மூவா நினைவுகள் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மூவா நினைவுகள்

நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி

விஜயா பதிப்பகம் ,கோவை  விலை ரூ 40

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மு .வ .நூற்றாண்டு நினைவு சிறப்பு வெளியீடாக வந்துள்ளது .முகப்பு அட்டையில் மு .வ .அவர்களின் புகைப்படம் சிறப்பாக உள்ளது .ஆசிரியப் பெருந்தகை வழி காட்டும் நாயகர் மு .வ .வுக்கு நூற்றாண்டுக்காணிக்கை தந்துள்ளார் .
நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .

மு .வ வின் மாணவர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி .நூலில் தெளிந்த நீரோடை போன்ற நடையில்19 கட்டுரைகள்   எழுதி உள்ளார் .
ஆசிரியன்  ஓர் அற்புதமான சொல் ஆசு +சிரியன் = குற்றங் குறைகளை  ஓடச் செய்பவன் .என்று இச்சொல்லுக்கு விளக்கம் சொல்வார்கள் .இந்த விளக்கத்தை இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .   

மு .வ .வின் மாணவர் நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி  ,ஆசிரியர் மு .வ. அவர்களுக்குச் செய்தச் சிறப்பாக   நூல் உள்ளது இது போன்ற ஆசிரியர் மாணவர் உறவு இன்று காண முடிய வில்லை .

 எங்களின்  ஆசிரியர் மு .வ .அவர்கள் நன்னூல் வழி அறிமுகப்படுத்தப்படும் அத்தனை இலக்கணங்களுக்கும் முற்றிலும் பொருத்தமான ஒரு பெருந்தகை.இந்த வகையில் இன்னுமொரு தெ.பொ.மீ .

 கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கிற உலகத்தைப் பற்றியும் மாணவன் தெரிந்து புரிந்து கொள்கிற வகையில் கற்பிப்பதே   ஆசிரியரின் கடமையாகும் .இன்றைய ஆசிரியர்கள் கடைபிடிக்க   வேண்டிய நல்ல கருத்தாகும்.  
அறிவுடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் கல்விக் கூ டத்திற்கும்    பொருந்து
ம் படி    பாடி உள்ளார் .என்கிறார் நூல் ஆசரியர் .

1.உலகம்  (425)
2.எவ்வது (426)

ஆசிரியர் மு .வ .அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தியப் பாங்கை மலரும் நினைவுகளாகப் பதிவு செய்து ,மூவா நினைவுகள்  என்று நூலிற்குப் பெயர் சூட்டியது பொருத்தமாக உள்ளது .

 நல் ஆசிரியருக்கு இலக்கணமாக வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் பன்முக ஆற்றலாளர் மு .வ .அவர்கள் பற்றி பல புதிய செய்திகள் அறிய வாய்ப்பாக உள்ளது நூல் .மு .வ பற்றிய மதிப்பை மேலும் ,மேலும் உயர்த்தும் விதமாக நூல் மிகச் சிறப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .பாடத்திற்கு அப்பாலும் ஆசிரியர் மு .வ .ஒரு புரவலராய் -உற்றுளி உதவும் நண்பராய் -வழி நடத்தும் தந்தையாய் தாயாய் விளங்கியவர் எங்கள்  மு .வ . என்கிறார் நூல் ஆசிரியர் .மொத்தத்தில்  மு .வ .மாதா ,பிதா ,குரு,நண்பராக வாழ்ந்துக்   காட்டி உள்ளார் .

   மு வ .விடம் பயின்ற மாணவர்கள் ,மு .வ .இறந்தபின்பு அவரது மனைவி ராதா அம்மையாரிடம் .ஆசிரியர் மு .வ அவர்கள் தந்து உதவிய பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கொடுத்த போது ராதா அம்மையார் வாங்க மறுத்தார் .என் கணவர் தங்களுக்கு என்ன நினைத்துத் தந்தாரோ ? தெரியாது .  அந்த நினைப்போடு நன்றாக வாழுங்கள் .என்னிடம் தர வேண்டாம் நான் வாங்க மாட்டேன் என்று மறுத்துவிட்ட செய்தி படித்தபோது ,மு வ அவர்களின் மனைவி மு வ .போலவே நல் அறத்துடன் வாழ்ந்தார் .என்பதை உணர முடிந்தது .

பேச்சைக் குறைப்பீர்  உழைப்பைப் பெருக்குவீர்   என்ற பொன் மொழியை மு .வ .வாழ்வில் கடைப்பிடித்தார் என்பதை உணர முடிகின்றது .
மேடைப்பேச்சுக்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை .வீண் பொழுது போக்கு. அந்த நேரத்தில் எழுதி வைத்தால் பயன் உண்டு .பேசிப் பேசி தமிழ்நாடு வெறும் பேச்சுக் கூடமாகிவிட்டது.  செயல்கள் இங்கே மிக மிகக் குறைவு .என்னை சொற் பொழிவிற்கு அழைக்காதே என்று   நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களிடம் மு .வ .கூறி உள்ளார் .

இலக்கிய இமயம் மு .வ .அன்று சொன்னது தமிழகத்திற்கு இன்றும் பொருந்துவதாகவே உள்ளது .  நூல் முழுவதும் மு .வ .அவர்களின் உயர்ந்த கருத்துக்களை விதை போல தூவி உள்ளார் நூல் ஆசிரியர் .
மு .வ அவர்களின் நூலிற்கு மெய்ப்புத் திருத்த, நூல் ஆசிரியர் முனைவர் ம .ரா .பொ.குருசாமி அவர்களிடம் தந்த போது மு .வ .எழுதியிருந்த சொற்களான  சின்ன பையன் ,சின்ன காடு  என்பதை  சின்னப் பையன் சின்னக் காடு என்று திருத்தி நூல் வெளி வந்து விட்டது .தவறாக மெய்ப்புத் திருத்தியதற்குத் தண்டனையாக அன்றிலிருந்து மெய்ப்புத் திருத்தத் தர வில்லையாம்.

 இது போன்ற பல்வேறு சுவையான நிகழ்வுகள் நூலில் உள்ளது .
நூல் ஆசிரியர்
ம .ரா .பொ.குருசாமி மாணவனாக இருந்தபோது தேர்வு எழுதாமல் போராட்டம் நடத்தியபோது மு .வ .சொன்ன வைர வரிகள்
  ஒழுங்காக படிபதையே கடமையாகக் கொண்டு நடந்து கொண்டீர்களானால் ,இதே மன்றத்தில் உங்களை வாழ்த்திப் பாராட்டுக் கூட்டம்  நடத்துவேன். ஒழுங்கு பேணாமல் நீங்களெல்லாம்  எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்தாலும் நான் மதிக்க மாட்டேன் .
ஒழுக்கத்திற்கு மு .வ .எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து உள்ளார் என்பதை உணர முடிகின்றது .இந்த வரிகளை இன்றைய மாணவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
              மு. வ .அவர்கள் உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு மிகச் சிறந்த உரை எழுதினார்கள் .அவர் எழுதிய உரை .210 வது பதிப்பு 2011ஆம் ஆண்டில் வந்துள்ளது என்றால் அவர் உரையின் மதிப்பை உணரமுடியும் . 

             மு. வ .அவர்கள் திருக்குறளுக்கு மிகச் சிறந்த
உரை எழுதியதோடு நின்று விடாமல் ,திருக்குறள் வழி வாழ்வில் நின்ற காரணத்தால்தான் நூற்றாண்டு அடைந்தும் போற்றப்படுகின்றார் .வாசகர்களின் உள்ளத்தில்,மாணவர்களின் உள்ளத்தில்  இன்றும் நிற்கின்றார் .மு வ .என்ற மிகச் சிறந்த ஆளுமையின் மதிப்பிற்கு மேலும் மதிப்புச் சேர்க்கும் விதமாக வந்துள்ள
மூவா நினைவுகள் என்ற  நூல் எழுதியுள்ள முனைவர் ம .ரா .பொ.குருசாமி  அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

கருத்துகள்