வைகை மீன்கள் நூலாசிரியர் : டாக்டர் வெ.இறையன்பு திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திரா



வைகை மீன்கள்
நூலாசிரியர் : டாக்டர் வெ.இறையன்பு
திறனாய்வாளர் : முனைவர் ச.சந்திரா
கோபுர வாயில் :
வைகை மீன்கள் எனும் தலைப்பில் டாக்டர் வெ.இறையன்பு படைத்திருக்கும் குறுங்காவியமானது இளைய தலைமுறையினரை ஈர்க்கும் ஓர் இனிய நூல்.கவிதையும் கதையுமாக, சிறுகதையின் சீரிய ஓட்டத்துடன் ஒரு நாவலின் நளினத்துடன்,உவமையும் உருவகமுமாய்,படிமமும் குறியீடுமாய் புனையப்பட்ட இந்நூலை கதம்ப மாலை எனலாம்..மதுரை சொக்கநாதருக்காக,பூலோகத்தில் வந்து மீனாட்சி உதித்து, காத்திருந்து பின்னர் கரம் கோர்த்தது புராண சாட்சி!இருபத்தோராம் நூற்றாண்டிலும் காத்திருத்தலும் பொறுத்திருத்தலுமான உயரிய பண்பு நலன்களோடு கூடிய மாந்தர்கள் உலவுகின்றனர் என்பதற்கு வைகை மீன்களேசாட்சி. காதற்காவியமா ?மோதற்காவியமா?
சேற்றில் புரண்டாலும் மண் தன் மேனியில் ஒட்டாது காக்கும் திறன்,தான் அழுக்கைத் தின்று, தன்னைச் சுற்றியிருக்கும் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்கும் தன்மை,சூழலுக்கேற்ப வளைந்து,நெளிந்து கொடுக்கும் சுழிவு இவையெல்லாம் மீனினத்திற்கே உரிய உன்னத குணங்கள்.நதியில் நீந்தும் ஒரு சோடி மீன்கள் பாசக்கடலில் எவ்விதம் சங்கமாகின்றன என்பதே காவியக் கதை. இருமீன்கள் கொஞ்சிக்குலாவும் காதற்காவியமா?அல்லது சமூகத்துடனான மோதற்காவியமா? என்று உய்த்துணர முடியாத அளவிற்கு ஜெல்லி மீன்களும் சுறா மீன்களும் இடையிடையே பயணிக்கும் இக்குறுங்காவியத்தைவாழ்வோவியம் என்று கூட கூறலாம்.
மைய மண்டலம் :
சாதாரண மனிதனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஓர் இளைஞன் தன் பருவத்து ஆசைகளையெல்லாம் புறம்பே தள்ளி வாழ்ந்து கொண்டிருக்க, ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராகச் செல்லும் வேளையில், தொகுப்பாளினியாக அன்றைய விழாவில் உரையாற்றிய நங்கையின் திறன் அவன் மனதை ஈர்க்க,மேற்கூறிய இருவருமே குறுங்காவியத்தின் நாயகன் நாயகி.இருபது ஆண்டு காலம் பாதுகாப்பு பெட்டகமாம் இதயத்திற்குள் பூட்டிவைக்கப்பட்ட அதீத அன்பு எவ்விதம் வெள்ளமாக பெருகிப் பொங்கி வழிகிறது என்பதே காவியக் கதை.இந்த நேசநதியோட்டத்தின் இடையே புயற்காற்றும் சுழற்காற்றும் ஆற்றின் பாதையை எவ்வாறு திசை திருப்புகிறது என்பது தனிக்கதை.
இரத்த ஓட்டம் :
அகராதி முதல் கலைக்களஞ்சியம் வரை,கூட்டுப்புழு முதல் பீனிக்ஸ் பறவை வரை,தெருநாய் முதல் ஒட்டகம் வரை,மூக்கணாங்கயிறு முதல் திருமாங்கல்யக்கயிறு வரை,கைக்குட்டை முதல் கம்பளி வரை,கல்வி நிறுவனர் முதல் காவலாளி வரை -என நூலாசிரியர் இருவேறுபட்ட முரண் எல்லைகளைத் தொட்டுச் செல்வதை காவியத்தை வாசிப்போர் உணரமுடிகிறது.ஆசிரியரின் கரங்களில் எட்டிப்பழம் இனிக்கிறது;இலவு கூட பழுக்கிறது:பசுஞ்சாணி சிற்பமாக உருவெடுக்கிறது;இரும்புக்கோட்டை மணல் வீடாகின்றது;சுண்டுவிரல் மோதிர விரலாகின்றது;சித்திரம் கூட சித்ரவதைப்படுகின்றது;காதலோ கண்ணாடியாக பரிமளிக்கின்றது.
பொன்னூஞ்சல்:
காலத்தைத் தன் கரங்களோடு கோர்த்துக் கொண்டு ,உவமையையும் உருவகத்தையும் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு,காவியக் கதையோட்டத்தை ஆசிரியர் ,சீரிய மொழிநடையுடன் நகர்த்தும் விதம் வீட்டின் நடுக்கூடத்தில் இனிதாக அசையும் ஊஞ்சலின் நகர்தலை ஒத்திருக்கின்றது. கதாப்பாத்திரத்தின் உள்மனதிற்குள் புகுந்து ஒரு நுண்ணோக்கி போல் நூலாசிரியர் செயல்படுவதை பற்பல இடங்களில் காணமுடிகிறது.உதாரணத்திற்கு நாட்டுப்பண் இசைக்கப்படும் பொழுது ஒவ்வொருவரின் மனநிலை எவ்விதமாக உள்ளது என்பதை உரைக்கும் விதத்தில் இறையன்பு அவர்களின் உற்றுநோக்கல் திறன் புலப்படுகிறது.நூலின் நாயகன் மேடைச் சொற்பொழிவு பற்றிக் கூறும் ஐந்து பக்க கவிதையோட்டம் (21-25),'சிறந்த பேச்சாளராக ஆவது எப்படி ?'-என்ற நூலை வாசித்த நல்லுணர்வை ஏற்படுத்திவிடுகின்றது.கல்வியை கறிக்கோழியோடு ஒப்பிடும் பொழுதிலும் ,ஒரு வேளை உணவிலேயே தங்கள் குழந்தைகள் வளர்ந்துவிடும் என்று நம்பும் பெற்றோரின் அதீத நம்பிக்கை பற்றிக்கூறும் பொழுதிலும் ஆசிரியரின் நகைச்சுவைத் திறம் புலனாகின்றது.
உவமையும் உருவகங்களும் நூலாசிரியரின் கரங்களில் பூப்பந்து போல் துள்ளி விளையாடுகின்றன!தத்துவமொழிகளோ சரமாரியாய்ப் பொழிய, மொழிநடையோ தெள்ளிய நீரோட்டமாய் இக்காவியத்திற்கு மெருகேற்றுகின்றன.
சொல் விளையாடல்:
"அக்கரை சேர்க்கும் அக்கறையில் நான்
இக்கரையிலேயே இருந்து விட்டேன்!” (ப .121)
உயர் உவமைக்குச் சான்று:
தாமிரபரணித் தண்ணீராய்,விளக்குத் திரி போல்,
இழி உவமைக்குச் சான்று:
"வாழ்க்கை சிலருக்கு வழவழப்புத் தாள்
சிலருக்கோ அது கழிவறைத் தாள்"(ப.43)
தத்துவ மொழிகள்:
திருமணம்-
"சிலருக்கு திருப்புமுனை
பலருக்கு கத்திமுனை
சிலருக்கு பூமாலை
பலருக்கு மலர் வளையம்"(ப.88)
சீரிய மொழிநடைக்குச் சான்று:
"வாழ்க்கைப் பயணத்தில் வழிப்போக்கர்கள் பலர்;சிலர் கோலம் போல் வாசலிலேயேத் தங்கி விடுகின்றனர்;சிலரோ கம்பளமாய் வரவேற்பறை வரை வருகின்றனர்;சிலர் பாயாய் கூடம்வரை வர,வெகு சிலரே குத்துவிளக்காய் பூஜையறை வரை வந்து ஒளிர்விடுகின்றனர்."(ப.42)
உணவ__இதற்கு ஆசிரியர் கூறும் விளக்கம் :
"சமைப்பவர் கனிவு
பரிமாறுபவர் பரிவு
உண்பவர் உணர்வு
இம்மூன்றும் சேர்ந்ததே உணவு!" (ப.124
விதைப்பிற்கும் புதைப்பிற்கும்,இரு மனத்திற்கும் திருமணத்திற்கும்,ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் நூலாசிரியர் கூறும் இலக்கணம் அருமையிலும் அருமை.உதாரணத்திற்கு ஒன்று!
"ஆணுக்கு உலகம் அட்சயப் பாத்திரம்
பெண்ணுக்கு அதுவோ வடிகட்டி!"(ப.28)

மனதார ...
மனித குலத்தின் உயரியப் பண்புகளைப் பிரதிபலிக்க வந்த வைகைமீன்கள் சொல்நயம்,பொருள்நயம்,கவிநயம்-என இலக்கண,இலக்கிய உத்தியோடு அமைந்த ஓர் இணையற்ற நூல்.எவ்வித விரசமும் சரசமும் இன்றி ஒரு காதல் க(வி)தையை அதுவும் நூற்றியறுபது பக்க கதையை நதியோட்டம் போல் நகர்த்திச் செல்ல டாக்டர் வெ.இறையன்பு அவர்களால் மட்டுமே இயலும் என்பதற்கு வைகைமீன்களே சாட்சி!கரித்துண்டின் காத்திருப்பு வைரம்;;காதலின் காத்திருப்பு கரம் கோர்ப்பு!என்ற உண்மையினை விளக்க வந்த இந்த வைகைமீன்கள் இறையன்புவின் இலக்கிய வானில் விண்மீனாய் ஒளிரும் என்பதில் ஐயமுண்டோ?

கருத்துகள்