கில்லாடி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef55a39a7cdde&attid=0.3&disp=inline&realattid=f_gbul22w22&zw
கில்லாடி* மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் சு.நயினார்


சிறுகதை இலக்கியம் நலிந்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. நூல் ஆசிரியர் ஒன்பது சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி சிறுகதை இலக்கியத்திற்கு வளம் சேர்த்து இருக்கிறார் என்றால் மிகையன்று. சிவகாசி திரு.அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூhயில் தமிழ் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே சிறுகதைகளும் வடித்து இருக்கிறார். பாராட்டுக்குரிய பணி .

அரசியலில் மாற்றுக் கருத்து உடையவர்களாலும் மதிக்கப்படக்கூடிய எளிமையின் சின்னமாகத் திகழக் கூடிய திரு.இரா. நல்லகண்ணு அவர்களின் வாழ்த்துரை தனி முத்திரை பதிக்கின்றது. சிறந்த எழுத்தாளர் மணிக்கட்டில் பொட்டலில் வாழும் இலக்கியம் குன்று திரு. பொன்னீலன் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. சிவகாசியில் வாழும் கவிஞர் செ.ஞானன் ஆய்வுரை நுட்பமாக உள்ளது.

பிரபல எழுத்தாளர்கள் பலர் கதை எழுதும் போது பிராமணர் இல்லங்களில் நடைபெறும் மொழியில் மோசமான தமிங்கிலம் பயன்படுத்தி தமிழைச் சிதைந்து வரும் மொழிநடையை கையாண்டு இது தான் சிறுகதை என போலியாக தம்பட்டம் அடித்து வரும் காலத்தில் உழைக்கும் மக்களின் இயல்பான மொழியில் பதிவு செய்தது பாராட்டுக்குரியது. குறிப்பாக ஒவ்வொரு கதையிலும் வாசகனுக்கான செய்தி உள்ளது. இலக்கியம் என்பது மக்களை நெறிப்படுத்துவதாக இருக்க வேண்டும். மிகச்சிறப்பான அட்டைப்படம் உள்ளடக்கம் நேர்த்தியாக உள்ளது.

“காத்தாடி” என்ற முதல் கதையில் வரும் நாயகன் பெயர் காத்தாடி, முதலாளி வர்க்கத்திற்காக உண்மையாக ஓடோடி உழைத்தவன், உழைக்கும் போது விபத்தால் உயிருக்கு போராடியவனை ஏமாற்ற, முதலாளி வர்க்கம் நடிக்கும் நடிப்பை தோலுரித்து காட்டுகிறார். கட்டிடத் தொழிலாளிகளின் பேச்சு மொழியிலேயே பதிவு செய்தது கூடுதல் சிறப்பு. அன்றும், இன்றும் என்றும் முதலாளிக்ள முதலாளிகளாகவே இருக்கின்றனர். மனிதனாக வேண்டும் என்பது ஆசிரியர் ஆசை.

“காசோலை” என்ற கதை தாத்தா- பேரன் உறவை, பாசத்தை, கூட்டுக் குடும்பத்தின் உச்சத்தை, பின் மகனே தந்தையை உதாசீனப்படுத்தும் அவலம் “முதியோர் இல்லங்கள்” பெருகி வரும் அவலத்தைச் சுட்டும் அழகிய சிறுகதை. படிக்கும் போது நம் கண்ணில் கண்ணீர் வந்து விடுகின்றது. இது தான் ஆசிரியரின வெற்றி. உணர்ச்சியமயமாக உள்ளது. உணர்வுகளை நன்கு படம் பிடித்துள்ளனர். படிக்கும் போது நம் தாத்தா நம் நினைவிற்கு வந்து விடுகிறார்.

“தெருவோடு” என்ற கதையில் செத்த பிணம் செல்லக் கூட அனுமதி மறுக்கும் மனிதநேயமற்ற செயலுக்கான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தோட்டம் தொலைவு” என்ற கதையில் தந்தை இறந்ததும், மகளின் கல்வி முற்றுப்பெறும் அவலத்தைச் சுட்டுகிறார். “கல்லுக்குள் ஓசை” கதையில் காக்கா கதை, நரிகதை புதுமையாகச் சொல்லி, பறவை, விலங்கு ஏமாற்றி பிழைக்கவில்லை, உழைத்து வாழ்கின்றன என உணர்த்தி இருக்கிறார். மனிதன் தான் ஏமாற்றி வாழ்கிறான், மாற வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“தோப்பும் துரவும்” கதையில், வளர்த்த தன் மகன் பண்பாடு தேய்ந்தது கண்டு தற்கொலை முயற்சி செய்யும் கிராமத்து தாயின் உள்ளத்து உணர்வுகளை மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார். “சொந்தங்கள்” கதையில் அறுதலி என்று இளம் விதவையைச் சொல்வதற்கு கண்டனத்தைக் கூறி பொட்டு வைத்துப் பார்க்கிறார் கதை ஆசிரியர் “கில்லாடி” என்ற கதையில் கில்லாடித்தனத்தை மெச்சி, உடனே சைக்கிள் வாங்கி கொடுக்கிறார் மாமா. உழைப்பால் கார் வாங்கும் அளவிற்கு வளர்கிறான். “வாமடை” என்ற கதையில் அண்ணாமலை பால்பண்ணை, பள்ளிக்கூடம், சொசைட்டி என ஊரை வளப்படுத்துவதை பொறுக்காமல் பேசும் பேச்சுக்கள். கடைசியில் கொலை செய்யும் கொடூரம் என இப்படி நூல் முழுவதும் உள்ள ஒவ்வொரு கதையிலும் கிராமத்து வாழ்க்கையை, பேச்சை, பண்பாட்டை, மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார். வட்டார வழக்கு மொழி நன்கு வருகின்றது ஆசிரியருக்கு.

நூலாசிரியர் கிராமத்தில் வளர்ந்தவராக இருக்க வேண்டும் இல்லை என்றால் கிராமத்து மொழியை இவ்வளவு இயல்பாக பதிவு செய்ய முடியாது. பல்வேறு பாத்திரங்கள் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொரு செய்தி சொல்கின்றன. ஒன்பது சிறுகதைகளும் நவரத்தின மாலையாக உள்ளது. நூலை படிக்கும் போது நமக்கு கதை வாசிப்பதாக, படிப்பதாக தோன்றவில்லை. நிஜமாக கிராமத்தில் வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. நம் கண் முன்னே நடப்பது போன்று உணர்கின்றோம். அது தான் நூலாசியர் வெற்றி. கதைகள் முழுவதும் உழைக்கும் வர்க்கம் ஏமாளியாக இருக்கக் கூடாது. விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். படிப்பதால் பண்பாடு இழக்கக் கூடாது. முhடாக உழைத்தாலும் முதலாளி வர்க்கத்திற்கு நன்றி இருப்பதில்லை. எல்லா மனிதர்களையும் சமமாக மதிக்கும் சமூக நீதி வேண்டும். பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் உலகில் இல்லை. இப்படி பல்வேறு செய்திகள், கருத்துக்கள் நமக்கு கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சிறுகதை இலக்கியத்தில் “கில்லாடி” நூலுக்கு சிறந்த இடம் உண்டு. “கில்லாடி” நூல் எழுதிய ஆசிரியர் கவிஞர் சு.நயினார் “கில்லாடி” என்பதை நிரூபித்துள்ள நல்ல நூல் பாராட்டுக்கள் தொடர்ந்து தொய்வின்றி எழுதுங்கள்.

கருத்துகள்