கவிதை அல்ல விதை நூலாசிரியர்.கவிஞர்.இரா.ரவி நூல் திறனாய்வு:கவிஞர் சி.விநாயகமூர்த்தி

கவிதை அல்ல விதை
    நூலாசிரியர்.கவிஞர்.இரா.ரவி
நூல் திறனாய்வு:கவிஞர் சி.விநாயகமூர்த்தி

தொல்காப்பியமும் அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகையும்,கவிதைக்கு
கூறும் இலக்கண விதிகள் வடிவத்துக்கு மட்டுமே

ஆயிரக்கணக்கில் இன்று வரை உள்ள சங்கப் பாக்களில்.ஒரு சில மட்டுமே நின்று நிலை
பெற்று காலத்தை வென்றுள்ளன. எடுத்துக்காட்டாக,"*யாதும் ஊரே! யாவரும்
கேளிர்!*என்னும் புறநானூற்றுப் பாடல்,கருத்துச் செறிவால் உலகெங்கும்
பரவியுள்ளது.

சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,பதிணென்கீழ்கணக்கு ஆகிய
முப்பத்தாறு நூல்களில் திருக்குறள் மட்டுமே உலகப் பொதுமறையானது அதன் கருத்துச்
செறிவால் தான்.

நமது கவிஞர் இரா.ரவி அவர்களின் ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு வரிகளும் செம்மொழித்
தமிழில் எளிய நடையில்,நெஞ்சையள்ளும் இலக்கிய வரிசையில் இடம் பெறுகிறது.

"இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்
என்பதற்கு இலக்கணம் வகுத்த வள்ளுவரே!"
என்று திருவள்ளுவரை இவர் குறிப்பிடுவது இவருக்கும் சாலப்பொருந்தும். வள்ளுவரை
அடுத்து பாரதிக்கும் புகழ்மாலை சூட்டுகிறார்.

அச்சமில்லை அச்சமில்லை என்று ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு முழக்கி."அச்சம் தவிர்!
என்று குழந்தைக்கும் அறிவுறுத்திய பாரதி,வாழ்விலும் அச்சமின்றி நடந்ததை நமது
கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார்.

"மகாத்மா காந்தியிடமும் மனதில் பட்டதை
"மறைக்காமல் உரைத்த மாவீரன் பாரதி" என்கிறார்.

மூவேந்தர் போல் தமிழை நேசித்த பாவேந்தர் பாரதிதாசனை
"வெண்தாடி வேந்தரின் கொள்கைப் போர் முரசு"
"டும்பக் கட்டுப்பாடு அன்றே பாடிய முதல்வர்."

என்று பல கோணங்களில் நமக்குக் காட்டுகிறார்.
சுதந்திரப் போராளி மாவீரன் நேதஜியை மறவாமல் நினைவு கூர்ந்து பாராட்டு மடல்
வாசிக்கிறார்.

"படித்துப் பெற்ற அய்.சி.எஸ்.பட்டத்தையே
"பறக்கும் பட்டமெனப் பறக்க விட்டவன் நீ"
"புரட்சியாளர்களின் பாடப் புத்தகம் நீ"
பொருத்தமான பொன்வரிகளால் போற்றி மகிழ்கிறார்
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பற்றி, புதிய தகவல்கள்,(க)விதையில்
வெளிப்படுத்துகிறார்

"காந்தியடிகள் கதர் உடுத்த வேண்டியதும்
கதராடை சுமந்து விற்றவர் பெரியார்"
"கள் மது ஒழிக்க வேண்டும் என்றதும் சொந்தக்
கள் மரங்களை வெட்டி வீழ்த்தியவர்"

ஏற்ற கொள்கைகளை செயலாக்கிய சிங்கத்தை,தங்கத்தை நிகர்த்த தனித்தமிழால்
குறிப்பிடுகிறார். கர்மவீரர் காமராசரை,

"அணைகள் பலகட்டி பசுமைப்புரட்சி புரிந்தாய்"
"தமிழ்வழிக்கல்வியை தடையின்றி வழங்கினாய்"
"குலக்கல்விக் கொடுமையை வேரறுத்த வேங்கை"
"பரந்த இந்தியாவின் தலைவராய்த் திகழ்ந்தவரே"
என்று புகழ் மகுடம் சூட்டும் இவர்.முத்தாய்ப்பு வரியை முத்தாக முடிக்கிறார்.

"காமராசர் காலம் தமிழகத்தின் பொற்காலம்"
"காமராசர் காலமானதால் காலமானது பொற்காலம்"
அன்னை தெரசாவை.
"அன்பின் முகவரியே! தொண்டின் இமயமே!
தொழு நோயாளிகளின் புகலிடமே!"
என்று அடுக்காக வர்ணிக்கும் நம் கவிஞர்
*"உன்னால் நோபல் பரிசு கௌரவிக்கப்பட்டது"*
என்று சரியாகக் கூறுகிறார்.
கவிஞர் கண்ணதாசனை
*"நயாகராவாய் பாடல்களைக் கொட்டியவர்…….*என்றும்" ஒரு திறந்த புத்தகம்
அவன் இரகசியங்களில்லா அதிசய மனிதன்"
என்றும் கவிதையில் ஓவியம் தீட்டுகிறார்.
பாட்டுக் கோட்டையாகிய பட்டுக் கோட்டையை
""வயிற்றுப்பசிக்காக பல தொழில் புரிந்தவன்
வயிற்றுப் பசிக்காக என்றும் கொள்கையை விற்காதவன்"

என்றும் அவன் கொள்கைக் கம்பீரத்தை பாட்டுத் திறத்தால் விளக்குகிறார்;.
உவமைக் கவிஞர் சுரதாவை,
"அவர் பாடாத உவமையே யில்லை"
அவர் பாடாத உவமை உவமையே யில்லை
என்று கவித்துவமுடன் கூறுகிறார்.
இலக்கிய ஞானி வல்லிக்கண்ணன் அவர்களை,
""மயிலிறகு வருடுவதுபோல் விமர்சனம் செய்தவர் ஆசை அறவே இல்லாத நவீன புத்தர்"என்றும்

புத்தமுதத் தமிழில் வித்தகரை விமர்சிக்கிறார்.

"கலாம் அறிவுக்கு சலாம்" என்று தலைப்பே கவிதை நயம் சொட்டுகிறது.

*"செய்தித்தாள் விற்று படித்து
தலைப்புச் செய்தியானவரே! *என்ற வரியில் முரண்தொடைச் சுவையுள்ளது.

"கண்ணகி நீதி கேட்ட மதுரைக்கு நீதிமன்றம் தந்தவரே"என்று

நன்றி மலர்கள் தூவி.நமது கவிஞர் வாழ்த்துகிறார்.

"சாதி வெறியால் செத்தவர்கள் போதும்
சாதி வெறி இனி செத்தால் போதும்.

என்று சங்கொலியை இங்கொலித்து,எங்கெங்கும் எதிரொலிக்க வைக்கிறார்.

"மைல் கல்லில் அழகு தமிழை அகற்றி
இந்தி பதித்த மந்திரிகளுக்கு பாடம் புகட்டுவோம்!

என்று கவிதை வாள் சுழற்றுகிறார்.
பெண்ணை நோக்கி
""மண்புழுவாய் நெளிந்தது போதும்
பெண் புலியாய் புறப்படு நாளும்"

என்று நீடு துயில் நீங்க, சூரிய வரிகளால் பாடுகிறார்.

""மாட்டுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி மனிதரிலே பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி?

என்று சாட்டை வரிகளால் சாடுகிறார்.
*உறவுகளின் சிகரம் தாய்!* கவிதையில்
தியாகத் திருவுருவம்!என்று உருகி உருகிப்பாடுகிறார். தலைவனைத் தந்தையாக்கிய
தலைவியே!

என்று துணைவியை வாழ்த்தும் இவர்

"என் கவிதைகளின் முதல் ரசிகர்கள்
என்னருமைக் கண்மணிகள்….
என்று பிள்ளைத்தமிழ் பாடுகிறார்,வெல்லத்தமிழில்,வெல்லும் தமிழில்.

நடந்தாய் வாழி காவேரி! என்று சிலம்பின் வரியைத் தலைப்பாக்கி,இன்றைய
நிலையெண்ணி,,நொந்து,வெந்து,சிந்து சிந்திக்கிறார்.

உடை நெய்தவன் உன் சாதியா?
உணவை விளைவித்தவன் உன் சாதியா?
இல்லத்தை எழுப்பியவன் உன் சாதியா?
காலணியைச் செயதவன் உன் சாதியா?
புல சாதிக்காரர்களின் பங்களிப்புதான் உன் வாழ்க்கை.

என்று சமத்துவத்தின் மகத்துவத்தை,ஆணியடித்து அழுத்தமுடன் நம் கவிஞர்
கூறுகிறார்.

பெண்ணியக் கவிதைகளையும் கண்ணியக்கவிஞர் திண்ணிய முறையில் பாடியுள்ளார்.

"கருவறையிலேயே கல்லறை கட்டும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டுவோம்"

என்று பெண்சிசுக் கொலைக்கெதிராக போர்க்கொடி தூக்குகிறார் நமது கவிஞர் இரா.ரவி
அவர்கள்.

பற்றி பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளார்.

"மனிதர்கள் மனசாட்சிக்குக் கூட பயப்படுவதில்லை:
பயம் வந்தால் நாடு நலம் பெறும்" என்கிறார்.

"சமாதானப் புறாக்களையே சமைத்துச் சாப்பிடும் நவீன சிபிச்சக்கரவர்த்திகள்"

என்று சிங்களப்படையை,கவிதை வெடிகுண்டால் தாக்குகிறார்.
"ஒட்டியிருப்பது ஒத்துவரவில்லையென்றால்

வெட்டிக்கொள்வதுதான் இருவருக்கும் நன்மை
என்று நிரந்தரத் தீர்வை சொல்கிறார்.அறிய வேண்டிய அரிய வாசகம்.

"உடல் நலம் பேணுவோம்” கவிதையில்"உணவே மருந்து" என உணர்த்துகிறார்.

தும்பிக்கையின் பலம் நம்பிக்கையில் உண்டென்று, மூத்தோர் மொழிந்தனர்" "மூன்றாவது
கை தன்னம்பிக்கை"என்கிறார் நம் கவிஞர். இரா.ரவி அவர்கள் தொண்டு வகையைப்
பட்டியலிடும் கவிஞர்.

"அன்னை தெரசா அளவிற்கு தொண்டு செய்யாவிட்டாலும் அண்டை வீட்டாருக்குத் தொண்டு
செய்தால் கூடப் போதும்"

என்கிறார் நம் கவிஞர் இரா.ரவி அவர்கள்.

ஆயள் காப்பீட்டுக் கழகத்தை,
"தலைவனை இழந்த குடும்பத்தைப் பாதுகாப்பவள்" என்று இவர் கூறுவது,நூறு விழுக்காடு
உண்மையே.

திங்கள் கிழமையைப் பற்றி எவரும் இதுவரை பாடியதில்லை.மிகமிக விரிவாக புதிய புதிய
செய்திகளோடு கவிதை விருந்து பரிமாறுகிறார்.

கழிவுநீரை உள்வாங்கி
நல்ல இளநீர் தருவது மரம்
நல்ல நீரை அருந்தி
கழிவு நீரைக் கழிப்பவன் என்று மனிதன் முகமூடியைக் கிழித்தெறிகிறார்.

மறத்தமிழன் என்று மார்தட்டுவோர்.மரத்தமிழன் என்று சொல்லவும் தகுதியற்றவர்
என்பதை, தோலுரித்துக் காட்டுகிறார்.

“நிலவு” கவிதையில்,நிறையப் படிமங்கள் நிழலாடுகின்றன. படிக்கும்போது மட்டுமல்ல,
நினைக்கும் போதெல்லாம் இனிக்கிறது.

“அனுபவப் பாடம் போதிக்கும் ஆசான் முதியோர்” கவிதையில் அத்தனை வரிகளும்

அருமை. சுhவே உனக்கொரு சாவு வராதா? என்ற கவியரசர் கண்ணதாசன் வரியைத்
தலைப்பாக்கி,விரிவுரை எழுதியிருப்பது அற்புதமானவை.

"சிந்தனைக்கு சிலவரிகள்" என்னும் நிறைவுக்கவிதையில் அத்தனை வரிகளும் சிந்தனை
எழுதியிருப்பது செந்தேன் மழையே.

மொத்தத்தில் "கவிதை அல்ல விதை " நூல்,வித்தகக்கவிஞர் பா.விஜய் அவர்கள்
குறிப்பிட்டது போல் விதைக்குள் விருட்சம்.

இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் அறிவூட்டும் அமுதக் கேணியாக மட்டுமல்ல,சிற்பக்
கூடத்தில் நுழைந்தது போல் இலையழகால் கவர்ந்திழுக்கிறது.

துளிப்பாக்கள் மூலமும்,இணைய தளம் மூலமும் அனைவராலும் அறியப்பட்டுள்ள
இவர்,உலகோரின் கவனத்தை ஈர்த்து விருது பெற்றுள்ளது மிகவும் பொருத்தமே.

கவிஞர் இரா.ரவி அவர்களின்,”கவிதை அல்ல விதை” நூலை அனைவரும் அவசியம் படித்து
கவிதை இன்பம் துய்த்து,அவர்கூறும் கருத்துக்களை நடைமுறைப் படுத்தினால், தமிழ்
மேன்மையுறம்: தமிழ்ச் சமுதாயமும் உலகமும் சிறப்படையும்.தொண்டுள்ளம் கொண்டுள்ள
கவிஞாh. இரா.ரவி அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.

-*சி.விநாயகமூர்த்தி*


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்