விழிகளின் விழுதுகள் நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன் நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி


விழிகளின் விழுதுகள்

நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்

நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி

வளர்ந்துவரும் இளைய கவி தம்பி மு .குருநாதன் பொதுவாக கவிஞர்களின் ஆரம்பக்காலக் கவிதைகள் காதல் கவிதைகளாகவே இருக்கும். பிறகுதான் சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் படைப்பார்கள் கவிஞர் மு .குருநாதனும் ஆரம்பக்காலக் கவிதைகளாக காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார் .சமுதாயக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் வடித்துள்ளார் .
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கின்றோம் .ஆனால் தமிழ் படித்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை .தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்க் காகிதங்களும் மதிக்கப்படவில்லை என்பதை ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார் .
தமிழுக்கு ஒரு விலை
ஆங்கிலத்திற்கு ஒரு விலை
காகிதக் கடையிலும்

மனிதன் இறந்தபின் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம்.தீயிற்கும் மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதனுக்கு வழங்கிட மனமில்லை. காரணம் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற மூட நம்பிக்கை .விழிதானம் வலியுறுத்தும் ஹைக்கூ

இரண்டு விழிகளில்
இரண்டு வாழ்க்கை
கண் தானம்

இன்றைக்கு நீதித் துறையில் அனேக வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன .வருடங்கள் பல ஆனபோதும் தீர்ப்பு வந்தபாடில்லை .வேதனையில் உள்ளனர் மக்கள் .தாமதமான நீதி அநீதிக்குச் சமம் .என்ற பொன்மொழியை நினைவூட்டும் ஹைக்கூ

நீண்ட காலம் போராடி
வென்றது நீதி பாவம்
வழக்காளிதான் உயிரோடில்லை

அவளுடன் சில நிமிடங்கள்
பேருந்தின் நெரிசலிலும் சுகமாகி
விட்டதெனக்கு அவளின்
தரிசனம் கிடைத்தபோது

காதலியின் கடைக்கண் என்ற பாரதிதாசன் வைரவரிகள் நம் நினைவிற்கு வருகின்றது .காதலியின் ஒரே ஒரு பார்வைக்காகக் காத்திருக்கும் காதலனை நம் கண் முன்னே கொடுவந்து நிறுத்திவிடுகிறார் நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்.
காதலைச் சொன்னதும் பெண்மை உடனே ஏற்றுக் கொள்வதில்லை .அதனை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .

கண்ணீர்க் காலம்
கோடைகால இடியைப்போல
வார்த்தைகளை என் மீது கொட்டிவிட்டாய்
என் காதலை உன்னிடம் சொன்னபோது
அந்த நிமிடம் நான் அதிரவில்லை
ஆச்சரியப்பட்டேன் பூவிலிருந்து நெருப்பா ?என்று

பூ ஒன்று புயலானது கேள்விப் பட்டுஇருக்கிறோம் .பூவிலிருந்து நெருப்பா ?
புதிய சொல்லைப் பயன்படுத்தி வெற்றி பெறுகின்றார் .கவிஞர் மு .குருநாதன்
சொற்கள் நடனமாடுகின்றன நூல் முழுவதும் .தமிழில் கவிதை எழுதிட எதுகை மோனை இயைபு மிக அவசியம் .இந்த இலக்கணத்தை இந்தச் சொற்களை வைத்தே காதலியை புதுவிதமாக வர்ணிக்கிறார் .

அவளொரு கவிதை
அவளது பல்லும் சொல்லும் எதுகை
இதழும் இதமும் மோனை
அவளது விழிகளும் இமைகளும் இயைபு
ஊடலும் கூடலும் முரண்

இளைஞர்கள் காதலுக்கும் காலத்தில் காலத்தை விரயம் செய்து விடுகின்றனர் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் போலப் பதிவு செய்கிறார் கவிதையில் .
கடந்த காலத்தை கரியாக்கி விட்டேன் காதலியே
உன் குறுநகையை மட்டும் குறிப்பெடுத்துக் கொண்டு

நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதனின் பெயரிலேயே குரு இருப்பதால் ,
ஆசிரியருக்கு உரிய அறிவோடு கவிதை எழுதிஉள்ளார் .புதிய சொற்கள் பல உள்ளது .காதல் கவிதைகள் நிறையப் படித்து இருக்கிறோம் .ஆனால் இவர் கவிதைகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது .
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் .அதுபோல எதிர்காலத்தில் மிகச் சிறந்த கவிஞராக வரப்போகிறார் மு .குருநாதன் என்பதைப் பறைசாற்றும் விதமாகக் கவிதைகள் உள்ளது .
கவிதைகளைப் படிக்கும்போது படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலரும் நினைவுகளாக மலர்வித்து விடுகின்றது .கவிதை. இதுதான் படைப்பாளியின் வெற்றி . மு .குருநாதன் உள்ளத்து உணர்வுகளை பதிவு செய்துள்ளார் .கல்லில் தேவையற்றப் பகுதிகளை நீக்கிவிட சிற்பம் பிறக்கும் .வசனத்தில் தேவையற்ற சொற்களை நீக்கிவிட கவிதைப் பிறக்கும் .உளியின் அடியை வலியைத் தாங்கிய கல்தான் சிற்பமாகின்றது. அதுபோல தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் கவிதைச் சிற்பம் படைத்து உள்ளார் .இலக்கிய உலகில் வெற்றிமாலைப் போட்டு
வரவேற்கப்படவேண்டிய கவிஞர் மு குருநாதன் வாழ்க ,வளர்க. இந்நூலில் காதல் கவிதைகள் பல உள்ளது.சமுதாயக் கவிதைகள் சில உள்ளது. எதிர்காலத்தில் சமுதாயக் கவிதைகள் பல .காதல் கவிதைகள் சில என்ற நிலைக்கு வர வேண்டும் .

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்