நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி vaduvursivamurali@gmail.com
விமர்சனம் கவிஞர் இரா .இரவி eraeravik@gmail.com
விலை ரூபாய் 50
வெளியீடு
இருவாட்சி
41.கல்யாணசுந்தரம் தெரு
பெரம்பூர் .சென்னை .11
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி தமிழாசிரியராக மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதைகள் படைப்பது பாராட்டுக்குரிய பணி.
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்களின் முதல் தொகுப்பு நூல். முத்தாய்ப்பான நூலாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .அட்டைப் படத்தில் வருகை பற்றி அறிவுக்கும் விதமாக கத்தும் காகம் புகைப்படம் வருகை பற்றிய அறிவிப்பு என்ற தலைப்பிற்கு பொருத்தம்.நூலை தந்தைக்கு காணிக்கை
ஆக்கிய விதம் சிறப்பு .தஞ்சாவூர் நா .விச்வநாதன் அணிந்துரை மிக நன்று .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பிரசுரம் செய்த அனைத்து இதழ்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .
முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது .
எல்லோருக்கும் பெய்யும் மழை !
ஏந்திக் கொள்கிறார்கள் சிலர் .வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர் .
வேறு வழியின்றி
ஒதுங்கிக் கொள்கிறார்கள் சிலர்.
ஒத்துக் கொள்ளாதென
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள் .
சாக்கடையில் விழுந்து சங்கமமாகின்றன சில .
ஆனாலும் எபோதும்போல
இன்னமும் எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான் இருக்கிறது
மழை !
திறமை பற்றி எள்ளல் சுவையுடன் வடித்த கவிதை மிக நன்று ரசித்துப் படித்தேன் .
திறமை !
வருடக்கணக்கில் பழகியும்
வாய்க்கவில்லை எனக்கு .
ஒற்றை ரூபாயைப் பெற்றுக் கொண்டு
மனிதர்களை
எடைபோட்டு விடுகிறது
எந்திரம் .
பகுத்தறிவு பற்றி சிறப்பான கவிதை நூலில் உள்ளது .
முளைக்கும் விஷம் !
ஈரோட்டுக் களைக்கொல்லியை
மீறி மீண்டும் மீண்டும்
முளைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன
விஷச்செடிகள்.
ஓரிரு
முள் களைதல் அல்ல
வேரடி மண்ணோடு
ஆணிவேரை
அகழ்தலே
அறிவுடைமை !
முள்வேலியில் வாடும் நம் உறவுகளுக்காக மிகச் சிறந்த கவிதை கடவுளை பார்த்து கேள்வி கேட்கும் பாணியில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .கொடுமை கண்டு கொதிப்பவனே உண்மையான படைப்பாளி . நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி உண்மையான படைப்பாளி என்பதை மெய்ப்பிக்கும் கவிதை இதோ !
இதற்கு மேலும் !
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும்
கருவுக்குள் இருக்கும் சிசுவுக்கும்
உணவளிப்பதாய்ச் சொல்லப்படுபவனே !
முள்வேலிக்குள் இருப்பவர்களை
உனக்குத் தெரியாதா ?
ஒவ்வொரு தானியமணியிலும்
உண்பவர் பெயரை
எழுதுபவனே !
இவர்கள் பெயர் எழுதுகையில்
உன் பேனா மை
தீர்ந்துவிட்டதா ?
ஏழையின் சிரிப்பில்
இருப்பாயாமே
நாங்கள் கண்டதில்லை
மனித மிருகத்துடன்
கைகுலுக்கிச்
சிரிப்பவர்கள் முகங்களில்தான்
குரூரமாய்க் காட்சியளிக்கிறாய் நீ .
அறியாமல் செய்கிறவர்களை
மன்னிப்பவனே
அறிந்தே செய்பவர்களை
என்ன செய்யப் போகிறாய் ?
அநியாயம் நடக்கும் போதெல்லாம்
அவதாரம் செய்பவனே !
இதற்குமேலும்
என்ன நடக்கவேண்டுமென
எதிர்பார்க்கிறாய் நீ ?
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி கவிதை உலகிற்கு தன் வருகை பற்றிய அறிவிப்பு செய்யும் விதமாக இந்த நூல் வந்துள்ளது .உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .உண்மை கவிதை என்று பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .
முரண் !
ஒவ்வொரு ஊரிலும்
தென்படவே செய்கிறது
மாடி வீடுகளுக்கு
நடுவே
ஒரு குடிசை
அல்லது
குடிசைகளுக்கு
நடுவே
ஒற்றை மாடி வீடு .
அரசியல் பற்றி நாட்டு நடப்பு பற்றி தேர்தல் பற்றி மிக நுட்பமாக சிறு கவிதை மூலம் சிந்திக்க வைக்கிறார்.
தேர்தல் காற்று !
நேற்று வீசிய
தேர்தல் காற்றில்
குப்பைகள் எல்லாம்
கோபுர உச்சியில்
அடுத்த காற்றுக்குக்
காத்திருந்தோம்
இப்போது
வேறு குப்பைகள் .
புற்று நோய் வரவழைக்கும் சிகரெட் பற்றி சிந்திக்க வைக்கும் கவிதை இதோ !
சிகரெட் !
தொட்டவனைத்
தொலைத்துவிடத்
தன்னையே
எரித்துக் கொள்கிகிறது
இந்தத்
தற்கொலைப்படை !
நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்கள் தான் கண்ட உணர்ந்த அனுபவங்களை கவிதையாகி வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார் .முதல் நூலோடு பலர் நின்று விடுகின்றனர் .தொடர்ந்து எழுதி அடுத்த அடுத்த நூல்களை வெளியிட வேண்டும் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக