முக ஆற்றலாளர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான   ஹைக்கூ 330 கவிதைகளின் தொகுப்பு நூல் இது .மணிமேகலைப் பிரசுரம் நிறுவனம் மிக நன்றாக அச்சிட்டுள்ளனர்  .மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூலின் தலைப்பு இந்த நூலை படிக்கும் வாசகர்களின் மனதில் ஹைக்கூ மழைத் துளிகள்.பாராட்டுக்கள்.

பற்றிக் கொண்டேன்
தொற்றிக் கொண்டது
நோயல்ல ..விவேகம் !

நாம் படிக்கும் நூல்களில் உள்ள மந்திரச் சொற்கள் சில நம் மனதை பற்றிக் கொள்ளும் .பற்றிக் கொண்டதை கடைப் பிடித்து நடந்தால் விவேகம் பிறக்கும் என்பதை ஹைக்
கூ மூலம்  உணர்த்தி உள்ளார் .

சபரிமலை விரதம் முடிந்து
அவச
மாய் ஓடினார் பக்தர்
மதுக்கடைக்கு !
மதுக் கடையை அரசு ஏற்று வீதி தோறும் அரசு மதுபானக் கடை என்று விளம்பரங்கள் ."அதி நவீன அரசு பார் " விளம்பரப் பலகைகள் .செய்தித்தாள்களில் விற்பனை வளர்ச்சி அபாரம் என்று வளர்ச்சி விகித புள்ளி விபரங்கள்.இது சமுதாய வீழ்ச்சி புள்ளி விபரங்கள் என்பதைஎண்ணி மனித நேய ஆர்வலர்கள்தான் வருந்துகின்றோம் .னால் குடிமகன்கள் எந்தக் கவலையும் இன்றி "குடி குடியைக் கெடுக்கும்" என்பதை படித்து விட்டு குடித்து அழிகிறார்கள் .

வீச்சரிவாள் கம்புகளுடன்
உச்சத்தில் சாதிச்சண்டை
விளையாடும் இருசாதிக் குழந்தைகள் !


குழந்தைகள் உயர்ந்த உள்ளத்துடன் விளையாடுகின்றன .ஆனால் பெரியவர்கள் சாதி வெறியோடு மோதி வீழ்கின்றனர் .பகுத்தறிவைப் பயன்படுத்தாது விலங்காகி விடுகின்றனர் .

பாடம் நடத்தும் பேராசிரியர்
பாடம் கற்கிறார் வீட்டில்
மனைவியிடம் !

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர்கள் எவரும் இல்லை .பேராசிரியருக்கு தெரியாததை மனைவியிடம் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை .


கிளை தாவி பழித்து
சொறிந்து  வால்  பிடித்து
அடடா ! மனிதர்களாய் மந்திகள் !

இந்தக் கவிதை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் சொல்லாமலே அரசில்வாதிகள் நினைவிற்கு வந்து விடும் .மந்திகள் ! என்று இருந்தது  மந்திரிகளோ என்று திரும்பவும் படித்துப் பார்த்தேன் .


இடம் வாங்கினார்
சிறு பள்ளி உருவாக்கினார்
இன்று பெரும் புள்ளி !

அன்று அரசிடம் மட்டுமே இருந்த  கல்வித்துறை தனியாரிடம் தாரை வார்த்த காரணத்தால், இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் பகல் கொள்ளை அடித்து வருகின்றன .தாராள மயமாக்கப் பட்டதால் தாராளக்
கொள்ளை நடக்கின்றது .அதனை உணர்த்தும் ஹைக்கூ .

தெருவிற்குத் தெரு ஆங்கிலப் பள்ளிகள்
தடுக்கி விழுந்தால் மருத்துவமனை
நவீன பாரதம் !

நாட்டுநட 
ப்பை உணர்த்திடும் ஹைக்கூ .

பேருந்தில் மாணவர்கள்
கூச்சலும்  கும்மாளமாய்
 ஓ .. சட்டசபைக்கு இப்போதே !
சட்டசபையில் ஒரே கூச்சல் சண்டை சச்சரவுகள் நடுக்கும் கொடுமையை, இனியாவது சட்டசபையில்  உருப்படியாக பேசி  மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் .என்பதை  எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார் .

கிரகங்களைப்  படித்தறிந்த
கல்லூரிப் பேராசிரியை ..சுற்றுகிறார்
கடமையாய் நவகிரகத்தை !


படித்த பெண்களும் மூட நம்பிக்கையில் மூழ்கியுள்ள மடமையைச் சாடி எழுதியுள்ள ஹைக்கூ நன்று .

அடிக்கடி அடுப்படிகள் எரியாத
குடிசைகள் எரிந்தன அடிக்கடி
சாதிச் சண்டை !
சாதிச் சண்டையின் காரணமாக மனிதாபிமானமற்ற  முறையில் குடிசைகளை எரிக்கும் கொடுமை .கணினி யுகத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம் என்பதை நன்கு   உணர்த்தும் ஹைக்கூ.

எரி  வாயு விலை உயர்வு
செய்தி கேட்டு
எரிந்தது வயிறு அவளுக்கு ..


மைய அரசு எரி  வாயு விலை உயர்த்தியது மட்டுமன்றி வருடத்திற்கு எண்ணிக்கை ஆறு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்து வயிற்றில் அடித்து உள்ளனர் .எந்த விலை உயர்வும் ஆள்வோரின் திறமையின்மையை வெளிச்சம் காட்டி வருகின்றது .மக்களின் மனக் குமுறலை  ஹைக்கூவாக்கி உள்ளார்.

 
ஜப்பானியக் கவிஞர்கள் போல இயற்கையும் ஹைகூவாக்கி உள்ளார் .

நேற்று பெய்த மழைக்காக
இந்திரா குடை பிடிப்பது ?
ஓ ! காளான் !

புச்சிகளுக்குமா  இங்கே
சிறைத் தண்டனை ?
சிலந்தி வலை !

எந்தப் பறவை இட்ட
கருப்பு முட்டை இது ?
ஓ .. மலை !


நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம்  நீ  அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .நல்ல சிந்தனை விதைக்கும்  ஹைக்கூ கவிதைகள் .கவி மழையாக பொழிந்துள்ளது .

கருத்துகள்