கவிஞர் மு.ஆ. பீரொலி அவர்களின் 'நித்திரைப் பயணங்கள்' கவிதைநூல் வெளியீட்டு விழா !

கவிஞர் மு.ஆ. பீரொலி அவர்களின் 'நித்திரைப் பயணங்கள்' கவிதைநூல் வெளியீட்டு விழா !


மதுரை ரயில்வே முதன்மை வர்த்தக ஆய்வாளர் கவிஞர் மு.ஆ. பீரொலி அவர்களின் 'நித்திரைப் பயணங்கள்' கவிதைநூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 18 புதன் கிழமை அன்று மதுரையில் நடைபெற்றது.

கோவை தகிதா பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் பேராசிரியர் மணிவண்ணன்  இந்த நூலை   வெளியிட திருமதி அமுதா ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்த திறனாய்வு உரையை கவிஞர் திரு இரா.இரவி அவர்களும் ,திருமதி குமுதா ஆறுமுகம் அவர்களும் ஆற்றினர்.

பேராசிரியர் மணிவண்ணன்   தலைமை உரையில்: தகிதாவின் நூல் வரிசையில் இது குறிப்பிடத்தக்க நூல். காரணம் கவிஞர் பீரொலி அவர்கள் இந்நூலைப் படைக்க, திரு சாலமன் பாப்பையா அவர்கள் வாழ்த்துரை வழங்க,பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் அவர்கள் அணிந்துரை வழங்கி இருக்கிறார்கள். இந்த அடையாளம் இந்நூலை சமயம் கலந்த நூலாகவும் ,சமயம் கடந்த நூலாகவும் அடையாள படுத்தி இருக்கிறது. மொழியையும் மானுடத்தையும் பாடாத எந்த படைப்பாளியையும் காலம் நினைவில் வைப்பதில்லை. காலத்தை உச்சரித்திருக்கும் இந்நூல காலம் கடந்து உச்சரிக்கப்படும். ஒரு கலைஞனின் படைப்பு சமூகத்தின் பொதுச் சொத்தாகிறது. வாழ்ந்ததன் அடையாளங்களை பலதலைமுறைக்கும் விட்டுச்செல்கிற பாக்கிய சாலிகள் படைப்பாளர்கள் மட்டும் தான். அந்த வரிசையில் நித்திரைப் பயணங்கள் கவிதையின் விலாசமாக காலத்தின் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது, 
கவிஞர் இரா.இரவி அவர்கள் சிறப்புரையில் படைப்பாற்றலின் முக்கியத்துவத்தையும்,அதற்கும் மொழிக்கும் இடையிலான உறவையும்,கவிதையின் பன்முக பரிமாணங்களையும்,மிக மிக சிறப்பான முறையில் அழகிய தமிழில் பதிவுசெய்தார்.தன் கவிதை அனுபவங்களையும் சுவையாக   பகிர்ந்துகொண்டார்.சமகால சூழல்களை சுட்டிக்காட்டி ஆற்றிய அவரின் சிறப்புரை எதார்த்தத்தின் உச்சம்.
கவிதாயினி குமுதா ஆறுமுகம் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நித்திரைப் பயணங்களில் இருக்கும் தொண்ணூறு சதவிகித கவிதைகளை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி அதற்கு கூடுதல் கருத்துகளின் இணைப்புகளோடு தனது கவிதைத் தனமான உரையால் இக்கவிதை நூலுக்கு ஒரு கவிதையாலேயே சிறப்புரையை தனது திருத்தமான தமிழில் நீரோடையாகத் தந்துமகிழ்ந்தார்.செறிவாகவும் அடர்த்தியாகவும் இருந்தது அவரின் அழகுத் தமிழ் உரை.
வானொலி கலைஞராகவும்,நாடக ஆசிரியராகவும், சினிமா கலைஞனாகவும், நல்ல கலை ரசிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் திரு வில்லியம்ஸ் அவர்கள் இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார்.நல்ல தமிழில், அழகான வாக்கியங்களை அமைத்து உணர்வாகவும் நகை சுவையாகவும் நிகழ்வை படைத்தளித்து  புதுமாதிரியான வெளியீட்டு முறையில் அவையில் இருந்தவர்களை ஒவ்வொரு நிகழ்வையும் கேட்க வைத்த பெருமை     அவர்களையே சாரும்.
திருமதி.அமுதாஞானசம்பந்தன் அவர்கள் படைப்பாளருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து விட்டு, நிகழ்வு முடியும் வரையில் தன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி மிக கவனமாக கேட்டு ரசித்து இன்புற்றார்.
'நித்திரைப் பயணங்கள்' -படைப்பாளர் கவிஞர் மு.ஆ.பீரொலி அவர்கள் செறிவான தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களின் மேற்கோள்களைக் காட்டி தனது ஏற்புரையை நன்றி கலந்தும் அன்பு கலந்தும் தந்து அனைவரையும் நெகிழவைத்தார்.
மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அதிகாரி திரு என்.வேணுகோபால் அவர்களும்,கவிஞர் அலாவுதீன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து படைப்பாளர் கவிஞர் மு.ஆ.பீரொலி ஏற்புரை வழங்கினார்.
மதுரையைச் சார்ந்த படைப்பாளர்கள் சரவணன்,பிரான்க்ளின்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.முகநூல் தோழமைகள் அசோக்,ஆத்மார்த்தி,வன்னிதங்கம் ராதா, ஆகிய பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

முன்னதாக திரு வில்லியம்ஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் திரு வன்னி தங்கம் ராதா அவர்கள் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் பல படைப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

கருத்துகள்