மேடைப் பயணங்கள்நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

மேடைப் பயணங்கள்

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அமுதம் பதிப்பகம் ,155.டெபுடி கலெக்டர் காலனி , வது தெரு ,கே .கே .நகர்
,மதுரை .20.   விலை ரூ 120

சில ஓவியங்களைப் பார்த்தால் வரைந்த ஓவியரின் பெயரைக் கூறி   விடலாம்
.குறிப்பாக ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியத்தை பார்த்தவுடன் யாரும் சொல்லி
விடலாம் .அந்த அளவிற்கு தனித்துவமான ஓவியம் வரைவதில் வல்லவர்  ஓவியர்
அரஸ்.நூலின் முகப்பில் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் ஓவியத்தை
மிகச் சிறப்பாக வரைந்துள்ளார். பாராட்டுக்கள் .

பாக்கியம் ராமசாமி அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது.
எல்லோரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .குறிப்பாக பேச்சாளர் ஆக விருப்பம்
உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் கடந்து வந்த பாதையை முதல் மேடை
தொடங்கி இன்றுவரை சந்தித்த அனுபவங்களை மலரும் நினைவுகளை மறக்காமல் பதிவு
செய்துள்ள நூல் .நகைச் சுவை உணர்வுடன் நூலை எழுதியுள்ளார் .நூலைப்
படித்து முடித்தவுடன் முழு நீள  நகைச் சுவை திரைப்படம் பார்த்த உணர்வு
வருகின்றது .அதுதான் நூலின் வெற்றி. பேச்சாளர் எப்படி நடந்து கொள்ள
வேண்டும் என்று விளக்கும் விளக்காக நூல் உள்ளது .

நீங்கள் நம்ப மாட்டீர்கள் ,நான் பேசிய முதல் வார்த்தைக்கே கைதட்டு
வாங்கினேன் .1 1/2 வயது நான் பேசிய முதல் வார்த்தை அம்மா  கைதட்டியதுயார்
தெரியுமா ? என் அம்மா ,என் குடும்பத்தாரும்தான்  என்று நான்
வேடிக்கையாகப் பதில் சொன்னேன் .
இப்படி நகைச் சுவை உணர்வுடன் நூல் முழுவதும் மிக எளிய இனிய நடையில் நூல்
எழுதியுள்ளார் .

பள்ளியில் படித்தபோது முதல் மேடையில் தன பெயரையே சொல்ல மறந்த அனுபவத்தை
மறைக்காமல் பதிவு   செய்துள்ளார் . நூல் ஆசிரியரின் நேர்மையைப் பாராட்ட
வேண்டும் .பக்தியை  விட  தொண்டே சிறந்தது என்று மாணவனாக இருந்தபோதே
பேசிப் பாராட்டுப் பெற்றது .இப்படிப் பல நிகழ்வுகளை சுவைபட நூலில் எழுதி
உள்ளார் .மறைந்த  குன்றக்குடி   அடிகளார் நடுவராக இருந்தபோது ,தரமான
பட்டிமன்றங்களின் பொற்க்காலம்  என்றே சொல்ல வேண்டும் .நூல் ஆசிரியர்
,குன்றக்குடி   அடிகளார் பட்டிமன்றங்களை தேடித் தேடி ,ஓடி ஓடி பயணித்து
கேட்டு ரசித்த அனுபவங்களை நன்கு பதிவு செய்துள்ளார் .இன்று புகழ் பெற்றப்
பேச்சாளராக விளங்குவதற்கு அந்த அனுபவம்தான் உரமாக அமைந்தது என்பதை
உணர்த்துகின்றார் .

 பார்வையாளராக இருந்தவர் பேச்சாளராக மாறி மறைந்த குன்றக்குடி   அடிகளார்
தலைமையில் வழக்காடு மன்றத்தில் வழக்குத் தொடுப்பவராகவும், வழக்கை
மறுப்பவராகவும் இரட்டை வேடம்  இட்டு, மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி
என்றும்  மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி அல்ல என்றும் ,வாதாடிய
அனுபவம்தான் சிறந்த பேச்சாளர் ஆவதற்கு உதவியதைஎன்பதை  உணர்த்துகின்றார் .

சிறு வயதில் அப்பா கேட்டுக் கொண்டதனால் மார்கழி மாதம் திருப்பாவை வகுப்பு
எடுத்த அனுபவம் பின்னாளில் பேராசிரியர் பணிக்கும் ,பேச்சுத் துறைக்கும்
உதவியாக இருந்தது என்பதை நூலில் பதிவு செய்துள்ளார் .
ரசித்துச் சிரிக்க கூடிய நல்ல பல நகைச் சுவை நூலில் உள்ளது .மிருகக்
காட்சி சாலை சென்றபொழுது நீர் யானை  நீர் ... யானை என்று பேசிய சொல்
விளையாட்டை தமிழின் சிறப்பை நன்கு எழுதி உள்ளார் .

பட்டிமன்றம் பேச  காரில் சென்றவர்களை ஊர் மக்கள் அனைவரும் வந்து
வரவேற்பது  கண்டு வியந்து பார்த்தபோது .அவர்கள் புது திரைப்படத்தின் படப்
பெட்டி வருவதாக நினைத்து ,வந்து வரவேற்று ஏமாந்து ,படப் பெட்டி வரும் வரை
பட்டிமன்றம் பேசுங்கள் என்று சொன்ன நிகழ்வை நூலில் விளக்கி உள்ளார் .

மேடையில் பேசுகின்ற பெருமக்கள்   சில உயர்ந்த குறிக் கோள்களைக்
உடையவர்களாக இருக்க வேண்டும் .பேசுகிறபோது கீழான சொற்களையோ ,வேறு பொருள்
தரும்படியான வார்த்தைகளையோ ,பிறர் மனம் புண்படும் படியான செய்திகளையோ ஒரு
போதும் கூறக்   கூடாது .என எங்கள் பேராசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார்
என்று நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார் .இந்த வைர வரிகளை ஒவ்வொரு
பேச்சாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

 தோற்றத்தை வைத்து யாரையும் எளிதாக எண்ணி விடாதீர்கள் என்று எச்சரிக்கைத்
தரும் நிகழ்வு நூலில் உள்ளது .
வளர்ச்சிக்கு அடிப்படை
முயற்சி +பயிற்சி =வளர்ச்சி
கட்டுரையின் தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது.
மதுரையில் மீனாட்சி மருத்துவமனையில் நகைச் சுவை மன்றம் தொடங்கி
20ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருவதற்குக் காரணமான மருத்துவர் ந
.சேதுராமன் அவர்களைப் பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளார் .  இன்றைய
தொலைகாட்சி புகழ் பேச்சாளர்கள் பலரும் மதுரை நகைச் சுவை மன்றத்தில்
பேசிப்  பயிற்சி பெற்றவர்கள் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார்.

பாம்புப் புற்றின் மீது மேடை அமைத்தது தெரியாமல் பட்டி மன்றம் பேசிய
திகில் அனுபவங்கள் சுவையாக உள்ளது .
திரைப்படம் போல ஒரு பாடல் காட்சி நேரத்தில் வெற்றி பெற்று விட முடியாது
.தான் இந்த நிலைக்கு வர பட்ட கஷ்டங்கள் ,பயணித்த பயணங்கள் ,சந்தித்த
அவமானங்கள் ,பெற்றப்  பயிற்சி ,சந்தித்த மனிதர்கள் என அனைத்தையும் சுவைபட
எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த
எழுத்தாளர் என்பதை பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது .

கருத்துகள்