மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திரா
நூல் :மணி விழா மலர்
முனைவர்இரா.மோகன்,முனைவர் நிர்மலா மோகன்
பதிப்பாசிரியர்கள் :கவிஞர் இரா.இரவி
முனைவர்.வனராசா இதயகீதன்
மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திரா
ஈரைந்து மாதங்கள் ஆகும் ஒரு கரு உலகத்தை தரிசிக்க
ஓரைந்து மாதங்களில் ஒர் உன்னத மலர் இலக்கிய உலகில் பூத்துள்ளது.”சும்மா இருப்பதே சுகம் ” -என்று மனிதர்கள் பொழுதைப்போக்கும் இக்காலத்தில் சுற்றியிருப்போர் ஏந்துபுகழெய்த முனைப்புடன் செயல்பட்டு அனுபவ மலர்களை அபூர்வ மாலையாகத் தொடுத்த பதிப்பாசிரியர்களாம் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கும் முனைவர் இதய கீதன் அவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களின் சார்பாய் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மலருக்குள் மலர் :
தெள்ளுதமிழ் பேசும் தென்பாண்டி நாட்டில் இலக்கிய தென்றலாய் உலா வரும் இணையரது மணிவிழா மலர் தனக்கு மட்டுமில்லாமல் தரணிக்கே நறுமணம் பரப்பும் தாழைமலர்.இணையரின் பண்புநலன்கள் ஒளிர்விடும் பொழுதில் இது பாரிஜாதமலர்.பட்டிமன்ற அனுபவங்கள் சொல்லும் வேளையில் இது இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர்.உள்ளத்திற்கு மருந்தாய் மகிழம்பூ போல அறிவுறுத்தலோடு கூடிய சில வாழ்த்து மடல்கள்.மயக்கும் மல்லிகையாய் கவிதைப் பூக்கள்.கற்பகச்சோலையில் மலரும் மந்தார மலர் போல் அயல்நாடு வாழ் அறிஞர்களின் ஆசியுரைகள்.மொத்தத்தில் கொன்றை மலர் போல அடுக்கடுக்காய் அழகிய இலக்கிய அனுபவங்கள்.
கதம்ப மாலை:
அன்பு கட்டளையாய் ” இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் ” எனும் குரல் ,”நான் வாழும் நாள் வாழிய” எனும் பாசக்குரல், “அந்தண்மை செல்வம் தேடு ” என ஆணையிடும் குரல் ,”எல்லைக்கோட்டை உற்று நோக்குக ” எனும் நேசக்குரல் ,”பதவி,விருதுகளை பொருட்படுத்தாமல் படைத்தல் வினைப்பாட்டில் கவனத்தைச் செலுத்துக ” எனும் ஆர்வக்குரல் -என அடுக்கு மல்லியாய் சற்றே வித்தியாசமான வாழ்த்துரைகள் .
பொற்றாமரை:
இணையரைக் குறித்து கவிஞர் பொன் ரவீந்திரன் எழுதியிருக்கும் கட்டுரை வாசிக்கும் அனைவரையும் ஈர்க்கும் பொலிவு நிரம்பிய கட்டுரை.மோகனமான இதனை கட்டுரை என்பதா ?கவிதை என்று சொல்வதா? சிறுகதை என யூகிப்பதா ?உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இக்கட்டுரை இந்த மலர்த்தொகுப்பில் பொன்னாய் மிளிர்கின்றது.
மலர்ச்சோலை :
இணையரின் இலக்கிய சமூகப்பொது வாழ்விற்கு சான்றாய் , சாட்சியாய் வண்ண வண்ண புகைப்படங்கள் உதகை மலர் கண்காட்சியாய் காண்போர் விழிகளை அதிசயிக்க வைக்கிறது.இலக்கிய மன்றம் முதல் சட்ட மன்றம் ,இசைத்துறை முதல் இதழியல் ,சின்னத்திரை முதல்வெள்ளித்திரை,கவிக்கோ முதல் கவிப்பேரரசு ,வேழவேந்தன் முதல் வித்தகக் கவிஞன் ,முன்னாள் மூதறிஞர் முதல் இந்நாள் ஆய்வியல் அறிஞர் வரை என அங்கிங்கெனாதபடி எல்லோர் இருதயத்திற்குள்ளும் இணையரின் இலக்கியவாசம்பரவியிருப்பதை உய்த்துணர முடிகிறது.
பூங்கொத்து :
இணையரின் மலர்த்தொகுப்பில் மனதைக்கவரும் மலர்க்கொத்துக்கள் இதோ !
“எண்பது நூல்கள்
இவருக்கு
எட்டாம் படி மட்டுமே
எட்டும் படியோ
பதினெட்டாம் படி .”_ கவிஞர் புவியரசு
வித்தகக் கவியின் வியப்பு !
“அசைச்சொற்களையும்
இசைச்சொற்களாய் மாற்றிய
அழகான கவிதை தொகுப்பு”- பா.விஜய்
பூச்செண்டு :
இவர்கள் இணையர்தான் என்பதனை நான்கே வரிகளில் ‘நச்’ -என்று உரைக்கிறார் குமுதம் பத்திரிகையாளர் ப.திருமலை
” பச்சை மருதாணிக்குள் மறைந்திருக்கும் சிவப்பு
கடல் நீருக்குள் ஒளிந்திருக்கும் உப்பு
உண்மைக்குள் மறைந்திருக்கும் நேர்மை
இதுபோல் தங்கள் வெற்றிக்குள்ளும் சகோதரி”
இதய மலர்கள் :
” மண் மூடிய விதையில் இருந்த என்னை கண்மூடாமல் வளர்த்தெடுத்த என் இரண்டாம் கருவறை” -என மூத்த மாணவராம் முனைவர் குமார் கூற ,”அன்பு அறிவு அடக்கம் இந்த மூன்றும் சேர்ந்த அபூர்வம் “- என அருள் தந்தை பிரான்சிஸ் சொல்ல, “இயன்றதைச்செய்தார் ; எழுந்து நிற்கிறேன் ” என ஆய்வு மாணவர் குருசாமி உணர்வு பொங்க உரைக்க இத்தனையையும் இதய மலர்கள் என்று கூறாமல் வேறு என்னவென்று பகர்வது ?
மலர் மாரி :
.
‘ஆயிரம் பிறை கண்டு அனைவரும் அதிசயிக்கதக்க வாழுங்கள்’ -என்பது முதுமொழியாய் இருக்க ,’ ஆயிரம் நூல்கள் படைத்து அறிவுத்தடாகத்தில் பேரின்பம் பொங்க மலருங்கள் ‘ -என்ற புதுமொழியைக் கூறி மதிப்புரையை நிறைவு செய்கிறேன்.நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக