இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

நூல்  ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விஜயா  பதிப்பகம் கோவை     விலை ரூபாய் 80


காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் கவிதை நூல்கள் யாருடையது என்று புத்தகக் கடைக்காரகளைக் கேட்டால் அனைவரும் சொல்லும் சொல் "கவிஞர் தபூ சங்கர்நூல்கள்தான் "கவிஞர் தபூ சங்கர் காதலை நேசிப்பதைப்  போலவே காதலர்கள் காதலுக்கு அடுத்தபடியாக தபூ சங்கர்  நூல்களை நேசிக்கிறார்கள் என்றால் மிகை அன்று .அதனால்தான் மிகக் குறுகிய  காலத்தில்   பல பதிப்புகள் வந்துள்ளது .நூலின் பெயர்களும் வித்தியாசமாக சூட்டுவதில் வல்லவர்  தபூ சங்கர் .  அட்டைப்படங்களும் , உள் புகைப்படங்களும் ,அச்சு வடிவமைப்புகளும் நூலை கையில் எடுத்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வண்ணம் மிக நேர்த்தியான வடிவமைப்பு விஜயா பதிப்பகத்திற்குப்  பாராட்டுக்கள் . 

நூலின் சமர்ப்பணமே வித்தியாசமாக உள்ளது .இப்படி ஒரு நூல் சமர்ப்பணம்  நான் இது வரை எந்த நூலிலும் படித்து இல்லை .

ஒரு வேளை
இவன் நம்மைக்
காதலிக்கிறானோ என்று
நீ எப்போதாவது
நினைத்திருந்தால்
அந்த நினைப்புக்கு
இந்த நூல் சமர்ப்பணம் . 
       

கவிஞர் பழனி பாரதியின் அணிந்துரை அழகுக்கு மேலும் அழகு !

காதல் கண்ணில் தொடங்கும் என்பார்கள் இந்த நூலில் கண்கள் பற்றிய கவிதையோடு இந்த நூல் தொடங்குகின்றது .

சின்ன மீன்களை
பெரிய மீன்கள்
தின்று விடுவது மாதிரி
என் கண்களைத் தின்றுவிடுகின்றன
உன் கண்கள் .

காதலித்த அனைவரும் அறிந்துக் கொள்ளும் அற்புத வரிகள் .பாராட்டுக்கள் 
.

இந்த உலகத்தில்
எத்தனையோ பேர்
கடவுளின் அவதாரமாகப்
பிறந்ததாக
இலக்கியங்கள்
சொல்கின்றன
ஆனால் நீ ஒருத்திதான்
காதலின் அவதாராமாகப்
பிறந்தவள் !   


இந்தக் கவிதைப் படிக்கும் ஆண்களுக்கு அவரவர் காதலி நினைவிற்கு உறுதி என்று அறுதி இட்டுச் சொல்லலாம் .

கவித்துவம் குறைவாக வசன நடையில்  உள்ள சில பக்கங்களைத் தவிர்த்து இருக்கலாம் .

எள்ளல் சுவையுடன் ஒரு கவிதை உங்கள் ரசனைக்கு .

கல்லூரிக்குள் இருக்கும்
ஓடைப்பிள்ளையார் கோயிலுக்கு
நீ போவதைப் பார்த்தாலே
எனக்குப் பயமாய் இருக்கும்
தன தாயைப் போல
பெண் வேண்டும் என்று
ஆற்றுக்கு ஆறு
உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்
நீதான் அந்தப் பெண் என்று
சொல்லிவிடுவாரோ என !

  
விழி தானம் விதைக்கும் விதமாக ஒரு கவிதை மிக நன்று .

உனது கண்களை
ஒரு சின்னஞ்சிறு
பெண்ணுக்கே
தானமாக
வழங்க வேண்டும் என்று
பதிவு செய்
அந்தக் கண்கள்
அடுத்த தலைமுறையில்
என்னை மாதிரி
இன்னும் ஒரு காதலன்
உருவாகட்டும்  !

 
இந்தக் கவிதை கவிஞராக இருக்கும் ஒவ்வொரு காதலனின் உள்ளத்து உணர்வைப் படம் பிடித்த கவிதை இதோ !

என் கவிதைகளில்
எதோ ஒரு கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
அந்தக் கவிதைதான்
என் கவிதைகளில்
சி
றந்த கவிதை !

காதல் தோல்வி நினைவுகளும் சுகமான சுமைதான்

நீ எனக்கு கிடைத்திருந்தால்
எப்போதோ
என் மனைவியாகி இருப்பாய்
கிடைக்காமல்
போனதால்தான்
இன்னும்
காதலியாகவே
இருக்கிறாய் !

இந்தக் கவிதை படித்ததும்
தபூ சங்கர்அவர்களுக்கு காதல் தோல்வி அடைந்ததன் காரணமாகவே மிகச் சிறந்த கவிதைகளை எழுதி வருகிறார் .காதல் வெற்றிப் பெற்று இருந்தால் இவ்வளவு கவிதைகள் எழுதி இருக்க முடியாது .

நீ இன்னும் என்னை
மறக்கவில்லை
அதனால்தான்
நான் இன்னும்
உயிரோடு
இருக்கிறேன்
.

இந்த நூல் படிக்கும் வாசகர்கள் அவரவர் காதலை அசைப் போடும் விதமாக  மிகச் சிறப்பாக கவிதை எழுதி உள்ள தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .காதல் கவிதைகள் எழுதுவதில் தனக்கென தனி இடம்  பிடித்துள்ளார்  தபூ சங்கர்.

கருத்துகள்