படித்ததில் பிடித்தது



நூலின் பெயர்:பொற்றாமரை
நூலாசிரியர்:முனைவர் அம்பை மணிவண்ணன்
பதிப்பு:ஏ.ஆர்.பதிப்பகம்
மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில்:
இமயம் வடதிசையில் தீர்த்து வைக்காத இந்திரனின் பிரம்மகத்தி தோஷத்தை
தெற்கில் மாமதுரை நிவர்த்தி செய்ய ,பூத்தது பொற்றாமரை!அது புராண காலம்! 'கடையெழு
வள்ளல்கள்'-என்ற கூற்றைப் பொய்யாக்கி,எட்டாவது வள்ளலாகச் சுடர்விடும்
ஏ.ஆர்.அவர்களின் நல்லாசியுடன் முகிழ்ந்தது பொற்றாமரை!அது இக்காலம்!பொன்னான
அரும்பை,அறிவுக்கதிர் கொண்டு மலரச் செய்தவரோ அம்பை மணிவண்ணன்.பகலவனும் பால்மதியும்
விண்ணுலகில் தம் கடமையைச் சரிபாதியாய்ப் பிரித்துக் கொண்டு காலையிலும் மாலையிலும்
ஒளிர,பூவுலகிலோ பொற்றாமரையானது அல்லும் பகலுமாக அங்கயற்கண்ணி ஆலயத்தில் ஆன்மீக
ஒளியைப் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது
.கண்ணுக்கு விருந்தளிக்கும் பொற்றாமரையைத்
தங்கள் செங்கரங்களின் குவிப்பால் வாசகர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை
டாக்டர் ஏ.ஆர்.சீனிவாசன் தம்பதியரைச்சாரும்.பொற்றாமரை மலருக்குள் புகுந்து,இதழ்
பிரித்து, மகரந்தத் தூளில் பரவி, இனி அதன் நறுமணத்தை நுகர்வோமா?

கலைக்களஞ்சியமா?ஆன்மீகக்களஞ்சியமா?
கலை பாதி கதை மீதி;வரலாறு பாதி வாழ்வியல் மீதி;சிற்பம் பாதி- சீரிய
தத்துவங்கள் மீதி;நிழற்படம் பாதி- வரைபடம் மீதி;புள்ளிவிபரம் பாதி-புவியியல்
மீதி;ஓவியம் பாதி-காவியம் மீதி;ஆய்வியல் பாதி-அழகியல் மீதி-என ஆண்டாள் திருக்கோவில்
நெடுந்தேரின் வடம்போல் நூலின் பக்கங்கள் யாவும் ஆசிரியரின் திறத்தினால் சீராக
நகர்ந்து செல்கின்றது.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் மண்டபம்,கோபுரம்,சிற்பம்,ஓவியம்-இவையெல்லாம்
எக்காலத்தில்,எந்த வம்சத்தினரால்,எச்சூழலில்,எந்தக்கலைப்பாணியில்,என்னென்ன
அளவில்,எவருடைய உறுதுணையுடன் எதற்காக உருவாக்கப்பட்டன -என்று அவை தோன்றிய ரிஷி
மூலம்,நதிமூலம் அனைத்தையும் ஓர் ஆய்வியல் அறிஞரின் கண்ணோட்டத்துடன் அழகுறச்
சொல்லிச் செல்கின்றார் முனைவர் அம்பை மணிவண்ணன்.

தொலை நோக்கியா?நுண்ணோக்கியா?
குமரகுருபரர்,'தொடுக்கும் கடவுள்’- என்றுப் பாடத்துவங்கும் பொழுது
மீனாட்சியம்மை குழந்தை வடிவில் உருமாறி, எடுத்து வைத்த சின்னஞ்சிறு அடிகள் போல்
நூலாசிரியரின் மொழிநடை சிறு சிறு தொடர்களாயிருப்பதனால் வாசிப்போரின் மனதில்
நிற்கின்றது.ஆசிரியர் அம்பையின் விழிகள் சில வேளைகளில் தொலை நோக்கியாக,பல வேளைகளில்
நுண்ணோக்கியாகச் செயல்பட,கரங்களோ நீள அகல உயரங்களை அளக்கும் பொழுது அடிக்கோலாக மாறி
நகர்ந்து செல்ல,மனமோ ஒரு கதை சொல்லியாக மாறி மீனாட்சியின் செவிக்கருகில் இன்மொழி
பேசும் பசுங்கிளி போல் நூலை வாசிப்போர் காதருகே வந்து உரையாடத் துவங்கிவிடுகின்றது.

பிரமிப்பும் பிரமாண்டமும்:
*மீனாட்சியம்மன் தன் வலதுகாலை முன்னோக்கி வைத்து நிற்கும்
காட்சி,பக்தர்களுக்கு வெகுவிரைவில் வந்து அருள்பாலிக்கவே என்ற செய்தி
*மூர்த்திநாயனார் தன் முழங்கையினால் சந்தனம் அரைத்த நிகழ்வும்,அச்
சந்தனக்கல்லின் தோற்றமும்

*தர்மர் தன் சகோதரன் பக்கம் தீர்ப்பு கூறாமல் எதிராளி பக்கம் நியாயம் கூறிய
புருசா மிருகம் கதை

*தலைவலி தீர நாயக்கர் தலைநகரத்தை மாற்றிய செய்தி
*மனதில் கல்வெட்டாய்ப் பதியும் வரைபடங்களின் அமைப்பு(ப.30,35,41,110)
*கண்ணுக்கு குளுமையான திருக்கல்யாண மண்டப விதானம்(262-263),புஷ்ப அங்கி
அலங்காரத்தில் அன்னை மீனாட்சியின் கருவறைக் காட்சி(ப.88),அம்மனின் பட்டாபிஷேக
காட்சி(ப.78)


*இரு புராணக்கதைகளை அடக்கிய குதிரைச் சேவகன் சிற்பம்(ப.183),ஆயிரங்கால்
மண்டபத்திலும்(ப.179)வடக்கு ஆடி வீதியிலும்(ப.215)இடம்பெறும் இசைத்தூண்கள்

எனப் பட்டியலிட முடியாத அளவிற்கு நூலாசிரியர் அங்கயற்கண்ணி ஆலயத்தில்
அமைந்துள்ள சிற்பம்,ஓவியம் போன்றவற்றை ஆகமவிதிகள் குறித்த அறிவோடு சொல்லிச்
செல்லும்பாங்கு வியக்கத்தக்கது.

மனதார...
நூலில் இடம்பெறும் அளவியல் படங்கள் பதிப்பாசிரியரை ஒரு பொறியியல்
வல்லுனராக,சிற்பங்கள் ஒவ்வொன்றும் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞனாக,மண்டபங்களும்
விதானங்களும் பன்னாட்டு அளவில் விருது பெற்ற ஒளிப்பதிவாளராக எண்ணிப் பார்க்க
வைக்க,நுழைவாயில் தொடங்கி புது மண்டபம் வரை ஆசிரியர் தன் மொழிநடையால் தன்னோடு
வாசகரை அழைத்துச் செல்ல,பதிப்பாசிரியர் டாக்டர் ஏ.ஆர்.சீனிவாசன் ,ஆன்மீகத்தில் அதீத
ஆர்வம் மிக்க நூலாசிரியர் முனைவர் மணிவண்ணன் ஆகிய இவ்விருவரும் பொற்றாமரை நூல் வழி
வாசிப்போர் இதயத் தாமரையிலும் மலர்வது உறுதி!இவர்களிருவரது இலக்கிய வாழ்வு
மீனாட்சியம்மனது மாம்பழக்கொண்டையின் முத்துக்கள் போல் ஒளிர, என்போன்ற ஆன்மீகப்
பிரியர்களின் வாழ்த்துக்கள்!

கருத்துகள்