படித்ததில் பிடித்தது

 படித்ததில் பிடித்தது

தூறல் கலையும் வானில்.. கவிதாயினி T.கார்த்திகா
 
உதிர்ந்த பூக்களுக்கு
இரங்கல் தெரிவிக்கிறது
வானம்
காய்ந்த இதழ்களின் மேல்
மழைத்துளிகளை தெளித்து..
 
ஒருநாள் வாழ்வை
கடந்துவிட்ட கர்வத்தில்
கம்பீரமாய் தரை புரள்கிறது 
ஈசல் சிறகுகள் ..
 
ஆரவாரமாய் விழுந்த
அடைமழையை
அதிகாலை இளவெயில்
துடைத்திடும் நேரத்தில்,
 
 
மயிலிறகுக்கு பசிக்குமென்று
அரிசியை சேகரிக்கிறான்
சிறுவன்
புத்தகப் பக்கங்களில்
 
கண்களை புகைக்குள் புதைத்து
எறியும் ஈரவிறகோடு
சண்டையிட்டு கொண்டிருக்கிறாள்
அன்னை
 
மது தந்த மயக்கத்தில்
வீதியில்
உறங்கிக்கொண்டிருக்கிறார் 
தந்தை  
 
விடியாத வாழ்வை
எட்டாத தூரத்தில் நின்று
வேடிக்கை பார்க்கிறான்
ஆதவன்!

கருத்துகள்