விழியீர்ப்பு விசை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி

விழியீர்ப்பு விசை

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் 

விமர்சனம்
கவிஞர் இரா .இரவி

விஜயா பதிப்பகம் கோவை விலை ரூபாய் 35


கவிஞர் தபூ சங்கர் தனது கவிதை நூல்கள் மூலம் காதலர்களையும் ,காதலையும் வளர்த்து வருபவர் .விழியீர்ப்பு விசை காதல் கவிதை நூல் இது . கவிஞர் தபூ சங்கர்  காதல் கவிதைகள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் .காதலர்களுக்குப்  பிடித்த கவிஞர் தபூ சங்கர்.  இவரது நூலைத்தான்  காதலர்கள் பலர் பரிசு நூலாகப் பரிமாறிக் கொள்கிறார்கள் . காதலர்கள் காதலைப் போலவே காதல் கவிதைகளையும் நேசிக்கின்றனர் .அதனால்தான் பல பதிப்புகளில் நூல் வந்துக் கொண்டே இருக்கின்றது.  கவிஞர்கள் அறிவுமதி ,பழனி பாரதி இருவரின் அணிந்துரையும் நூலிற்கு உரம் சேர்க்கும் விதமாக உள்ளது .

புவி யீர்ப்பு விசை கண்டுபிடிக்கும் காலத்திற்கு முன்பே ,ஆதாம் ஏவாள் காலத்திலேயே உருவானது   விழியீர்ப்பு விசை.கவிதைக்குப் பொய் அழகு என்பதை மெய்பிக்கும் கவிதை இந்நூலின் பின் அட்டையில்  உள்ளது .

உனது ஆடையையும் எனது
ஆடையையும்
அருகருகே காய வைத்திருக்கிறாயே !
இரண்டும் காய்வதை விட்டு விட்டு
விளையாடிக் கொண்டிருப்பதை
ப்  பார் !

காற்றில் ஆடைகள் ஆடுவதை கவிஞர் விளையாடுவதாகக் கற்பனை செய்து கவிதை எழுதி உள்ளார் .நூலின் அட்டைப் படத்தில் உள்ள அழகி அழகா ? மயில் இறகு அழகா ? பட்டிமன்றமே நடத்தலாம் .

மொழிப்போர் தியாகி கேள்விப்பட்டு இருக்கிறோம் .விழிப்போர் தியாகிகளுக்கு நூலை காணிக்கை ஆக்கி உள்ளார் .வித்தியாசமாக சிந்தித்து கவிதை எழுதுவதால் வெற்றிப் பெறுகின்றார் .


சற்றுமுன் நீ நடந்து போன தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கின்றது வீதி ,எனினும்
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது என் இதயம் .

இதயத்தின் அதிர்வலைகளை  கவிதையில் நன்குப் பதிவு செய்துள்ளார் .

சூரியன் வந்த பிறகுதான் நீ வருகிறாய்
என்றாலும் நீ வரும் போதுதான் விழிக்கிறது  இந்த வீதி !
 

கவிஞர் தபூ சங்கரின் கவிதைகளுக்கு விளக்கவுரையோ, தெளிவுரையோ தேவை இல்லை .எளிமை இனிமை புதுமை கலந்த கலவை .படிக்கும் வாசகர் அனைவருக்கும் மிக எளிதாக விளங்கும் .சில கவிஞர்கள் இருக்கிறார்கள் எழுதிய என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியாது என்ற ரகத்தில் எழுதி வருகின்றனர் .அவர்கள் திருந்த வேண்டும் .

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
உண்மையெனில்
உனக்குத் தெரிகிறதா என் முகத்தில் உன் அழகு ?


கவிஞர் தபூ சங்கர் கவிதை உண்மைதான் .பல இளைஞர்கள் காதல் வயப்படதும் அழகாகி விடுகின்றனர் .காதலனை அழகாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு .தாடி வளர்த்து ,தற்கொலை வரை அழைத்துச் செல்லும் எதிர்மறை வினை காதலுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் .

கண்களைக் கட்டிக் கொண்டுதானே
கண்ணா
மூச்சி ஆட்டம் ஆட வேண்டும் ...
நீ கண்களாலேயே ஆடுகிறாயே !


காதல் வயப்படுவதில் முதல் இடம் கண்களுக்குத்தான்  என காதலித்த காதர்களுக்கு நன்கு விளங்கும் .இந்த நூலில் உள்ள கவிதைகள் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதலை உறுதியாக நினைவூட்டும் என்று  அறுதியிட்டு  கூலாம்.  நினைவூட்டத் தவறினால் நூலின் விலை திருப்பித் தரப்படும் என்று கூட விளம்பரம் செய்யலாம் .
 
இந்தக் கவிதையை காதல் வயப்படும் ஒவ்வொரு இளைஞர்களும் கவனத்தில் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் .இனி ஒரு விதி செய்வோம். காதல் தற்கொலைகள் இனி இல்லை என்று ஆக்குவோம் .அல்ல அல்ல இனி  தற்கொலைகளே  இல்லை என்று ஆக்குவோம். விலைமதிப்பற்ற மனித உயிரை மாய்க்கும் மடமையை  ஒழிப்போம் .

உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன்
என் உயிரைத்  தவிர
அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன் .


தொலைபேசியில் முத்தம் தா ! என்றுதான் காதலன் கேட்பான் .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர்  வித்தியாசமாக தொலைபேசியில் முத்தம் தராதே ! என்கிறார் .

தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு  முத்தம் தராதே
அது உன் முத்தத்தை  எடுத்துக் கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே எனக்குத் தருகிறது .


காதலியின் அழகை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .பாருங்கள் .எள்ளல் சுவையுடன் .

எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக் கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம் உன்னை ரசித்துக்
கொண்டிருந்தன .

மகிழ்ச்சியான கவிதைகள் மட்டுமல்ல மிகவும் நெகிழ்ச்சியான கவிதையும் உள்ளது .

நீ அன்பின் மிகுதியால் எனக்களித்த முத்தங்களை விட
ஒரு முறை அழுத போது என் மீது விழுந்து  விட்ட
உன் கண்ணீர் துளிதான்
நான் சாகும் வரை சுமந்திருப்பேன் !

விழியீர்ப்பு விசை  காதர்களை ஈர்க்கும் விசை .பாராட்டுக்கள் .காதல் கவிதைகளாக எழுதிக் குவிக்கும்  கவிஞர் தபூ சங்கர் அவர்களிடமிருந்து  சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .

கருத்துகள்