மொழியின் கதவு நூல் ஆசிரியர் கவிஞர் மஞ்சுளா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மொழியின் கதவு

நூல் ஆசிரியர் கவிஞர் மஞ்சுளா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

பாவை பதிப்பகம் ஜானி ஜான் கான் சாலை ,இராயப்பேட்டை ,சென்னை .14    விலை ரூபாய் 40


நூலின் அட்டைப்படம் வடிவமைப்பு மிக நன்று .அட்டையைப் பார்த்ததும் நூல் வாங்க வேண்டும் .என்ற எண்ணம் விதைக்கும் விதமாக உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் மஞ்சுளாஅவர்கள் மதுரையில் கவியரங்கங்களில் கவிதை பாடுபவர் .சிறந்த படைப்பாளி .கலை  இலக்கியப் பெருமன்றம் மதுரையில் பொறுப்பில் உள்ளவர் .தேநீர்  காலம் ,தீ மிதி என்ற இரண்டு கவிதை நூல்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் .மூன்றாவது கவிதை நூலாக   மொழியின் கதவு வடித்துள்ளார் .மொழி பெயர்ப்பு படைப்புக்காக சாகித்ய அகதமி விருது பெற்ற  முனைவர். பா .ஆனந்தகுமார் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக அழகு சேர்க்கின்றது .  

மொழியின் கதவு என்ற நூலின் பெயரே சிந்திக்க வைக்கின்றது .

வரையப்படாத சித்திரம் !
குதிரைகளின் குளம்படிகளாக உன்னை
என்னுள் பதிந்திருக்கும் படைப்புப் பிம்பமாய் நீ ...
காமப் படாத கண்களில்
ஒளித்து வைத்திருக்கும் ரகசியப் பாடல் .

சில பெண் கவிஞர்கள் உடல் மொழி என்று பச்சையான, கொச்சையான சொற்களைப் பயன்படுத்தி எழுதி விட்டு அதனை
நியாயப்படுத்தி பேசியும் வருகின்றனர் .பெண்ணுரிமையை தவறாகப்புரிந்து கொண்டவர்கள் அவர்கள் .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் மஞ்சுளா காதலை மிக கண்ணியமாகவும், மென்மையாகவும், மென்மையாகவும் கவிதையில் பதிவு செய்துள்ளார் .பாராட்டுக்கள் .

சமுதாய சாடல்களும், இயற்கை நேசமும் ,பாசமும் கவிதைகளில் பதிவாகி உள்ளது .

அந்நியன் !
ஈன்று புறம் தரும்
ஒப்பில்லா 
இயற்கையை புறம் தள்ள
நான்கு
சுவர்களுக்குள்
வாலாட்டும் நாயாய்
இன்றைய மனிதன் .

பயணித்து இயற்கையை ரசிக்க வேண்டும் .ருசிக்க வேண்டும் என்ற உணர்வை உணர்த்துகின்றது கவிதை .

நுரைகள் !
கூடாரங்கள்  போட்டு
குழுமியிருக்கின்றன
வாழ்வின் வண்ணங்கள்
ஒவ்வொரு
கூடாரமும்    
தன் வண்ணம் விற்க .

இந்தக் கவிதையை
கூர்ந்து  படித்தால் அரசியல்வாதிகளின் சாயம் வெளுக்கும் வண்ணம் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் வியாபாரிகள் ஆகி விட்ட அவலத்தை உணர்த்துகின்றார் .
பிள்ளைப்பிராயம் என்ற கவிதை படிக்கும் போது படிக்கும் வாசகர்களை  பிள்ளைப்பிராயம் அழைத்து  செல்வதாக உள்ளது .பாராட்டுக்கள் .

லிப்புலம்பல்கள் !
நீண்ட தன்னிச்சையான 
லிப்புலம்பல்களுக்குள்
இறுகிக் கெட்டித்திருக்கும்
மவுனம்      தாண்டி புறப்படுகின்றன
எல்லா குரல்களும் .


சில கவிதைகள் இரண்டாம் முறை படித்தால்தான் நன்கு விளங்கும் .அடுத்த நூல்களில் சற்று எளிமைப் படுத்தி எழுதுங்கள் . புதுக்கவிதை என்றால் இலக்கணம் தேவை இல்லை ,ஆனால் எதுகை மோனை இருந்தால் படிக்க சுவை கூடும்.
வாசகருக்கு எழுதியவரே வந்து விளக்கம்  சொன்னால் மட்டுமே விளங்கும் .புரியாத புதிராக ஒரு சில கவிஞர்கள்  கவிதை எழுதி வருகின்றனர் .ஆனால் உங்கள் கவிதை அப்படி  இல்லை .புரிந்து விடுகின்றது .


காதல் கவிதைகளில் எளிமை இளமை இனிமை புதுமை உள்ளது .
தூரத்துப் பச்சை !
உன் காதல் பிரிவின் கணங்களில்
எரியும் கங்குகளாய் கனன்று
வெதும்பித் திரிகிறது எனக்குள்
தூண்டில் மீனாய்
துடித்திருக்கும் உயிர் உலர்ந்து
உலகம் நழுவிப் போகிறது .


இமயமலை செல்லும் போலிச் சாமியார்களின் முகத்திரை கிழிக்கும் கவிதை ஒன்று

கடவுளின் நிறுவனங்கள் !

மலைகளை உடைத்து கற்களை சுமந்து வந்த
மனிதர்கள் மாண்டு போனார்கள்
உளியில் விழிகளைப் பொறுத்தியவர்கள்
அவைகளைப் போலவே சிதைந்து போனார்கள்
கல்லில் தெய்வத்தை கண்டவர்கள்
இன்று கல்லையே காணமல் தேடுகிறார்கள்
இருந்த மலை
களையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு
இன்று இமய மலைக்குப் பயணம் போகிறார்கள் .
கடவுளை  புராணம் உருவாக்க
கடவுளை   காதைகள் வளர்க்க
கடவுளை   நிறுவனங்கள்  தொழிலாக்க .

பகுத்தறிவு போதிக்கும் விதமாக, விழிப்புணர்வு விதைக்கும் விதமாக , மூடநம்பிக்கைகளை சாடும் விதமாக கவிதை உள்ளது .பாராட்டுக்கள் .பகுத்தறிவு பாடும் பெண் கவிஞர் என்பதால் கூடுதல் பாராட்டுக்கள் .

வாழ்க்கையில் பார்த்த ,உணர்ந்த, பாதித்த விசயங்களை உற்று நோக்கி கவிதைகள் வடித்துள்ளார் .
கவிஞர் மஞ்சுளா போன்று பல கவிஞர்கள் உருவாக வேண்டும் .பெண் கவிஞர்களின் எண்ணிக்கை  உயர வேண்டும் .கவிஞர் மஞ்சுளா வளரும் கவிஞர் .வளரும் கவிஞரை வளர்த்து விடும் நோக்கத்துடன் இந்த நூலை தரமாக பதிப்பித்த பாவை பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் . கவிஞர் மஞ்சுளா அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் .வாழ்த்துக்கள் .



கருத்துகள்