மயக்கத்தில் ஒரு இரவு! கவிதாயினி T.கார்த்திகா
என் விழியோடு உறக்கம்
கதை பேசும் நேரம்!
ஊதக்காற்று வீசி
உடல் நடுங்கிய உலகம்!
இரவுப்போர்வைக்குள் ஒளிந்து
சொக்கி நிற்கும் பொழுது..
வெள்ளிமீன்கள் உலவிடும்
வான்குளத்திலே..
என் மொட்டைமாடி நிலா
காய்ந்திடக் கண்டேன்!
புதிதாய் நானமைத்த
தோட்டத்துப் பூச்செடிகள்
இதழ்மூடி இரவோடு
மயங்கிடக் கண்டேன்!
முகிலினங்கள்...
மோதிமோதி
மோகத்தில் கசிகின்ற
சாரல் மழையும்
சங்கீதம் பாடுது!
அந்த மந்தகார மயக்கத்தில்
மங்கையின் முகத்தில்
சிவந்திருக்கும் பருவைபோல்
பூமேலே மழைத்துளி
உறவாடுது!
இந்த மெளனமான
நடுசாமத்தில்...
என் வளையோசை
ரகசியமாய் சிரிக்கிறது!
அதனிடம்,
இவள் ரசித்ததை கூறும் முன்னே
பொழுதும் ஏனோ விடிந்தது!
கருத்துகள்
கருத்துரையிடுக