குகன் பக்கங்கள் இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி


http://guhankatturai.blogspot.com/2011/04/blog-post_15.html

குகன் பக்கங்கள் இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி
பக்கம் பக்கமாக எழுதப்படும் கவிதைகளை விட பல சமயம் இரு வரி, மூன்று வரி கவிதைகள் வாசகர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. அதில் குறிப்பாக நல்ல ஹைக்கூ கவிதைகள் படித்த நிமிடங்களை விட நம் மனதில் குடியிருக்கும் நிமிடங்கள் தான் அதிகமாக இருக்கும். உண்மையான கவிதைக்கு அது தான் வெற்றியும் கூட. அப்படிப்பட்ட வெற்றி ஹைக்கூ கவிதைகளை எழுதி, தொகுத்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். www.kavimalar.com என்ற இணையதளம் மூலம் இணையத்தில் பரவலாக பேசப்படுபவர்.

கடலில் விளையாடும் சிறுவனுக்கு ஒரு அலையை விட இன்னொரு அலை எப்படி பெரிதாக தெரியுமோ, இந்த நூலிம் இடம் பெற்று இருக்கும் கவிதை ஒன்றை விட ஒன்று அதிகமாக அளவிடப்படுகிறது. சுனாமி, அரசியல்வாதி, ஈழம், குழந்தை தொழிலாளிகள் இரா.ரவியை அதிகமாகவே பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த நூலில் பல கவிதைகள் இந்த நான்கை சுற்றி தான் வலம் வருகிறது.

உண்மையிலும் உண்மை
எழுத்து இடமாற்றம்
நகரம் – நரகம்


இன்னும் சில கவிதைகள் இன்றைய அரசியல் நிலவரத்தை பகடி செய்வது போல் வடிவமைத்திருக்கிறார்.

இலவச கியாஸ், டிவி சரி
இலவச மணமகன்
எப்போது ?


தமிழகத்தில் நடக்கவிருக்கும் எல்லா தேர்தலுக்கு இந்த கவிதை பொருந்த போகிறது.

வரும் முன்பே
பரப்பரப்பாய் பேசப்பட்டது
பெரியார் படம் !


நடிகர்கள் அரசியல் வரக்கூடாது என்று சொல்லுபவர்கள், நடிகர்கள் நடித்த படத்தை வைத்து அரசியல் நடத்துவதை இந்த ஹைக்கூ காட்டுகிறது.

கௌரவம் இழந்தது
கௌரவா டாக்டர் பட்டம்
நடிகைக்கு வழங்கியதால்


பணத்திற்கு பட்டம் வழங்கிய பிறகு, வானத்தில் பறக்கும் பட்டத்திற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போனதை எடுத்துரைக்கிறது.

ஊதிய உயர்வு
வறுமையில் வாடியதால்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு


கேட்டவுடன் ஊதிய உயர்வு பெற்றக்குடியவர்கள் நம் சட்டமன்ற உறுப்பினர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு ஹைக்கூ கவிதைக்கும் அழகான, மிகவும் பொருந்தக்கூடிய படங்களை போட்டு மிக அழகான புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.

சில இடங்களில் ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் கவிதைகள் இடம் பெற்றுயிருப்பதால், முதல் கவிதை ஏற்ப்படுத்திய தாக்கம் இரண்டாவது கவிதை ஏற்ப்படுத்தவில்லை.

ஹைக்கூ பிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

--

கருத்துகள்