நூல்:சுட்டும் விழி
ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி
மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
தமிழ்த்துறைத் தலைவர்
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
தமிழ்த்துறைத் தலைவர்
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
சுட்டும்விழி எனும் நூல் கவிஞர்
இரா.இரவியின் பதினொன்றாவது
படைப்பு.பாங்கான படைப்புங்கூட.இலக்கியத்தேனீ
முனைவர் இரா.மோகன் அவர்கள்
இந்நூலுக்கு வழங்கியிருக்கும் அணிந்துரை அடி முதல் முடிவரை
புத்தகத்தை ஆராய்ந்து எழுதப்பட்ட அற்புத உரை.அட்டைப்பட
வடிவமைப்பிற்கு எனத் தனியாக ஏதேனும்
பரிசு அறிவிக்கப்படின், இந்த வருடத்திற்கான பரிசு
சுட்டும்விழிக்குத்தான்.அறிவுப்பூர்வமாய் வடிவமைத்திருக்கும் அரிமா முத்து அவர்களுக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்!சமூகச்சீர்கேடு,மது -மாசு கேடுகள்-என சூரியப் பார்வையினையும்,இயற்கை ரசனை,அதீத
அன்பு- என சந்திரப் பார்வையினையும் சுட்டிக்காட்டுவதனால்
மகாகவியின் பயன்பாட்டுச் சொற்றொடரான 'சுட்டும் விழி'- எனும் தலைப்பு
இந்நூலுக்கு பொருத்தமான ஒன்றே!
திறப்புவிழா!
புத்தகத்தைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே,அந்நியமொழியில்
பேசுவதுதான் ஆடம்பரம் என்று தவறாக எண்ணி
நடப்போர்க்கு நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் ஒரு துளிப்பா!
"தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்!
அம்மா! (ப.1)
தமிழியல்
உணர்வோடு தமிழின உணர்வு;சமூக
இழிநிலையோடு அரசியல் இழிநிலை;தாயன்போடு
தாரத்தின் அன்பு;மாசுக்கட்டுப்பாடு,நிதித்தட்டுபாடு ,நீதித்தட்டுப்பாடு,பணம் படுத்தும் பாடு-என பல்வேறு பாடுகள்
பக்கத்திற்குப் பக்கம் இடம்பிடிக்கின்றன.மூடத்தனத்தின்
முதுகெலும்போ ஹைக்கூவின் மூன்றாம் வரியில் கவிஞரால் முறித்துஎறியப்படுகின்றது
.இயற்கை அன்னை மீது கவி கொண்டிருக்கும் பாசமும் நேசமும் ஆங்காங்கே வெளிப்பட,தேசத்தலைவர்கள்
இடையிடையே வந்துபோக,இத்தோடு இரா.இரவியின் அநுபவத்துளிகள்
தேசியக்கொடியின் மூவர்ணமாய் நூல் முழுமையும் மிளிர்கின்றன.
கல்வெட்டும்
சொல்வெட்டும்;
சொற்களை மாற்றிப்போட்டு சுவைபட
ஹைக்கூ படைப்பது என்பது கவி இரவிக்கு
கைவந்த கலை.
"வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மஹால்!" (ப.35)
தாம் போகின்றபோக்கில் பார்க்கின்ற காட்சியை துளிப்பாவாக உருமாற்றுவதில் வல்லவர் இவர்.இதோ
ஒரு கண்ணீர்க் கவிதை!
"யாரும் வாங்காமலேயே
மலர்ந்தன பூக்கள்!
வாடினாள் பூக்காரி!(ப.33)
இலக்கிய
நயமிக்க மின்பா ஒன்று !
வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது மரம்
பூ உதிர்த்து! (ப.34)
ஊடல்-கூடல் என இரண்டினையும்
ஒருங்கே சுட்டிக்காட்டும் ஒப்பீட்டுத் துளிப்பா இதோ!
புறத்தில் கோபம்!
அகத்தில் இன்பம்!
அவள் பலாப்பழம்!
முரண்சுவை
மிக்க ஹைக்கூ;
கோடிகளும் இலட்சங்களும்
கோவிலின் உள்ளே!
வெளியே பிச்சைக்காரர்கள்!(ப.44)
நிலையாமையை
உணர்த்தும் ஹைக்கூ!
சிற்பி இல்லை!
சிற்பம் உண்டு!
எது நிலை? (ப.58)
இதனை வாசித்தபொழுது முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் இயற்கைச் சீற்றத்திற்குப் பின்னும் கம்பீரமாய் நிற்கும் ஐயன் வள்ளுவன் சிலையும்
,அச்சிலையை வடிவமைத்து செதுக்கிய சிற்பியான கணபதி ஸ்தபதி சமீபத்தில்
இந்நிலவுலகினை விட்டு நீங்கியதும்தான் நினைவிற்கு
வருகின்றது!
இதோ கல்வெட்டுக் கவிதை!
தமிழைக் காப்பதில்
பெரும்பங்கு வகித்தன!
பனைமரங்கள்!
என தாய்மொழிப்பற்றோடும் துளிப்பாக்கள் கவியால் படைக்கப்பட்டுள்ளமை
பாராட்டத்தக்க ஒன்று!ஹைக்கூத்திலகம் என்ற
சிறப்புப் பட்டத்தைப் பெற்று, இலக்கிய உலகிற்கு
பெரும்பணி ஆற்றிவரும் கவிஞர்
இரா.இரவியின் பேரும் புகழும் அலைகடல்
தாண்டி அவனி முழுதும் எட்ட
என் போன்ற இலக்கிய வாசகர்களின்
உளமார்ந்த வாழ்த்துக்கள்!
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக