வானம் வசப்படும்நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி

வானம் வசப்படும்

நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி

நூல் விமர்சனம் கவிஞர் இரா  .இரவி

வானம் வசப்படும்  என்ற நூலின் தலைப்பே தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .
நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி மாற்றுத் திறனாளி .மிகச் சிறப்பாக
ஹைக்கூ கவிதைகள் வடித்து உள்ளார் .
கவிஞர்கள் புதுவைத் தமிழ் நெஞ்சன் ,கன்னிகோயில் ராஜா ,வசீகரன் ஆகியோரது
அணிந்துரை நூலிற்கு அணி சேர்கின்றது .
ஹைக்கூ வின் சிறப்பம்சம் மூன்றாவது வரியில் ஒரு முத்திரை இருக்கும்
.வாசகர் எதிர்பார்க்காத திருப்பம் இருக்கும் .

அழுதாள்
அணைத்தேன்
இறந்தது மெழுகுவர்த்தி

எங்கும் எதிலும் கலப்படம் உள்ளது என்ற அவலத்தைச் சாடிடும் ஹைக்கூ

விசம் சாப்பிட்டான்
ஏமாந்தான்
கலப்படம்

மற்ற கலப்படம் உடலுக்குக் கேடு .ஆனால் இந்த விசத்தின் கலப்படம் ஒரு
உயிரைக் காப்பாற்றி விட்டது என்று சந்தோசப்படலாம் .
  மொய் செய்தல் சீர் செய்தல் இதன் காரணமாக பல சிரமங்கள் நடுத்தரக்
குடும்பங்களுக்கு .இதனை உணர்த்திடும்  ஹைக்கூ

காது குத்தியாச்சு
வலித்தது மாமனுக்கு
சீர் செலவு

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களைப் போல காட்சிப் படுத்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .

நிலாவில் கால் வைத்தான்
அம்மணச் சிறுவன்
தேங்கிய மழை நீர்

உழைப்பவர்கள் யாவரும் துன்பத்தில் வாடுகின்றனர் .அவர்களின் வாழ்வில்
விடியல் விளைய வில்லை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ

வெளுத்துப் போட்டவனுக்கு
அழுக்குச் சட்டை
சலவைத் தொழிலாளி

வரதட்சணைக் கொடுமையை குறிப்பாக பெண்ணைப் பெற்றோர் படும் துன்பங்களை  மிக
நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .ஹைக்கூ கவிதைகளுக்கு சொற்களில் சிக்கனம்
அவசியம் ..அந்த வகையில் படைத்துள்ள ஹைக்கூ .
இதோ!

சொந்த வீடு
வாடகையானது
மகளுக்கு திருமணம்

மனிதாபிமானம் இன்றி மனிதர்கள் கவனிக்காமல் உள்ள பிணத்தைப் பற்றி ஒரு
ஹைக்கூ வடித்துள்ளார் .

அனாதைப்பிணம்
துக்கம் விசாரித்தன
ஈக்கள்

மின்தடை காரணமாக மக்கள் மிகவும் வேதனை அடைந்து வருகிறார்கள் .ஆட்சி
மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற வேதனையில் உள்ளனர் .மின்தடையைக் கூட
நேர்மறையாகச் சிந்திக்கிறார் .

முதல் இரவு
மின்தடை
சரியான சகுனம்

கிராமங்களில் மிகவும் பாசமாக ஆடு வளர்ப்பார்கள்
அதுவும் கடவுளுக்கு நேர்ந்து விட்ட ஆடு என்றால் மிகச் செல்லமாக
வளர்ப்பார்கள் .பக்கத்துக்கு நிலத்தில் மேய்ந்தாலும் அடிக்காமல்
விரட்டுவார்கள் .அதனையும் பார்த்து ஒரு ஹைக்கூ வடித்துள்ளார்.

நம்ப வைத்து
கழுதறுத்தான்
நேர்ந்து விட்ட ஆடு

கூ ட்டுக்குடும்பத்திற்கு பெயர் பெற்ற நமது நாட்டில்தான்
முதியோர்இல்லங்கள் பெருகி வருகின்றன .வேதனையான முதியோர்இல்லங்களையும்
நேர்மறையாகவே பார்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி

தெய்வங்கள் எல்லாம்
ஒரே இடத்தில
முதியோர்இல்லம்

நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி மூடநம்பிக்கையையும் சாடி உள்ளார் .

விபத்து
துண்டானது
ராசிக்கல் விரல்

வாழ்த்துக்கள் தொடந்து எழுதுங்கள்.

நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி செல் 9095989658

கருத்துகள்