ஓநாய் சைவம் பேசுகிறது

ஓநாய் சைவம் பேசுகிறது
தமிழினத்தையே பூண்டோடு அழித்து விட்டு
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்கிறான்
நாட்டு மக்களைக் கொன்று குவித்து விட்டு
நாட்டை வளமாக்குவோம் என்கிறான்
தடை செய்யப் பட்ட விசக் குண்டுகளால்
தமிழினத்தை கரு அறுத்து விட்டு யோக்கியன் என்கிறான்
பன்னாட்டுப் படைகளுடன் தன்நாட்டு மக்களை
தரை மட்டம் ஆக்கிவிட்டு சைவம் என்கிறான்
பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்றும்
பாராமல் கொன்றுவிட்டு உத்தமன் என்கிறான்
எதிரி நாடுகள் கூட போர் விதி கடைப் பிடிப்பர் தன் நாட்டு
மக்களையே போர் விதி மீறிக் கொன்றவன் நல்லவன் என்கிறான்
பஞ்சமாப் பாதகங்கள் அனைத்தும் புரிந்து விட்டு
பாவம் நான் என்று நடித்து ஏமாற்றுகிறான்
இரண்டாம் ஹிட்லரான இவன் இன்று
உலக அரங்கில் உத்தமப் புத்திரன் நான் என்கிறான்
சிரித்தே கழுத்தை அறுக்கும் நயவஞ்சகன்
சீனாவோடும் கூட்டு வைத்து வெகுளி நான் என்கிறான்
ஆலயம் பள்ளி மருத்துவமனை என்றும் பாராமல்
அனைத்தின் மீதும் குண்டு போட்டவன்அப்பாவி என்கிறான்
அடப் பாவி நீயாடா அப்பாவி
அகில உலகக் கொடூரன் நீயடா
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது
மாற்றம் உனக்கும் உண்டு பொறுத்திரு

கருத்துகள்