படித்ததில் பிடித்தது


  • நூலின் பெயர் : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்
  • நூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன்
  • மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா
தோரண வாயில்:
வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம்
நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு. நாம் அறிந்தவரை ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி; சமூக நல இணையர் காந்திஜி கஸ்தூரி பாய்.நாமெல்லாம் வாழும் காலத்தில் இலக்கியத்துறையில் இணையராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் இரா.மோகன் – நிர்மலா மோகன் எனலாம்.வியாசமுனிவருக்கு,விநாயகரே முன்வந்து,தன் தந்தம் ஒடித்து, மஹாபாரதம் எழுதியது இதிகாச காலம்! இரா.மோகனின் படைப்புக்களை தமிழறிஞர் சேதுபாண்டியனின் உறுதுணையுடன் மோகனப்பிரியையான நிர்மலா அம்மையார் பகுத்து தொகுத்திருப்பது இக்காலம்.
நவரத்தின மாலை:
இலக்கியமுத்துக்களா?சிந்தனைத்துளிகளா?கருத்துக்குவியலா?தத்துவ
மழையா?ஆய்வுச்சுரங்கமா?வரலாற்றுக் கோர்வையா?தகவற் களஞ்சியமா?நவீனத்தின் பிரதிபலிப்பா?பொது அறிவு பெட்டகமா?- என உய்த்துணர முடியாத அளவிற்கு,மோகனக் குவியலிலிருந்து வைரம்,பவளம், வைடூரியம், ,கோமேதகம்,நீலம் எனத் தேர்வு செய்து ,அவற்றை அன்பெனும் அற்புத இழை கொண்டு கோர்த்து தமிழன்னைக்கு நவரத்தின மாலையைச்சூட்டியிருக்கின்றார் நிர்மலா மோகன்.
பிறைநிலவும் நிறை நிலவும்:
நாற்பது ஆண்டுகால இலக்கிய வாழ்வில் எண்பது நூல்கள் படைத்த இரா.மோகனின் நூல்களுக்கு பெருங்கல்வியாளர்களும்,அருங்கவிஞர்களும், மூதறிஞர்களும் வழங்கியிருக்கும் அணிந்துரைகள் விண்ணை அழகூட்டும் முகில் கூட்டங்களின் ஊர்வலமாய் நூலின்முதற்பகுதியை கவின்பெறச் செய்கின்றன. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மாணிக்கப் பரல்கள் அனைத்தையும் எடுத்து, பசும்பொன் சிலம்பில் இட்டு அதனை இரா.மோகன்,தமிழன்னையின் கமலத்திருவடிகளுக்கு அணிவித்து அழகு பார்த்த பகுதியே தொகுப்பாசிரியர்களால் நூலின் இரண்டாம் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. தற்கால இலக்கியங்களான சிறுகதை,நாவல்,கட்டுரை-இவற்றில் தலைசிறந்த புதுமைப்பித்தன், மு.வரதராசனார், கு.ப,ரா-போன்றவர்களின் படைப்புக்களை பேரா.மோகன் உள்வாங்கி, உணர்ந்து, அவற்றைப் பகுத்து, தொகுக்க, பின் பதிப்புச் செம்மல் திரு. மெய்யப்பன், இலக்கியப்பண்ணைக் காவலர் திரு அருணாசலம் இவர்களது சீரிய துணையுடன் இவரே பதிப்பிக்க, இவையே படைப்புலகம் எனும் இந்நூலில் இரண்டாம் பகுதியாக இழையோடுகிறது.
தராசும் தட்டும்:
மோகன் அவர்களின் இலக்கிய அனுபவப் பகிர்வுகளையும், பத்திரிகைப்பதிவுகளையும் நூலை வாசிப்போர் அலுக்காத வண்ணம் தொகுப்பாசிரியர்கள், நூலின் இடைப்பட்டப் பகுதியாக வைத்திருப்பது பாராட்டுக்குரியது. தன் வரலாறோடு,தமிழறிஞர்களின் வரலாறும் கூறுகின்ற இப்பகுதி அடிக்கரும்பின் இன்சுவையை ஒத்துள்ளது. இரட்டையர்களில் துவங்கி இணையரில் முடியும்மதிப்புரை மாலை பகுதி மூத்தப்பத்திரிகையாளர்களும் ,சாகித்ய அகாதமி, உயராய்வு மைய உறுப்பினர்களுமான தமிழன்னையின் பூரண ஆசி பெற்றவர்கள் முனைவர் மோகனது நூலை இலக்கிய தராசில் இட்டு எடை போட்ட பகுதியாகும்.
இரசித்ததும் ருசித்ததும்:
தொல்காப்பியர் துவங்கி துளிப்பா வரை,ஆத்திச்சூடி முதல் அக்னி சிறகு வரை,கம்பன் தொடங்கி கந்தர்வன் வரை,குமரகுருபரர் முதல் கு.ப.ரா வரை,மு.வ. முதல் முனைவர் இறையன்பு வரை ,பண்டிதமணி முதல் பரந்தாமனார் வரை ,கல்கி தொடங்கி கலைஞர் வரை -என மூத்த தலைமுறையினர் தொடங்கி முனைவர் பட்ட ஆய்வாளர் வரை அலசி ஆராயும் இலக்கிய அமுதசுரபி என்று இரா.மோகனின் படைப்புலகம் நூலைக் கூறலாம்.முனைவர் மோகனது கட்டுரைகள் அனைத்தும் கற்கண்டு!ஆய்வுரைகளோ கோலார்த்தங்கச் சுரங்கம்!நூலில் இடம்பெறும் இவரது நேர்காணல்களோ பாயாசத்தில் இடையிடையே பரவிக்கிடக்கும் முந்திரிப்பருப்பு! மேற்கோள்களாய் சுட்டப்படும் உள்,அயல்நாட்டு அறிஞர்களின் பழமொழி,புதுமொழிகள் எல்லாம் பச்சைக்கற்பூரமாய் நூல் முழுவதும் நறுமணம்
பரப்புகின்றன.
தோற்றமும் ஏற்றமும்:
இரா.மோகனின் படைப்புலகம் எனும்இந்நூலின் வழி குமரிக்கடலில் கொலுவிருக்கும் ஐயன் வள்ளுவன் சிலை போல் கம்பீர நடை, காஞ்சிப் பட்டின் இழையோட்டமாய் மொழியோட்டம்,செட்டி நாட்டு சமையலாய் நகைச்சுவை நறுமணம்,பழனி பஞ்சாமிர்தமாய் சொல் இனிமை -என ஆசிரியரின் எழுத்தாற்றலை உணரலாம்..ஒருவருக்கொருவர் போட்டியாய் இருக்கும் எழுத்துலக சமூகத்தில் இரு நூற்றாண்டு இலக்கியவாதிகளோடு நேசத்துடன் கை குலுக்கும்
முனைவர் மோகனின் பெருந்தன்மை பாராட்டத்தக்க ஒன்று.அறுபது அகவையிலும் எண்பது நூல்கள் படைத்துவிட்டோம் என்ற ஏற்றம் சிறிதுகூட இன்றி, இன்னும் ஏகலைவன் போல் மோகன் அவர்கள் குருவணக்கமும் பணிவும் கொண்டிருப்பது இலக்கிய உலகம் வியக்கத்தக்க ஒன்று.
மனதார..
ஓராயிரம் நூல்களைக் கற்று ,அவற்றை அமிர்தமாய்க் குழைத்து,அழகியப் பளிங்கு குவளையில் இட்டு, இலக்கிய ஆர்வலர்களுக்கு ஊட்டியிருக்கும் முனைவர் மோகன் அவர்களுக்கு முதலில் நன்றி.மூன்றாம் பிறையாய் மிளிரும் மோகனப் படைப்புக்களை, நிறை நிலவாம் நிர்மலா அம்மையார் அறிஞர் சேதுபாண்டியனின் துணையுடன் தொகுத்து, படைப்புலகம் நூலை வெளியிட்டிருப்பதற்கு அடுத்த நன்றி.ஒரு கும்பாபிஷேகம் பார்த்தால் பன்னிரு ஆண்டுகள் திருக்கோவில் தரிசனம் செய்த புண்ணியம் உண்டு என்பர்.இரா.மோகனின் படைப்புலகம் நூலைப் படித்தால் அவரின் எண்பது நூல்களையும் வாசித்துணர்ந்த அனுபவம் உறுதியாக கிட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை!இந்த இணையரின் இலக்கிய வாழ்வு முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் பகவதிஅம்மனின் மூக்குத்தி போல் ஒளிர என்போன்ற இலக்கிய வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கருத்துகள்