https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12a1c9ad205c052c&attid=0.2&disp=inline&realattid=f_gc759y2l1&zw
கவிதை ஓவியங்கள் : நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் மு.சந்திரசேகர் DSP ஓய்வு


நூலின் அட்டைப்பட வடிவமைப்பு அழகாக உள்ளது. செந்நாப் புலவர் திருவள்ளுவர், மலர்கள், மயிலிறகு காட்சிக்கு இனிமையாக உள்ளது. காவல் துறையில் கவிஞர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் காவல் துறை துணை கண்கணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கவிஞர் மு.சந்திரசேகரின் ” கவிதை ஓவியங்கள்” வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன. ஆசிரியர் என்னுரையில் குறிப்பிட்டுள்ளது உண்மையிலும் உண்மை. அன்றைய இலங்கை வானொலியில் அவரது தந்தை பாடல்கள், வசனங்கள் கேட்டு மகிழ்ந்த போது தானும் கேட்டு மகிழ்ந்து தமிழ் மொழி மீது ஈடுபாடு வந்து கவிதை எழுதத் துவங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளாh. ஒரு காலத்தில் இலங்கை வானொலி தமிழ் பரப்பியது. இன்று இலங்கை அரசே இலங்கைத் தமிழர்களை வதம் செய்தது. உலக அரங்கில் குற்றவாளியாக நிற்கின்றது.


டாக்டர்.முத்து செல்லப்பன், கவிஞர் பழநி ஜெயச்சந்திரன் அணிந்துரை கவிதையால் அலங்கரிக்கின்றது. சிறந்த மரபுக்கவிஞர் கருமலைப்பழம் நீ திரு.சி.ந.தமிழ்ப்பிரியன் ஆகியோhரின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துத் தொடங்கி 81 கவிதைகளின் தமிழ்ப்பற்றோடு சமுதாய விழிப்புணர்வோடு கவிதைகள் பலவற்றை சொல் ஓவியமாகத் தீட்டி உள்ளார். அதனால் தான் கவிதை ஓவியங்கள் என்று பெயர் சூட்டி உள்ளார். அவருடைய நோக்கத்தை கவிதையிலும் கூறுகிறார் இதோ!


எனது நோக்கம்


நான் நாடறிந்த புலவனல்லன் மக்கள் பாடறிந்த தமிழன்
நாட்டின் ஓட்டைகள் அடைபடவே தமிழில் பாட்டுக்கள் நான் படைப்பேன்
மக்கள் குறைகள் களையப்பட்டால் உள்ளக் குமுறல்கள் நிற்கும் என்பேன்.


இந்த உணர்வு தான் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இன்றைய தேவையாகும். கவிதை என்ற பெயரில் இயற்கையை அளவிற்கு அதிகமாக புகழ்ந்து விடுத்து, அலங்காரம் செய்வது விடுத்து, மக்கள் துயர் நீங்கத் தீர்வு கூறி படைக்க வேண்டும். அந்த வகையில் வெற்றி பெறுகிறார் நூலாசிரியர் கவிஞர்.மு.சந்திசேகர்


இன்றைக்கு ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னியை அபகரித்து சம்பாதிக்கும் இடைத் தரகர்களை கவிதையால் சாடுகின்றார். ஏழைகள் பலர் குருதி விற்று, கிட்னி விற்று இன்னும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, பசி போகக் வேண்டிய அவல நிலையை கவிதைகளில் சுட்டிக் காட்டுகின்றார்.


கர்ப்பத் தடைக்குக் காசுகள் கிடைப்பதால்
கல்யாணமாகக் காளைகளும் காயடித்துக் கொள்கின்றனர்
.


நாட்டில் உள்ள வறுமையை படம் பிடித்து காட்டுகின்றார். இது கற்பனையல்ல. நடக்கும் உண்மை.


காக்கிச் சட்டைக்காரர்களிடம் கருணை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும், அது தான் நாட்டு நடப்பு. ஆனால் இந்த நூலாசிரியர் கருணை என்ற தலைப்பில் கவிதை எழுதி மனித நேயத்தை மட்டுமல்ல, பறவை நேசத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். விதிவிலக்கான காக்கிச்சட்டைக்காரர் நூலாசிரியர்.


கருணை


ஆடிக்காற்றே, பசுமரங்களைப் பகடைக்களாயாய் உருட்டுபவளே அந்தப் பட்டமரத்தை மட்டும் விட்டு விடு, அதில் ஜோடிக்கிளிகள்
தம் குஞ்சுகளுடன்

வேண்டுகோள்
விழிப்போடு நெருப்பாய் எழு,செழிப்போடு வாழ் – தமிழா
களிப்போடுழை, கனிபோல் மொழி இனிதாகவே இரு
அன்பே கல்வியே விழி – வெல்வமே குவி
புண்மையை ஒழி – தம்பி வன்மையே பலம்
வலிமையை திறம், மென்மையே ஒழி


இப்படி விழிப்புணர்வு விதைக்கும் கவிதைகள் பல நூலில்; உள்ளது. தன்னம்பிக்கை விதை விதைக்கும் கவிதைகளும் நூலில் உள்ளது.


இன்றும் புதிதாய்ப் பிறப்பெடு
உதிர்ந்த சிறகுகளுக்காக எந்தப் பறவையும்
ஒப்பாரி வைப்பதில்லை
புதிய சிறகுகளை கோதிவிட்டுக் கொண்டு குதூகலிக்கின்றது
உதிர்ந்த இலைகளுக்காக எந்த மரமும் மரணித்த விடுவதில்லை
கடந்த காலச் சேதங்களால் சிதைந்து சீரற்றுப் போகாதே
இன்று புதிதாய்ப் பிறப்பெடு, புதிய சிகரங்கள் நோக்கிப் புறப்படு


இந்த வரிகளைப் படித்த போது ஈழத்தில் ராஜபட்சேயின் வெறியால் சிதைந்து போன நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் என்ற நினைவிற்கு வந்தனர். அவர்கள் வாழ்வில் வசந்தம் வர வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்களின், படைப்பாளிகளின், ஆசையாக உள்ளது. நூலாசியரியர் கவிஞர் மு.சந்திரசேகர் அவர்களுக்கு உள்ள மனிதநேயத்தை, ஈரமனசை
காவல் துறையில் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது ஆசை.


நூலாசிரியர் காவல் துறையிலிருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டாலும், பணியாற்றிய போது தான் கவிதைகளை எழுதி உள்ளார். பல கவிதைகளில் எழுதிய வருடத்தை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.


புதுக்குறள் என்ற பெயரில் சில மாணவர்கள் திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்து உள்ளார். ஆனால் நூலாசிரியர் கவிஞர் மு.சந்திரசேகர் புதுக்குறள் என்ற தலைப்பில் நல்ல பல கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.


பொருள்கேட்டுப் பெண்கொண்டார் இல்லம் அன்பின்றி
அருளின்றி அல்லற் படும்.
இல்லத்தில் உன் வரவை எதிர்பார்ப்பார் என்றெண்ணி
மெல்லவே வாகனத்தை ஓட்டு
காடு வளர்த்திட நாடும் வளர்ந்திடும்
காடழிய அழியுமாம் நாடு
மற்றொரு கவிதையில் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கின்றார்.
நட்பினைக் காட்ட சால்வையிட்டு
நயந்தே வஞ்சிக்கும் தோழமையும்
நாவலிக்க வசைபாடி நல்லோர் தம்மை
நாள்தோறும் தூற்றுகின்ற காட்சி கண்டோம்


நாடாள்வோர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விலைவாசிகளை குறைத்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நடப்பது என்ன? எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கு பதில் அறிக்கை விடுவதிலேயே நேரத்தை விரயம் செய்து வருகின்றனர். இப்படி பல சிந்தனைகளை கவிதை விதைத்து விடுகின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் மு.சந்திரசேகர் அவர்கள் காவல்துறையில் அரிதாகப் பூத்த குறிஞ்சிப் பூ வாழ்த்துக்கள்.

கருத்துகள்