யாரிவன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.19&disp=inline&realattid=f_gbswj6pi18&zw
யாரிவன் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் ரா.ராம்மோகன்



நூலின் அட்டைப்படம் அற்புதம்.இயற்கை எழில் கொஞ்சம் வனமும்,அருவியும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. இனிய நண்பர் கவிஞர் மு.செல்லா-வின் அணிந்துரை சிறப்பாக உள்ளது.பெயரை உச்சரித்தாலே வீரம் பிறக்கும் மாவீரன் பகத்சிங் பற்றிய கவிதையான யாரிவன்? என்ற தலைப்பையே கவிதை நூலிற்கு பெயராக்கியது மிகச் சிறப்பு. பகத்சிங் வீரன் மட்டுமல்ல, அவர் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர் என்ற கருத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார்.

எதிர்காலத்திட்டம் பற்றிப்; பள்ளியில் கேட்கையில்
ஏராளமாய்ச் சம்பாதிப்பேன் என்று கூறாமல்
என்னுடைய தேசத்தை விட்டு வெள்ளையனை விரட்டுவேன்
என்று முழங்கிய சிங்கக் குரலை

இந்த வரிகளை படிக்கும் போது,”விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது. இந்த அழகிய கவிதையை கருத்துச் சிதையாமல் மிக நூட்பமாக மொழிபெயர்த்து தந்த திரு.முகில்சன் அவர்களையும் பாராட்ட வேண்டும்.

நூலாசிரியர் கவிஞர் ரா.ராம்மோகன் இன உணர்வு மிக்கவர். “கண்ணீர்க் கவிதை” என்ற கவிதையில்,ஈழத்தில் தமிழர்கள் படும் இன்னலை வடித்து உள்ளார்.தமிழ்நாட்டு கவிஞர்களால் அதிகப்பட்சம்,கவிதை தான் எழுத முடியும்,வேறு எதுவும் பெரிதாக ஈழத்தமிழருக்கு செய்ய முடியாது-சூழ்நிலைக் கைதியாக தமிழ்நாட்டு தமிழன் உள்ளான்.

இலங்கையில் சுடுகாடு,இந்தியாவில் கருவாடு

என்னடி கொடுமையிது எம் தமிழன் படும் கொடுமை.

இயற்கையையும் மிக அழகாகப் பாடி உள்ளார். விதை நெல்,நெல்மணியாக விளையும் விந்தையை விளக்கும் அழகிய கவிதை இதோ!

ஓரு துண்டுப் பொன்னைக் கொண்டு ஓராயிரம் பொன்மணிகளைப்
பொன்னாரத்தில் கோர்த்துக் கொடுக்கும்
அற்புதப் பொற்கொல்லன்.

வித்தியாசமான சிந்தனை.பூமியை தாயாகத் தான் பலர் பாடி உள்ளனர். ஆனால்,இவரோ பொற்கொல்லன் என்கிறார். ரசனை மிக்க நல்ல கற்பனை.

வரதட்சணைக் கொடுமை பற்றி,எய்ட்ஸ் பற்றி,தீபாவளி பற்றி,கடல் பற்றி இப்படி பல்வேறு தலைப்புகளில் மிக அழகாக நுட்பமாக கவிதை பாடி உள்ளார். இன்று மூட நம்பிக்கைகளில் ஒன்றாகி விட்டது,ஜனநாயகம் என்பது பணநாயகம் ஆகி விட்டது ஒருநாள் தரும் நன்கொடைக்கு ஆசைப்பட்டு ஐந்து வருடங்களை அடகு வைத்து விடும் அவலம் இன்று தேர்தல் என்ற பெயரில் அரங்கேறி வரும் அவலத்தைச் சுட்டும் கவிதை.

பொதுத் தேர்தல்

வாக்குறுதிகளில் மயங்கி
இம் முடி சூட்டு விழாவில்
நம் நிர்வாணத்தை
நீட்டித்துக் கொள்கிறார்கள்.

ஈழத்தமிழன்; என்ற சொல்லிற்கு கவிஞர் மிகச்சிறப்பாக விளக்கம் தந்துள்ளார்.

ஈழம்

வெட்கம்,மானம்,ரோஷம்,சூடு,சொரணை
ஈரம்,வீரம் உள்ள தமிழன்
உலகின் எந்த மூலையிலிருந்தாலும்
அவன் பேர் ஈழத் தமிழன்

இன்று உலக அரங்கில் அன்னைத் தமிழக்கு அழியாப் புகழை இணையத்தில் வழங்கி வரும் ஈடு இணையற்ற உழைப்பாளிகள் யார் என்றால் அது ஈழத் தமிழர்கள் என்றால் மிகையன்று. வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் அன்னைத் தமிழை அரியணை ஏற்றி மகிழ்கின்றனர்.

அநீதி

சுருக்கெனக் கடிந்த
சித்தெறும்புக்கு
மரண தண்டனை

ஹைக்கூ வடிவிலும் கவிதைகள் உள்ளது.சட்டம் பற்றிய ஆங்கிலக் கவிதையும் மிக நன்று.

law

for each and every action there is an
equal and opposite reaction it is Newton’s law
for each and every action there is a corruption
it’s our nation’s law

நமது நாட்டில் எங்கும் ஊழல் தலைவிரித்து ஆடுவதை மிக அழகாக சாடி உள்ளார்.நியூட்டன் விதியைச் சொல்லி. இதனைப் படிக்க கசப்பாக இருந்தாலும் நாட்டில் நடக்கும் உண்மையைக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நூல் முழுவதும் நல்ல பல கவிதைகள் உள்ளன. நூல் ஆசிரியர் தொடர்ந்து நல்ல பல கவிதை நூல்களை வெளியிட வாழ்த்துக்கள். நூலாசிரியரிடம் ஒரு வேண்டுகோள். சு.ராம்மோகன் என்று முன்னெழுத்தில் உள்ள ஆங்கிலத்தை விடுத்து அழகுத் தமிழ் எழுத்தை பயன்படுத்த வேண்டுகிறான்.

கருத்துகள்