மதகுப் பலகைகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமதி
நூலின்அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. நன்றி புதுச்சேரித் தோழர்களுக்கும் புலம் பெயர்ந்த தோழர்களுக்கும் என ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. சிறுகதை ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது இன்று சிறுகதை நசிந்து விட்டதோ? என்று எண்ணுமளவிற்கு சுருங்கிவிட்டது. ஒரு நிமிடக் கதை, அரை நிமிடக் கதை, அஞ்சல் அட்டைக் கதை என சுருங்கி நகைச்சுவைத் துணுக்ககை கதை என்று சொல்லும் காலத்தில் சிறுகதை எப்படி? எழுத வேண்டும் என இலக்கணம் கூறுவது போல இந்நூல் வந்துள்ளது. நூல் ஆசிரியர் கவிமதி துபாயில் வாழ்ந்தாலும் தனது குழந்தைப் பருவத்து நிகழ்வுகளை உணர்வுகளை சிறுகதையாக்கி இருக்கிறார்கள். 21 சிறுகதைகள் இந்நூலில் உள்ளது. ஒவ்வொரு சிறுகதையையும் ஒருவரியில் சொல்வதென்றால், 1) கும்பகோணம் தீ விபத்து நினைவூட்டுவது 2) உலகமயம் தாராளமயம் காரணமாக அடையாளத்தை தொலைத்தது, 3) பண்பாட்டுச் சீரழிவு செய்வோருக்கு சவுக்கடி 4) பேராசை பெருநஷ்டம், நஷ்டத்திலும் சில நன்மை. 5) இனிமையான இலங்கைக் தமிழ் பேச்சு கற்கண்டு தோற்றுப் போச்சு 6) பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு கன்னத்தில் அரை, இப்படியே நூலில் உள்ள ஒவ்வொரு கதை பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆசிரியரின் நல்ல முயற்சி இலக்கியம் என்பது நடைமுறை வாழ்வை எடுத்து இயம்புவது மட்டுமல்ல மனிதனை செம்மைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு செய்தி உள்ளது. மனிதனை நெறிப்படுத்தும் வாழ்வியல் கருத்துக்களின் பெட்டகமாக உள்ளது. இவருடைய நடை, தனி நடை எவரையும் பின்பற்றாத புதிய நடை அது மட்டுமல்ல எளிதில் அனைவருக்கும் புரிந்திடும் எளிய நடை, இதற்காகவே கதை ஆசிரியரை பாராட்ட வேண்டும். கவிமதி என்பது புனைப் பெயர் தான் என்றாலும் காரணப் பெயரோ? என எண்ணத் தோன்றுகிறது. கவிதை நடையில் கதை சொல்கிறார். கவிதை படிக்கும் போது கிடைக்கும்
இன்பம் கதை படிக்கும் போதும் கிடைக்கின்றது. அது தான் நூலின் வெற்றி நவீன கதையாசிரியர்கள் இன்று வலிய ஆங்கிலச் சொற்களை கலந்து கதை எழுதுவதை பார்க்கிறோம். ஆனால் நூலாசிரியர் கவிமதி ஆங்கில சொற்களை வலிந்து பயன்படுத்த வில்லை இதற்காகவே பாராட்ட வேண்டும். ஆங்கிலச் சொற்களைக் கலந்தால் தான் கதை இயல்பாக இருக்கும் என வரட்டுத்தனமாக வாதிடுபவரின் தலையில் கொட்டும் வண்ணம் நல்ல தமிழில் நடையில் வந்துள்ளது. சிறுகதை பிரியர்களுக்கு இந்நூல் ஒரு இலக்கிய பலா.கதைகளிடையே வாசிப்பு உலா சென்றால் உள்ளம் மகிழ்ந்திடும். சிறுகதைகளின் பெயரையே தனியாக ஆய்வு செய்யலாம்.
இலக்கியத்தரமான தலைப்புகள் இக்கதைகளில் சில நிகழ்வுகள் ஆசிரியர் தன் வாழ்வில் நடந்த சில உண்மை நிகழ்வுகளையும் கதையாக்கி இருப்பதால் கதைகள் உயிரோட்டமாக இருக்கின்றன. படிக்கும் வாசகர்களுக்கு போரடிக்காமல் எப்படி? கதை சொல்ல வேண்டும் என்ற வித்தையை நன்கு கற்று இருக்கிறார். ஆசிரியரின் திறமைக்குச் பறை சாற்றும் விதமாக உள்ளது பாராட்டுக்கள். நல்ல தமிழ் சொற்களை ஆசிரியர் பயன்படுத்தி இருப்பதற்கு பதச்சோறு போல ஒரு உதாரணம் “பதிவுக்காக” என்ற 18வது கதையில் “பாஸ்போர்ட்” என்ற ஆங்கில சொல்லை பயன்படுத்தாமல் “கடவுச்சீட்டு” என்ற நல்ல தமிழ்ச்சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். கதை படிப்பது போல இல்லை நேரடியாக காட்சிகளைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றார். கதையில் வரும் பாத்திரங்கள் நம் மனக்கண் முன்னே வந்து விடுகின்றன. சிறுகதை உலகில் சிறந்த இடம் உறுதியாக உண்டு ஆசிரியருக்கு தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி அய்யா
பதிலளிநீக்குபடித்தேன் பரப்புரை செய்துவிட்டேன்
தொடர்க