சுட்டும் விழி நூல் விமர்சனம்முனைவர் யாழ் சு .சந்திரா

சுட்டும் விழி    நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் .
குடியரசுத் தலைவரின் விருதுப் பெற்ற



 முனைவர் யாழ் சு .சந்திரா,
பேராசிரியர்,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி .

சுட்டும் விழியின் மின்னல்கள்

 ஹைக்கூ கவிஞர் என்றே இலக்கிய உலகில் அறியப்படும்  கவிஞர் இரா .இரவியின் பதினோராவது நூல் சுட்டும் விழி இந்த நூல்தான், தலைப்பிலேயே ஹைக்கூ வைப் பெறாத இரவியின் ஹைக்கூ நூல்! ஆனால் ,புத்தகத்துள் ஹைகூக்கள் குவியல் .
ஹைக்கூ வின் தோற்றத்தைப் பேசும் அறிஞர்கள் அவை ஜப்பானிய தன்கா,ரெங்கா  கவிதைகளில் இருந்து பிறந்தவை என்பர் .ஜப்பானிய மொழி   
ஹைகூவின்பிதாமகன்களாக மார்ஷிவோ பாஸோ,யோஷா பூஷான் ,கொபயாகஷி இன்ஷா ,மாஷஒகாஷிகி  ஆகிய நால்வரையும் குறிப்பிடுவர். அவர்களுள்
பாஸோ ஹைகூவின்  பிதாமகன் ஆவார் .எழுதும்போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும்  ஒரு மயிரிழை கூட  இடைவெளி இருக்கக் கூடாது .உன் மனதை நேரடியாகப் பேசு ....எண்ணங்களைக்   கலையவிடாமல் நேராகச் சொல் .என ஹைக்கூவின் ஆன்மாவைத் தொடும் வித்தையைச்   சுட்டுவார்.அந்த வித்தை இரவிக்கு இயல்பாக உள்ளது .   

இனிமையானது
உற்றுக் கேளுங்கள்
நதியின் ஓசை

என்ற நதியின் ஓசை ,கவிதையைப் படிக்கும் போதே காதில் ஒலிக்கிறது.
பாரதியின் இன்பத்தேன் நதியின் இசையாகிறதோ ?  
கலை கலைக்காகவே  என்ற அழகியல் கோட்பாட்டை விட கலை வாழ்க்கைக்காகவே என்ற வாழ்வியல் கோட்பாடு உயர்ந்தது! உன்னதமானது !  அந்த வகையில் ,இயற்கையின் சிலிர்ப்பையும் ,ரசனையையும் வருணிப்பையும் எழுதுவதை விட  இன்றைய  சமூக நிலையின் பதிவுகளை எழுதுவது அவசியமான ஒன்றாகும் .அத்தகு பதிவுகள் இரவியின் படைப்புகளில் பரவலாக ,இல்லையில்லை முழுமையாகவே இடம் பெறுகின்றன எனலாம் .

வீடு மாறியபோது  
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

என்ற ஹைக்கூ இடபெயர்தலின் நுண்ணிய உணர்வோடு  சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் சகோதரர்களின் வலியையும் குறிப்பிடுகிறதே !    

 தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !

என்ற
ஹைக்கூவில் தமிழுணர்வு பெரும் இடம் சுட்டப்படுகிறது .

தீமையின் உச்சம்
மக்காத எச்சம்
பாலிதீன் ! 

தள்ள வேண்டிய ஒதுக்க வேண்டிய குப்பைகளையும் பதிவு செய்கிறார் கவிஞர் ! பழமொழிகளும் ,பழந்தமிழ் இலக்கியமும் கூட கவிஞரின் கைவண்ணத்தில், ஹைக்கூவாகிறது  .சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி !

அசுத்தம்
சோறுபோடும்
துப்புரவு தொழிலாளி !

என்றும் வெள்ளத்தனைய மலர் நீட்டம் ! என்ற குறள் தொடர் ,

குளத்தின் உயரம் கூட
தானும்  வளர்ந்தது
தாமரை !

என்றும் வடிவம் பெறுகிறது !பெண்களை வருணிக்கும் இலக்கிய மரபின் மீது உள்ள கவிஞரின் மனத்தாங்கல் ,

பெண்ணை   விட
ஆணே அழகு
மயில் !

என ஹைக்கூவாகிறது.சிதைவுகளும் சிதலங்களும் கூட  காலத்தின் பதிவாக அமையும் யதார்த்த உண்மையை ,

கூறியது
வரலாறு  
குட்டிச்சுவர்  !

என்பார் இரவி !மென்மையான காதலும் பதிவாகிறது கவிஞரிடம் ,

நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்
என்பதும் ,

உயிரோடு
கண்தானம்
காதலர்கள்

என்பதும் ,

வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கிறது
'தாஜ்மகால்

என்பதும் காதலின் ஹைக்கூ வாகிறது .சமுதாயத்தின் கோபத்தை ,

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை

என ஒலிக்கிறார்.அதேபோல்

முளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம் !

என்ற ஹைக்கூவில்  அனைவருக்குமான சமுதாயக் கடப்பாடு தொக்கி நிற்கிறது .
வெறும் வார்த்தைகளால் சித்திரம் மட்டும் இல்லாமல் அதன்   பின்னணியில் சிந்தனைகள் ,அர்த்தங்கள் இருந்தால் சிறப்பு .என்பார் எழுத்தாளர் சுஜாதா ! இவ்வாறெல்லாம்  இரவியின் ஹைக்கூ வில் இடம் பிடிக்கின்றன .இன்னமும் கொஞ்சம் அழகியல் இழையாடினால்  கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின்  ஹைக்கூவிற்கு வாய்க்கும் !

ஹைக்கூவின்  அனுபவங்களைச் சூட்டியதோடு நின்றுவிட முடியவில்லை ! நூலின்  அட்டையே - வரைபடமே  ஓர் அனுபவமாகிறது .நூல்களால் செதுக்கப்பட்ட சிற்ப ஓவியமாக அமைகிற அட்டைப்படம் ,
ஏதாவதொரு வாசகனின் அடியாழ மனதில் செருகிக் கொண்டு இருக்கிற கவிதை நுட்பத்தை நிச்சயமாக வெளிக்கிளப்பும் !
   .

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்