படித்ததில் பிடித்தது

நூல்: சில்லறை சப்தங்கள் (கவிதை)

ஆசிரியர்: வித்யாசாகர்

வெளியீடு: முகில் பதிப்பகம்


வணக்கம்

சிரியர் வித்யாசாகரின் உலக அசைவிற்கேற்ப அகபுற செயல்பாடுகளையும், வாழ்க்கை சூழலையும் கருத்தியல்பாகக் கொண்ட படைபிலக்கியத்தை அவர் வசிக்கும் குவைத்தில் இருந்தே நன்கு அறிந்தவள் என்கிற பெருமையில்.............. இதோ...... 'சில்லறை சப்தங்கள்' எனும் கவிதை பூங்காவிற்குள் நுழைந்து வார்த்தைகளின் வசியத்தில் வாழ்ந்து, ஒவ்வொரு தமிழ் மணம் கமழும் வரிகளிலிருந்தும் வாழ்வின் நிதர்சனத்தை கண்டு பிரம்மித்தவளாய், இலக்கிய நிழலில் நின்று இளைப்பாரிய பாலைக்குயிலாக நிறைவு பெற்ற மனதோடு மீண்டும் சற்றே யதார்த்தத்திற்கு வந்தமர்ந்து என் பணிந்துரையை எழுதுகிறேன்.

படித்த ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எழுத்தின் லாவகத்தையே காண முடிகிறது இச் சில்லறை சப்தங்கள் எனும் படைப்பு முழுதும். பொதுவாக, கவிதைக்கு கற்பனை தேவை என்போம், உண்மைதான்; ஆனால் அந்த கற்பனையினோடு கூட கண்ணியம் தேவை என்பதை இவரின் பலதரப் பட்ட கவிதைகளில் காணலாம். அதிலும் குறிப்பாகக் காதல் கவிதைகளில் காணலாம்.

இதுவரை, நான் இவரின் அதிக பட்ச படைப்புகளை படித்துள்ளேன் படித்தவை ஓவ்வொன்றும் படிப்போருக்கு அரிய பாடங்களை கற்பிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதில் சற்றும் மாறுபடவில்லை இந்த சில்லறை சப்தங்களும்.

உதாரணத்திற்கு ஒரு சில கவிதைகளை மட்டுமிங்கே மேற்கோள் காட்ட எண்ணுகிறேன். உடைந்த முகங்கள் எனுமொரு கவிதையில் –

//பேராசை சுயநலம் பொறாமை
இம் மூன்றையும் அன்பு என்ற
மூன்று எழுத்தினால் அடிமை படுத்தி விட்டால்;
வீடு மாத்திரமல்ல –
நாடே சுபேட்சம் பெற முடியும்// என்கிற வலிய கருத்தை எளிய வரிகளில் வடித்திருக்கிறார்.

ஜன்னலோர கம்பிகள் எனும் கவிதை இளஞர்களின் அவசர முடிவினையும், முதுமையின் வலியையும் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் உணர வைத்த உயிரோட்டம் நிறைந்த கவிதையாகும்.

உன் கல்லறையில் பூத்த புற்கள் எனும் கவிதையில் -

//கண்ணீரில் நனைந்த கல்லறையில்
உன்னை பிரிந்த சோகமே புற்களாய் பூத்திருக்க,
எனக்குள் இறவாத உன்
உயிர் கொண்டு தானே மெல்ல மெல்ல உயிர் துறக்கிறேன்// என்று காதலின் உள்ளம் கசியும் கண்ணீர் வரிகளை எத்தணை வலிமையாக பதிவு செய்திருக்கிறார்.

பெண்களின் இதயம் தைக்கும் இரும்புசிகள்' என்றொரு கவிதை. இந்தக் கவிதையினை கண்டிப்பாக பெண்கள் மட்டுமல்ல எல்லோருமே மிக கவனத்தோடு ஒவ்வொரு வரியாக உணர்ந்து படிக்கக் கேட்கிறேன். காரணம், உலகின் மொத்த பெண்களின் அவஸ்தையில் ஒன்றேனும் இக்கவிதையில் நிச்சயமாக இருக்கவே செய்யும்.

//பிறந்தவுடன் சலிப்பு!
வளர்ந்த உடன் மொட்டையடிப்பு!
வளரும்போதே சிறகருப்பு!
மலர்ந்ததும் விழா எடுப்பு!
நடக்கும் இடமெல்லாம் காம பார்வை முள் பதிப்பு!
பின்பும், முட்டி மோதி படிக்க செல்லவே
ஆயிரம் பல தடுப்பு// அப்பப்பா..... இவருக்கு தான் எத்தணை பரிதவிப்பு...." என பிரம்மிக்கும் அளவிற்கு ஒரு பெண்ணாகவே உருவெடுத்து எம் உணர்வுகளை வார்த்தைகளாக்கி, அதன் வலியையே கவிதையாக பிரசவித்திருகிறார் வித்யாசாகர்!

இப்படி இப்புத்தகமெங்கும் பெருமையாகவே பேசிச் செல்ல நீளும் கவிதைகளும், உள்ளத்தை பொங்குவிக்கும் உணர்வு பெட்டகமுமே இச் 'சில்லறை சப்தங்கள்' என்றால் அது மிகையில்லை.

என்றாலும், என் பங்கினை மனம் நிறைந்த அன்போடும் வாழ்த்துக்களோடும் மட்டுமிங்கே முடித்துக் கொண்டு, மொத்தத்தில் சில்லறை சப்தத்தின் சுகமான ராகதிற்குள் என் சுமைகளை இறக்கிவைத்த நிறைவோடு, மௌனத்தின் ஆழத்தில் முடியாத இவரின் படைப்புக்களை அசை போட்டவளாய் விடைகொள்கிறேன்.

நன்றிகளுடன்..

இவள்
கவிதாயினி ராணிமோகன்

கருத்துகள்

  1. அன்பு வணக்கம்,

    திரும்பிப் பார்க்கதவர்களை திரும்பிப் பார்க்கும் வண்ணம் நிறைய படைப்புக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளீர்கள். என் சார்பிலும் மிக்க நன்றியும் அன்பும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!!

    வித்யாசாகர்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக