இந்தியக் கலை வரலாறு ! நூலாசிரியர்கள் ,பேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P.முத்துக்குமரன் .. விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இந்தியக் கலை வரலாறு !

நூலாசிரியர்கள் ,பேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P.முத்துக்குமரன் .
.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நியு செஞ்சுரி புக்  ஹவுஸ் . விலை ரூபாய் 350.

பேராசிரியர் DR.M. சாலமன் பெர்னாட்ஷா பற்றி அறிவேன் .இவர் சிறந்த மனிதர் முனைவர்  வெ.இறையன்பு அவர்களின் இனிய நண்பர் .சந்தித்து உரையாடி இருக்கிறேன் .நிறை குடம் தளும்பாது என்பதற்கு இலக்கணமானவர் .மிகவும் அமைதியான நல்ல மனிதர் .அறியாத துறை இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து துறையும் அறிந்த வல்லுநர் . அவர் பேராசிரியர் P.முத்துக்குமரன்அவர்களுடன்  கூட்டணி வைத்து உருவாக்கி உள்ள அற்புத நூல் .கலைக் கூட்டணி தந்துள்ள "இந்தியக் கலை வரலாறு ! "ஆறு போல் படிக்கும் வாசகர்களின் உள்ளங்களில் பாய்கின்றது .நியு செஞ்சுரி புக்  ஹவுஸ் நிறுவனத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .

இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் குடைவரைக் கற் கோவில்கள் ,குகைக் கோயில்கள் ,மலைக் கோவில்கள் அவற்றின் சிற்பச் சிறப்புக்கள் ,கோயில் நிர்மாணித்த மன்னர்களின் விபரங்கள், கலையின் வளர்ச்சி ,வேறுபாடு ,நுட்பம் போன்ற தகவல்களுடன் தகவல் களஞ்சியமாக ,வரலாற்றுப் பொக்கிசமாக வந்துள்ள சிறப்பான நூல் .இந்நூல்    வரலாற்று மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் சிறந்த நூல் .இந்தியாவின் கலை பற்றி விரிவாக புகைப்படங்களுடன் தம்ழில் வந்த ,முதல் நூல் என்று சொல்லும் அளவிற்கு அற்புதமாக உள்ளது .

29.அத்தியாயங்கள் உள்ளது .அட்டை முதல் அட்டை வரை இந்தியாவின் கலைத் திறமையை பறை சாற்றும் விதமாக உள்ளது .நல்ல நடை கவித்துவமான சொற்கள் .படிக்க படிக்கஅதில் குறிப்பிட்டுள்ள இடங்களை சென்று பார்க்க வேண்டும் என்றஆவலைத் தோண்டும் வண்ணம் உள்ளது .முதலில் இயற்கையை வழிபட்டு வந்தார்கள் ,பிறகுதான் சிலை வடிவங்கள் தோன்றின .மாமல்லபுரம் சிலைகள் சிற்பத்தின் நுட்பம் மட்டுமல்ல மன்னனின் வரலாறும் சொல்லி நிற்கின்ற உண்மை .இந்தியா முழுவதும் அந்தந்தப் பகுதி பாண்பாடு நாகரீகம் அதற்கு ஏற்ப வடிக்கப் பட்ட சிலைகளின் வரலாறு கூறும் நூல்.  மதுரை மீனாட்சி கோயிலில் உள்ள சிலைகளை உற்று நோக்கினால் உண்மையில் ஒரு மனிதன் நிற்பதுபோன்று கை கால்கள் முகம் யாவும் உயிரோட்டமாக இருக்கும் .தமிழர்களின் சிற்பத்  திறமையை பறை சாற்றும் அற்புத  சிலைகளை காணலாம் .உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் சிலைகள் மதுரை மீனாட்சி கோயிலில் உள்ளது .

ஆதி மனிதன் வேட்டைக்கு பயன்படுத்திய கல் ஆயுதங்கள் ,பாறை ஓவியங்கள் ,ஹரப்பா நாகரீக முத்திரைகள் ,அகழ்வாய்வுக் களம் அனைத்தும் புகைப்படங்களுடன் சான்றுகளுடன் வரலாறு எழுதி உள்ளனர் . வட இந்தியாவில் உள்ள லோமாஸ் ரிஷி - குடைவரை புகைப்படம் ,உள் கட்டமைப்பு வரைபடம் யாவும் நூலில் உள்ளது .நேரில் கண்டு களித்த உணர்வை தருகின்றது .

அஜந்தா ,நாசிக் ,பேத்ஷா  போன்ற இடங்களில் உள்ள கலை வடிவங்கள் பற்றி மிக வடிவாக எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .ஹாதி கும்பா  கல்வெட்டு உணர்த்தும் வரலாறுத் தகவல்கள் நூலில் உள்ளது .தனித்துவமான உருவ சிற்ப வடிவிற்கு வித்திட்ட காந்தார ,மதுரா பாணி ஷ்தூபி வழிபாடு இப்படி பல தகவல்கள் நூல் முழுவதும் உள்ளது .நூலாசிரியர்கள் ,பேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P.முத்துக்குமரன் இருவரது கடின உழைப்பை உணர முடிகின்றது .எல்லா இடங்களுக்கும் சென்று  பார்த்து ஆயிந்து ,ஆராய்ந்து , புகைப்படங்கள் எடுத்து ஆவண படுத்தி உள்ளனர் .பாராட்டுக்கள்.
பதச் சோறாக நூலில் உள்ள வைர வரிகள் .
" கல் வேலியின் தூண்கள் கிட்டத்தட்ட 10 அடி உயரமுள்ளவை
தூணின்   நடுவில்  முழுமையாக மலர்ந்த தாமரைகளும் செதுக்கப்பட்டுள்ளன .கலங்கிய நீரின் மேல்  மட்டத்தில் தன் முழு அழகு காட்டும் தாமரை மலரானது தூய்மைக்கும் ,தத்துவம் கடந்த நிலைக்கும் உருவகமாகும் ."   

இப்படி கவித்துவமான வர்ணனைகள் மூலம் படிக்கும் வாசகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் .


புத்தரின் பல்வேறு சிலைகளின் புகைப்படங்கள் அதற்கான விளக்கங்கள் .மிக நன்று .ஹார்வான் இரும்புத்தூண் புகைப்படம், அதன் விளக்கம் ,லாட்கான் கோயிலில் உள்ள காதல் தம்பதியர் சிலை புகைப்படம் . இப்படி நூல் முழுவதும் உள்ள கலைகள், சிலைகள் பற்றிய தகவல்களை திகட்டாத அளவிற்கு மிகவும் சுவையாக வழங்கி உள்ளனர் .தெளிந்த நீரோடை போன்ற மிக நல்ல நடை .
வாதாபிக் குடைவரைகள் புகைப்படங்கள் ,குடைவரைகளின் அடிப்படை அம்சங்கள் ,மண்டபத் தூண்கள் குடைவரை 1 மற்றும்
குடைவரை 2 விளக்கமாக நூலில் உள்ளது .

குஹாயன குடைவரைக் காவியங்கள் அஜந்தா குடைவரைகள்  ,எல்லோராவின் மஹாயானக்   குடைவரைகள் ,பட்டடக்கல் பாபநாதர்   கோயில் புகைப்படங்கள் ,மண்டபத்தின்  உட்புற விபரங்கள் இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளது . சங்கமேஸ்வரர் கோயில் ,கைலாசநாதர் கோயிலில் உள்ள இராமாயண சிற்ப்பப்பலகை  ,ஜைனக் குடைவரைகள் .வட மாநில கோயில்களில் உள்ள சிற்பங்கள் பற்றிய சிறப்பை விளக்கிடும் முழுமையான நூல் .பாராட்டுக்கள் .

தமிழகக் கலைகளின் வித்து அத்தியாயத்தில் பல்லவர்  வரலாறு ,அவர்கள் காலத்தில் வடிக்கப்பட்ட அற்புத சிற்பங்களின் விபரங்கள் உள்ளது . இந்தியாவில் எந்தக் கோயிலிலும் இல்லாத அளவிற்கு  சிற்பங்கள் நிறைந்த கோயில் மதுரை மீனாட்சி கோயில்.இந்த நூலில் மதுரை மீனாட்சி கோயில் பற்றி தனி அத்தியாயம் சிற்பங்கள் பற்றி இட்டு விரிவாக எழுதி இருக்கலாம் .

கற்சிலைகள் மட்டுமன்றி உலோகச் சிலைகளின் புகைப்படங்களும் ,விளக்கங்களும் நூலில் உள்ளது .தகவல்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன பாராட்டுக்கள் .


இமயம் ,இமாச்சல பிரதேசம் ,சோம்நாத்பூர் கோயில் ,குதிரையில் ஆரோகணிக்கும் சூரியக்கடவுள் புகைப்படம் ,தேர் ,மற்றும் கோயில்களின் சிறப்புகள் என யாவும் அற்புதம் .இந்த நூல் கலை ரசிகர்களுக்கு கற்கண்டு .வரலாறு மாணவர்களுக்கு தகவல் களஞ்சியம் .குபுரங்களின் புகைப்படங்கள் அதன் வடிவமைப்பின் சிறப்பு .கட்டிட அமைப்பு ,ஓவியங்கள்  அதன் வகைகள் ,ராஜஸ்தானி சிற்றோவியங்கள், யுந்தி பாணி ,கோட்டா பாணி,கிஷன்கர் பாணி ,பசோ    பாணி,கங்ரா பாணி,கார்வால் பாணி என ஓவிய வைகைகள் புகைப்படங்கள் அதற்கான விளக்கங்கள் மிகச் சிறப்பு .

நூலில் இறுதியில் ,நூல் உருவாகத் துணை புரிந்த குறும்படங்கள் , இணைய தளங்கள் ,பெருந்துணை புரிந்த நூல்களின் பட்டியல் யாவும் மறக்காமல் பதிவு செய்தது நன்று .இந்த நூல் படித்து முடித்தவுடன் இந்தியக் கலை வரலாறு அதில் முதன்மையான இடம் தமிழக கலைக்கு உண்டு .ஆயிரம் கலைகள் உலகில் இருந்தாலும் தமிழர்களின் கலைக்கு ஈடு இணை கிடையாது .உலகின் முதல் மொழி தமிழ் ! உலகின் முதல் மனிதன் தமிழன் ! உலகின் முதல் கலையும் தமிழர் கலையே ! என்ற உண்மைகளை   உறுதி செய்து கொண்டேன் .  நூலாசிரியர்கள், பேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P.முத்துக்குமரன் இருவருக்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .இந்த நூலை முதுகலை வரலாற்று மாணவர்களுக்கு பாட நூலாக வைக்கலாம் .நூலில் சிறப்பு முழுவதும் எழுதி விட்டேன் .நூலில் ஒரு சிறு குறை உள்ளது அதையும் எழுதி விடுகிறேன் .538 பக்க நூலில் " லி "என்ற எழுத்து வரும் இடங்களில் எல்லாம் --- கோடு மட்டுமே அச்சாகி உள்ளது படிக்கும் வாசகர்களுக்கு "லி " சேர்த்துப் படிக்கும்  பயிற்சி தருவது போல உள்ளது .அடுத்த பதிப்பில் கவனமாக " லி "சேர்த்து அச்சிடுங்கள் .

கருத்துகள்