அழகியலே * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129eae165a39bf6a&attid=0.2&disp=inline&realattid=f_gbtcboy01&zw
அழகியலே * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

* நூல் ஆசிரியர் : கவிஞர் பெ.விஜயராஜ் காந்தி


காதலைப் பாடாத கவிஞர் இல்லை. காதலைப் பாடதாவன் கவிஞனே இல்லை. இன்றைய பிரபல முன்னணிக் கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வரிசையில் வருகிறார் சிற்றிதழ்களை ஒருங்கிணைத்து சிறப்பாக முத்திரைப் பதித்து வரும் இனிய நண்பர் வதிலைபிரபாவின் இனிய நண்பர்; நூலாசிரியர் கவிஞர்.பெ.விஜயராஜ்காந்தி. “அழகியலே” என்பதே கவித்துவமான இலக்கியத் தலைப்பு. அழகியலைப் பற்றிய இயல் என்று சொல்லலாம். அழகியின் அழகு பற்றி அழகாகப் பாடிய நூல் என்றும் சொல்லலாம். காதல் என்பது சுகமான அனுபவம். அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஆனால் காதல் கவிதை மட்டும் சங்க காலம் முதல் கணினி காலம் வரை கற்கண்டாக இனிக்கும் வாசகர்களுக்கு. காதலியைப் பற்றிப் பாடும்போது கூட மூட நம்பிக்கையைச் சாடுகிறார்.

ஆளைச் சுற்றக் கூடாது
ஆகாது என்று
சொல்கிறார்கள்
எனக்கோ
உன்னைச் சுற்றினால்தான்
எல்லாமே ஆகிறது!

காதல் கவிதை படிக்கப் படிக்க சுவையாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இதோ.

நீ
தோழியுடன் பல்லாங்குழி
ஆடிக்கொண்டிருக்கிறாய்.
எப்படியென்று தெரியவில்லை.
நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன்!

காதலர்கள் தன்னுள் காதலி, காதலன் வாழ்வதாகவே உணர்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் அழகிய கவிதை

தனிமையில் நான்
என்னுள் நீ
சீச்சீ அதெப்படி
தனிமையாய் இருக்க முடியும்!

காதலை அன்று முதல் இன்று வரை எதிர்க்கும் கூட்டமும் உண்டு. பல எதிர்ப்புகளிடையே வெற்றி பெறுவதுதான் உண்மையான காதல். எதிர்ப்பு உருவாவதை உணர்த்திடும் கவிதை.

உன்னைச் சுற்றி
உளவு பார்க்கும் வேலையை
உன் பெற்றோரை விட
இத் தெருவாசிகளே அதிகம் செய்கின்றனர்.

இந்த வரிகளை வாசிக்கும்போது வாசகர்களுக்கு அவரவர் காதலை நினைவூட்டும் விதமாக உள்ளது.

இதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி. சிறந்த இயக்குநர் சேரனின் “ஆட்டோகிராப்” படம் பார்த்தபோது படம் பார்த்த ரசிகர்களுக்கு அவரவர் காதல் மலரும் நினைவுகளை மலர்வித்தது போல இந்த நூல் கவிதைகளை படிக்கும் போது அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கிறது என்பது உண்மை. நூலை படித்து முடித்ததும் நீங்கள் நான் சொன்னது உண்மை என்பதை உணர்வீர்கள் என்பது உண்மை.

நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அதுபோல காதல் கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை. காதல் கவிதைகளை படித்து முடித்தால் நம்முள் இரசாயன மாற்றம் நிகழ்கின்றது என்பதும் உண்மை. இரசாயன மாற்றம் நிகழ்த்தும் நூலாசிரியர் கவிஞர்.விஜயராஜ் காந்தி பாரட்டுக்குரியவர். கவிஞர் பெயரிலேயே “வெற்றி” வைத்து இருப்பவர். காதல் கவிதை எழுதுவதிலும் வெற்றி பெற்றுள்ளார். நூலாசிரியருக்கு சிறிய வேண்டுகோள். காதல் கவிதையோடு நின்று விடாமல் தங்களின் கவித்திறமையை சமுதாய விழிப்புணர்வுக்கும் பயன்படுத்துங்கள். இலக்கிய உலகில் இனிய இடம் உங்களுக்கு உறுதியாக உண்டு. வாழ்த்துக்கள்.

கருத்துகள்