புதிய ஹைக்கூ -

புதிய ஹைக்கூ - ( கவிஞர். இரா.இரவி) http://www.eraeravi.com/index.html

மனம் வருந்தியது
விணாய் போனதற்கு
திருஷ்டி பூசணி

ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு

மேடுகளைத் தகர்த்து
பள்ளம் நிரப்பு சமத்துவம்
பொதுவுடமை

விழி இரண்டு போதாது
வனப்பை ரசிக்க
வண்ண மலர்கள்

ஒய்வதில்லை
விண்ணும் மண்ணும் அலையும்
ஒய்ந்திடும் மனிதன்

வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை

குடியால் கோடிகள் திரட்டி
கோடித் துணி தந்தனர்
ஏழைகளுக்கு

புதிய பொருளாதாரம்
கல்வி தனியார் மயம்
மது அரசுமயம்

உருவமின்றியும்
தேசப்படுத்தியது வாழையை
காற்று

அன்றே அநீதி
ஆண்களுக்கு கை சிலம்பு
பெண்களுக்கு கால் சிலம்பு

இருப்புப் பாதையில்
இருப்பின்றி பயணம்
தொடர் பயணம்

கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை

யார் உயர் திணை
மோதி விழும் மனிதன்
கூடி வாழும் பறவைகள்

விளைவித்தன கேடு
கண்ணிற்கும் மனதிற்கும்
தொ்(ல்) லைக்காட்சிகள்

தரம் தாழ்ந்தால்
களையாகும்
கலை

மாடு செரிப்பதற்கும்
மனிதன் மகிழ்வதற்கும்
உதவிடும் அசைபோடுதல்

போராட்டம் நடிப்பு அரசியலில்
பேராட்டமே வாழ்க்கை
ஏழைகளுக்கு

கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கை

மனம் வருந்துவதில்லை
மங்கையர் சூடாததற்கு
எருக்கம் பூக்கள்

சாலை மூடியதும்
மரியாதை செலுத்தும் வாகனங்கள்
தொடர் வண்டிக்கு

புறக்குப்பை உரமாகும்
அகக்குப்பை
தாழ்த்தி விடும்

மெய்பித்தனர் திறமையை
பொய் வழக்குப் போடுவதில்
காவல் துறை

கருத்துகள்