தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன் .மதிப்புரை: முனைவர் ச.சந்திரா

தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர்  இரா.மோகன்  eramohanmku@gmail.com

மதிப்புரை: முனைவர் ச.சந்திரா  neraimathi@rocketmail.com

கோபுர நுழைவாயில்:

       சேரமன்னர் பதின்மரின் வாகைசூடல் குறித்த பதிற்றுப்பத்து தோன்றியது சங்க காலம்!நூற்றுவரின் சமுதாயச் சாடல் குறித்த தொகுப்பு நூலாம் 'தமிழ் ஹைக்கூ ஆயிரம்'உருவானது இக்காலம்! இந்திய தேசத்தின் தென்கோடியில் வசிக்கும் முத்தான கவிஞர்களின் படைப்புக்களில் முனை முறியாத அட்சதை அரிசியாய்,பதின்நூறு தெரிவு செய்யப்பட்டு வடகோடியில் ஒளிர்விடும் சாகித்ய அகாதமியால்  வெளியிடப்பட்டிருக்கும் முனைவர் இரா.மோகன் அவர்களின் இத் தொகை நூல் ஹைக்கூ வரலாற்றில் அதிகமாய்   பேசப்படவிருக்கின்ற அற்புதநூல்! தன்னலம் கருதாது பொதுநலச்சார்போடு பல்லோரின் பாங்கானப் படைப்புக்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் இத்தகையப் பெருந்தகையாளருக்கு முத்தமிழ்க்காவலர் நினைவுப்பரிசு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமான ஒன்றுதானோ?

ஒன்பான்சுவையா?அறுசுவையா?

       மேல்கணக்கு பதினெட்டு பிறந்தது சங்ககாலம்!கீழ்க்கணக்கு பதினெட்டு பிறந்தது சங்கம் மருவிய காலம்!ஹைக்கூ தொகைநூல் பத்தொன்பது பிறந்தது இக்காலம்!முனைவர் இரா.மோகனின் இத்தொகுப்புநூல் பிறந்தததனால் ஹைக்கூவிற்குப் பொற்காலம்! விருந்திற்கு முன் தரப்படும் 'சூப்'-போல  வாசகர்களை நூல்வாசிப்பிற்குத் தயார்செய்கின்றது தொகுப்பு ஆசிரியரின் முன்னுரை!பின்னிணைப்புக்களோ விருந்தின் நிறைவில் வழங்கப்படும் 'ஐஸ்கிரீம்'-போல சுவைக்கின்றது!நூற்றுக்கவிஞர்களின் உணர்வுப்பூர்வமான ஹைக்கூக்களோ தலைவாழை இலையில் பரிமாறப்படும் அறுசுவை உணவாய் ருசிக்கின்றது

கலங்கரை விளக்கம்:

        யாதும் ஊரே;யாவரும் கேளிர் எம்மதமும் சம்மதம் எனும்படி-  மதுரை முதல் புதுவை வரை,வந்தவாசி முதல் வத்தலக்குண்டு வரை,சிவகங்கை முதல் செர்மனி வரை- தமிழ் தேசம் முதல் அயல்தேசம் வரையில் வாழும் இருபால்கவிகளின்   படைப்புக்கள்   இடம்பெறும் இந்நூல் பகுத்தறிவுப்பாதைக்கு மனிதர்களை இட்டுச்செல்கின்றது.இத்தொகுப்பில் சாதியம் நொறுக்கப்படுகின்றது.அறியாமை அலசப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கை ஊதப்பட்டிருக்க,.தமிழியம் ஓதப்பட்டிருக்கின்றது.மங்கிப்போ மனிதநேய ஜோதி தூண்டப்பட்டிருக்கின்றது.மொத்தத்தில் இந்நூலில் சமகால இழிநிலைகளுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கதம்பமாலை:

       விழிகளும் மொழிகளுமாய்.பரிதியும் பால்நிலவுமாய்,மழைத்துளிகளும் மனிதநேயத்துளிகளுமாய்,இறகுகளும் சிறகுகளுமாய் ,எதிர்மறையும் நேர்மறையுமாய்,அஃறிணையின் கற்பித்தலும் உயர்திணையின் கற்றலுமாய் ,வினா-விடையும் வியத்தலுமாய்,தன்னம்பிக்கைச்சாலையில் நடை போடும் நன்னூல் இது!முள்ளும் முகவரி தேடும் இந்நூலில் ஒற்றை ரோஜா இதழ் திறந்து பேசுகின்றது!வண்ணங்கள் உடைபடுகின்றன!பூவும் தீயும் சந்தித்து உரையாடுகின்றன!கடவுளின் காலடி சத்தம் கூடக் கேட்கின்றது.ரேகைகள் சிவக்கின்றன!ஊசித்துளை வழியே ஓர் ஊர்வலமே நடக்கின்றது.மொத்தத்தில் கிழக்கு வெளுக்கின்றது.

தன்னம்பிக்கை ஊட்டும் தமிழன்பனின் ஹைக்கூ இதோ!
        "பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
        முத்தமிட்டுச் சொன்னது பூமி
        ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ ! "(.25)

தமிழியம் ஊட்டும் கவிஞர் இரா .இரவி ஹைக்கூ ஒன்று!
       “ தமிழன் என்று சொல்லடா!
        தலை நிமிர்ந்து நில்லடா!
        ஆங்கிலக் கையொப்பம் ஏனடா?”(.83)

தென்றல்நிலவனின் தெம்மாங்கு மின்பா ஒன்று!
          "மெதுவாய் வீசு காற்றே
          செடியில் பூத்திருக்கு!
          முதல் ரோஜா!"(.88)

இளந்தென்றலின் புயல் ஹைக்கூ இதோ!               !
       "சங்கங்கள் நெய்யூற்றினால்
       எப்படி அணையும்
       சாதீ?"( ப.87)

இளையதலைமுறையைச் சாடும் ஒரு ஹைக்கூ!
       பெற்றவர் பட்டினி
       நடிகருக்கு பாலாபிஷேகம்!
       இந்தியா இளைஞர்  கையில்!(.119.தமிழ்ச்செல்வி)  
         
யதார்த்தத்தைப் பறை சாற்றும் ஹைக்கூ ஒன்று!
         "நேற்று வரை தூற்றியவர்கள்
          நாளை முதல் போற்றுவார்கள்!
          இன்று அவன் இறந்துவிட்டான்!(.33.கழனியூரன்)

தொன்மக்குறியீட்டுப் பா ஒன்று!
       ஞானப்பால் கிடைக்கலையாம்
       தீக்குச்சி அடுக்கும்
       சிவகாசி ஞானசம்பந்தன்கள்!(ஸ்ரீரசா..89)       

மனமார...
       முத்தான கவிகளின்  மூவைந்து ஆண்டு காலப்படைப்புக்களை முனைப்புடன் தெரிவு செய்து தமிழன்னைக்கு புத்தாபரணமாய் சூட்டியிருக்கும் தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்களின் இலக்கியப்பணி தேசங் கடந்து தொடர என்போன்றோரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

--

கருத்துகள்

கருத்துரையிடுக