முதுமையைப் போற்றுவோம்
செல்வி.வை.இராணி காரைநகர்.முதுமை வாழ்வின் இரண்டாம் பிள்ளைப்பராயம். முதுமைப்பராயம் அன்புக்காக ஏங்குகின்ற பருவம் ஆகும்.அன்பு பாராட்ட ஒருசிலர் இருந்தாலேபோதும் முதியவர்கள் தெம்புடன் வாழ்வார்கள். பாட்டன் பாட்டியினர் தமது மூன்றாவது சந்ததியினராகிய பேரப்பிள்ளைகளின் வாழ்வைச் செம்மைப்படுத்தும் சிற்பிகளாவர். பேரரும் பேரரும் கூடிக்;குலாவி, கொஞ்சிமகிழ்வது இருபகுதியினருக்கும் நன்மைஅளிக்கும். இதனால், அன்பும், ஆதரவும், அரவணைப்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் பூரணத்துவம் அடைகின்றன. சில இல்லங்களில் பேரப்பள்ளைகளைப் பாட்டன் -பாட்டியினருடன் சேரவிடுவதில்லை. வெறுங் கூட்டில் தனித்திருக்கும் முதுமைப் பறவைகள்போல எம்மத்தியில் முதியவர்கள் பலர் தனித்திருக்கிறார்கள். தனிமையே முதுமையின் முதல் எதிரி என்றார் அமெரிக்க அறிஞர் ஒருவர். முதியவர்கள் தீண்டத்தகாதவர்கள் இல்லங்களை அசுத்தப்படுத்திவிடுவார்கள் தம் இல்லங்களிற்குவரும் உறவினர்களிற்கும் நண்பர்களிற்கும் விருந்தினர்களிற்கும் முன்னேவருவது அநாகரிகம் என்றெல்லாம் எண்ணி முதியவர்களை வீட்டின் கோடிப்புறத்தில்; ஒதுக்கிவைக்கிறார்கள் பலர். அவர்களை ஒதுக்கி தனிமைப்படுத்தாமல் சமயவிழாக்களிலும் சமூகநிகழ்வுகளிலும் கலந்துகொள்ளச் செய்வது முதியவர்களுக்கு மனநிறைவை உண்டாக்கும். பெருநாட்களில் முதியவர்களின் ஆசியும் வாழ்த்தும் எமது வாழ்வைச் சிறப்படையச்செய்யும்.
முதியவர்களின் நெற்றியிலே சுருக்கங்கள் விழுவதை எம்மால் தடுக்கமுடியாது. ஆனால் அவர்களது நெஞ்சங்களில் சுருக்கம் ஏற்படுவதை எமது அன்பாலும் ஆதரவாலும் தடுத்துவிடமுடியும். முதியவர்களை தொல்லைதருபவர்கள் எனக்கருதும் நிலை இக்காலத்தில் வேகமாகப் பரவிவருகிறது. முதியவர்கள் நோயுற்று உடல்தளர்ந்து தேகநலம் குன்றியவர்கள். இவர்களுக்குப் பணிவிடை செய்வதும் பராமரிப்பதும் பெரியசுமை என்று எண்ணி பலர் பின்வாங்குகின்றார்கள். இது மனிதப்பண்பாட்டிற்கு ஏற்புடையதன்று. எந்தமனிதன் முதியவருக்கு பணிவிடை செய்வதையே முதல் கடைமையாகக் கருதிச் செய்கிறானோ எந்தப் பெண் மனஒருமையுடன் தன் கணவனுக்கு சேவைபுரிகிறாளோ எந்த வைசியன் உண்மையே பேசியும் நாணயம் தவறாமலும் நடந்துவருகிறானோ எந்தமனிதன் தன் புலன்களை அடக்கிஆள்கிறானோ அவர்களிடமே பகவான் இருக்கிறார் என்று இந்துமதபுராணங்கள் கூறுகின்றன. முதியவர் ஒருவருக்கு அளிக்கப்படும் கௌரவம் கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதையாகும்.
முதியவர்களுக்கு அவர்களது வயோதிபத்தின் காரணமாக கண்ணியமளிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் அவர்களது வயோதிபப் பருவத்திலே மரியாதை செய்பவர்களை கடவுள் நியமிக்கிறார் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறுகின்றார்.
முதியவர்கள் மற்றவர்களுடன் கதைப்பதற்குஆவலாக இருப்பர். கதைக்கும்போது அவர்கள் தமது எண்ணங்கள் அனுபவங்கள் அபிலாசைகள் எச்சரிக்கைகள் முதலியவற்றை விபரமாக எடுத்துக் கூறுவர்;. எனவே கிழவன் கிழவி என்றவார்த்தைகளாலோ அறளை பெயர்ந்துவிட்டது என்றோ வாக்குமாறிவிட்டது என்றோ கூறி அவர்களின் மனத்தைப் புண்படுத்தாமல் அவர்களை அன்பாகப் பேணி அவர்களது அனுபவங்களை செவிமடுத்து நாம் நற்பயன் அடைய முன்வருதல் வேண்டும். முதுமைக்கு இயல்பாக வேசில ஊனங்கள் உண்டு. நாம் அவற்றைப் புரிந்து சகித்துக்கொண்டு அவர்கள்மீது அன்பு பாராட்டவேண்டும்.
பெற்றோர் பலர் உடல் வலிமை இருக்கும்வரை கடுமையாக உழைத்து தமக்குக்கூட வைக்காமல் பிள்ளைகள் நலன் கருதி எல்லாவற்றையும் பங்கு போட்டுவிடுகின்றனர். ஆனால் முதுமையில் அவர்களுக்கு மிஞ்சுவது என்னவோ வெறுமையும் விரக்தியும் வீண் விசாரங்களும்தான். நீண்டநாட்கள் பயன்படுத்திய தேய்ந்துபோன அல்லது உடைந்துபோன பொருட்களை தூர எறிந்துவிடுவதுபோல நாம் முதியவர்களை புறக்கணிக்கக்கூடாது. அவர்களுடைய தேவைகளை இயலுமானவரை உடனடியாகக் கவனித்து அவர்களது அச்சத்தை நீக்கி ஆதரவு அளித்து அன்புகாட்டி ஒருபுத்துயிர் அளிக்கவேண்டும். நம் குழந்தைகள் நாம் முதியோரை எப்படி நடத்துகிறோம் என்று கூர்ந்து கவனிக்கிறார்கள். நாம் முதியோரை நடாத்தும் விதம் பேசப்படும் வார்த்தைகள் என்பன தெளிந்த நீரோடை போன்ற குழந்தைகளின் மனதிலே மனக்காட்சிகளாக பதிந்துவிடுகின்றன. நாம் வயதாகும்போது எம்மை எமது பிள்ளைகள் எப்படி நடாத்தவேண்டும் என்பதற்கு இதுஒரு முன்மாதிரியாகவுள்ளது.
முதியவர்களின் மகிமையை நாம் நன்கு உணரவேண்டும். அவர்களை உதாசீனப்படுத்தாமல் அவர்கள்மீது அன்பு பாராட்ட நமது மனக்கண்கள் திறக்கப்படவேண்டும். முதுமைக் காலத்தில் அவர்களுக்குத் தேவை அன்பும் பரிவும் நிறைந்த பாசமுகங்கள் புரிந்துகொள்ளும் தன்மை சொந்தம் பாராட்டக்கூடிய இனிய இல்லம் என்பனவாம்.
முதியவர்கள் தாம் பிறந்து வளர்ந்த ஊரிலேயே தமது காலத்தைக் கழிக்க விரும்புவர். நாம் இந்தநிலையை மாற்றினால் அவர்கள் மனம் தளர்ந்துவிடுவர். ஆகவே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வரவேண்டும். அவர்கள் இறக்கும்போது சுயகௌரவத்துடனும் தேவையில்லாத துன்பங்கள்-வேதனைகள் அனுபவிக்காமல் அவர்களது ஆன்மாவை போகவிட்டுவிடவேண்டும்.
செல்வி.வை.இராணி காரைநகர்.
காரைவசந்தம் 2002 சிறப்புமலரில் வெளிவந்தது.
http://karainagar.com/page/
கருத்துகள்
கருத்துரையிடுக