தெருவெல்லாம் தேவதைகள்நூல் ஆசிரியர் திரு. கோபிநாத்விமர்சனம் கவிஞர் இரா .இரவி

தெருவெல்லாம் தேவதைகள்

நூல் ஆசிரியர் திரு. கோபிநாத்

 விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நக்கீரன்   பதிப்பகம்  விலை 50 ரூபாய்

தெருவெல்லாம் தேவதைகள்  என்ற கவித்துவமான தலைப்பே காதல் கவிதை நூல் என்று
பறை சாற்றும் விதமாக உள்ளது .நூல் முழுவதும் காதல் கவிதைகளாக
இருந்தபோதும் ,இந்நூலை தேவதைகளின் எல்லா அம்சமும் பொருந்திய என்
அம்மாவுக்கு ! என்று சமர்ப்பணம் செய்து திரு.கோபிநாத்
 வித்தியாசப் படுகிறார் .
விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா  ? நிகழ்ச்சி மூலம் சமுதாயத்தில்
விழிப்புணர்வு விதைத்து வரும் திரு. கோபிநாத்  சிறந்த புதுக் கவிஞர்
என்று உணர்த்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .
இந்த உலகில் காதலிக்காதவர்கள் மிகச் சிலரே ! காதலிக்கும் பலருக்கும்
இந்நூல் நிச்சயம் பிடிக்கும் .காரணம் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர்
காதலை நினைவூட்டும் விதமாக கவிதைகள் உள்ளது .காதல் திரைப் படங்களில்
திரு. கோபிநாத்  அவர்களின் அனுமதியுடன் இக்கவிதைகளைப் பயன்படுத்தலாம்.
நூலில் நக்கீரன் கோபால் அவர்களும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களும்
வாழ்த்துரை வழங்கி  உள்ளனர் .  இயக்குனர் பாலாஜி சக்திவேல்
குறிப்பிட்டபடி இந்நூலில் சரியான வார்த்தைகள் சரியான வரிசையில்
இருக்கும்போது கவிதை ஆகின்றது .

என்னோடு பழகிப் பழகி இந்த கடிகார முட்களும்
இப்படி ஆகி விட்டன .
நீ இருக்கும்போது வேகமாக நகர்வதும்
இல்லாதபோது மெதுவாகச் சுழல்வதுமாய்!

கவிதைக்கு பொய்  அழகு என்பார்கள் .ஆம் ,கடிகாரம் சீராகத்தான் ஓடுகின்றது
.ஆனால் காதலன் பார்வையில் காதலி அருகில் இருக்கும்போது மிக விரைவாக
ஓடுவது போலத் தோன்றும் ,காதலி   இல்லாதபோது மிக மெதுவாக ஓடுவதுபோல
தோன்றும் .காதலனின் மன நிலையை நன்கு பதிவு செய்துள்ளார் .

என்னிடம் மாற்றம் இருப்பதாய் நிறையப் பேர் சொன்னார்கள்
திரும்பிப் பார்த்தேன் .உன் சாயலில் என் நிழல்

காதல் உணர்வுகளை உணர்வுப் பூர்வமாகக் கவிதை எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .

அரசு சாதிப் பட்டியலில் உனக்கென ஒரு தனியிடம்
ஒதுக்கியுள்ளது தேவலோகக் கன்னி என்று !

இது கொஞ்சம் அதிகம்தான் ஆனாலும் எள்ளல் சுவையுடன் ரசிக்கும்படி உள்ளது .

அதிகமான சந்தோசத்திலும்   அதிகமான துயரத்திலும்
உன் நினைவு எனக்கும் ,என் நினைவு உனக்கும்
தானாக வந்து விடுகிறது .

கவிஞர் கோபிநாத் காதலர்களின் ரகசிய உணர்வைஅம்பலப் படுத்தும் விதமாக ,
படம் பிடித்து கவிதை ஆக்கி உள்ளார் .உணர்ந்து ரசித்து திரும்பவும்
படித்துப் பார்த்தேன் .

கடைசிவரை தூங்கவே முடிவதில்லை
உன்னை நினைத்துக் கொண்டே
தூங்கிவிட  வேண்டுமென
நினைக்கிற நாட்களில் !

உண்மைதான் காதலர்களின் மன நிலையை காட்சிப்படுத்தி வெற்றிப் பெறுகின்றார் .

எந்தக் கவிதையும் உன்னை நினைத்துக் கொண்டு
எழுதுவதில்லை .
எழுதுகிற எந்தக் கவிதையிலும் நீ இல்லாமல் இல்லை .

எல்லாக் கவிதைகளிலும் அவள் வந்து  விடுகிறாள் என்ற கவிஞனின் ஆரம்ப நிலையை
அப்படியேப் பதிவு செய்துள்ளார் .

பட்டுபூச்சி  மோட்சம் கவிதை கவிஞர் வைரமுத்துவின் திரைப் படப்பாடலை
நினைவூட்டும்  விதமாக உள்ளது .அதனைத் தவிர்த்து இருக்கலாம் .

முத்தம் தவறில்லை ஒதுக்காதே !
தவறென்று தர்க்கம் செய்யாதே !
எச்சில் உறவைத் தவிர
வேறெதுவும் அன்பின் ஆழத்தை
அத்தனை அழுத்தமாய் சொல்லி விடுவதில்லை .

முத்தத்தின் மொத்தத்தை வித்தைப் போல கவிதையாய் வடித்து உள்ளார் .

மயிலிறகால் வருடியது போதும்
தோளில் சாய்ந்து கிடப்பவளே
கேசத்தை சரி செய்து கொள் !

காதலி இல்லம் செல்லும் வழியில் அவள் கேசத்தைப் பார்த்து யாரும் அவளைத்
தவறாக எண்ணி விடக் கூடாது  என்ற காதலனின் உயர்ந்த உள்ளத்தை அக்கறையை,
அன்பே ,அழகிய கவிதை ஆக்கி உள்ளார் .

யாரும் சொல்லித் தந்து வருவதில்லை காதல்
சுவாசம் சொல்லித் தந்தா வருகிறது

இந்நூலின் மூலம் கவிஞர் கோபிநாத்  காதல் கவிதை எழுதுவதில் வல்லவர் என்பதை
நிருபித்து உள்ளார் .இந்த கவிதை புனையும் ஆற்றலையும் ,நீயா நானா ?
நிகழ்ச்சி அனுபவத்தையும் வைத்து சமுதாயப் பிரச்னைகள் பற்றியும்,
தீர்வுகள் பற்றியும் கவிதைகள் எழுதி   நூலாக வெளியிட வேண்டும் என்ற என்
ஆசையையும் எழுதி நிறைவு செய்கின்றேன் .

கருத்துகள்