நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129fae274dcc4cdf&attid=0.2&disp=inline&zw
நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


தொகுப்பாசிரியர் : கவிஞர் மணிமேகலை நாகலிங்கம்


“இந்நூல் உணர்வுகளை புரிந்து கொள்ளும் உயரிய உள்ளங்களுக்கு” என்று காணிக்கை செய்துள்ளார். உண்மை தான் மனைவி இறந்த வீட்டிலேயே மறுமணத்திற்கு பெண் தேடும் மாப்பிள்ளைகள் மலிந்து விட்ட காலம் இது. ஆனால் எங்கோ பிறந்து, வளர்ந்து, வந்து, கணவன், குழந்தைகள் என தியாக வாழ்க்கை வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவாக கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் தொகுத்து உள்ள ஹைக்கு கவிதை நூல். முன்னனி ஹைக்கூ கவிஞர்களின் தலா மூன்று கவிதைகள் நூலில் உள்ளது. தலா ஒரு ஹைக்கூ மட்டும் தங்களின் ரசனைக்காக எழுதி உள்ளேன்.


என்னைப் பொருத்தவரை ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் அவளுக்கு மறுமணம் அவசியம். ஆனால் ஓர் ஆண், குழந்தைகள் இருக்கும் போது மனைவி இறந்து விட்டால், மறுமணம் செய்யாமலே அவரின் நினைவாகவே வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. குழந்தைகளுடன் ஒரு தந்தை மறுமணம் செய்யும் போது குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகின்றது. தந்தையின் மறுமணத்தின் காரணமாக அல்லல்பட்ட குழந்தைகள் எண்ணிலடங்காதவை.என் வாழ்வில் நடந்த உண்மை. என் தாத்தா மறுமணம் செய்து கொண்டதால் பேரனாகிய என் வாழ்க்கை வரை அந்த பாதிப்பு தொடர்ந்தது. அந்த வலி என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. மறுமணம் செய்யும் ஆண்களையே வெறுத்தேன். ஹைக்கூ கவிதை சிறந்த வடிவம் என்பதை உணர்த்திடும் நூல். மனைவியின் மேன்மையை மகாகவி பாரதி சொன்ன வைர வரிகள் நூலின் பின் அட்டையில் உள்ளது.


ஓ மனிதர்களே மண்ணுக்குள் எல்லா உயிர்களும்
தெய்வமென்று பேசுகிறீர்கள் அது உண்மையென்றால்
நீங்கள் மாலையிட்டு கைபிடித்த மனைவியும் ஒரு தெய்வமில்லையா?


கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் மறைந்து விட்ட மனைவியின் நினைவாக இந்த கணவன் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது. மனைவியின் நினைவு நாட்களில் ஏதாவது தொண்டு செய்யுங்கள்.


புத்தகம்
உள்ளே மயிலிறகு
கண்ணாய் நீ – ஒவியக்கவிஞர் அமுதபாரதி


உதிரும் ஒவ்வொரு பொழுதும்
மீண்டும் வரப் போவதில்லை
உன்னை மாதிரி – வண்ணை சிவா


வருடங்கள் கழிந்தும்
சரியாய் அடையாளம் சொன்னது
அவளின் ஓரப்பார்வை – ஜி.மாஜினி


மரணம் செத்துப் போனது
காதல் முன்னே
யமுனைக்கரை தாஜ்மகால் – துறவி


ஒருவருக்கும் தெரியாமல்
ஒளிந்திருக்கிறாள்
மனதுக்குள் அவள்-சிவபெருமான்


உளி வடிக்கா
உயிர் சிலை
இதயத்தில் அவள் – உ.பாலஹாசன்


எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் ரேகை -அறிவுமதி


நானும் அவளும்
பிரிவதில்லை
புகைப்படத்திலிருந்து – அய்யப்பன்


அறைகிறேன் என்னையே
ஆனந்தமாய் உன்
ஞாபகச் சிலுவையில் – கோ.பாரதி மோகன்


கனவைக் கிள்ளிப் போனாய்
வலிக்கத்தான் செய்கிறது
நீயில்லாத பகல் – மு.முருகேஷ்


உள்ளதை நேசிக்காமல்
உள்ளத்தை நேசிப்பவள்
மனைவி – எஸ்.பி.என்


சமாதியும்
சன்னதி தான்
தெய்வமாய் மனைவி – கலையருவி


எனக்குப் பயன்படாது
எதற்கும் என்னிடம் இருக்கட்டும்
உன் ஒட்டுப்பொட்டு – ஆர். எஸ்.நாதன்


இதயத்தில் இன்னும்
ஈரமாய்
அவள் தந்த முத்தம் – பாலபாரதி


என் பாதங்கள்
சுவடு பதிக்கும்
உன் பாதையில் – தமிழ்நெஞ்சன்


கண்மூடி ரசித்தேன்
உருண்டு விளையாடும்
அவள் விழியை – பா.உதயக்கண்ணன்


வீடு நிறைந்திருந்தும்
மனம் காலியாகவே
அவள் இல்லாமல் – முகவை முனியாண்டி


நீ ஒருமுறை இறந்தாய்
நான் தினம் தினம்
புதைக்கப்படாமல் – ச.காவியன்


காலி செய்த வீடு
மறக்காமல் எடுத்து வந்தேன்
பழகிய நாட்களை – நா.கவிக்குமார்


அடையாளம் தெரியும்
தூரமாய் இருந்தாலும்
அவளின் நடை – ஆலா


சோகம்
அதுவும் சுகம் தான்
நினைவில் நீ – மணிமேகலை நாகலிங்கம்


ஒவ்வொரு ஹைக்கூ கவிதையும் ஒவ்வொரு உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. மலரும் நினைவுகளை உருவாக்குகின்றன. இந்த ஹைக்கூ கவிதைகளைப் படிக்கும் போது வாசகர்களின் நினைவிற்கு காதல் மனைவியின் நினைவு வருவது நிச்சியம். இந்நூல் பற்றி கவிஞர் வெண்ணிலா ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று குறை சொல்லி உள்ளார். அதுவும், அதற்கான மறுப்பும் நூலில் உள்ளது கூடுதல் சிறப்பு. இன்று விமர்சனங்களை ஜீரணித்து கொள்ளும் பண்பு பலருக்கு இருப்பதில்லை. ஆனால் தொகுப்பாசிரியருக்கு இப்பண்பு நிறையவே உள்ளது என அறிய முடிகின்றது. காதலியை, மனைவியே வெறும் போகப் பொருளாகப் பார்க்காமல் உயிருள்ள சக மனுசியாக மதித்து அவளது உழைப்பை, தியாகத்தை உணர்ந்து அவளின் நினைவாக வாழ்வதே வாழ்க்கை.

கருத்துகள்