ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

b.jpg


ராஜாங்கம்* மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா




வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் தொகுப்பு (நூல்) ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா. பலர் ஹைக்கூ நூல் தொகுத்து வெளியிடுகின்றனர். ஆனால் இவரோ கவிஞர்களில் “இராஜா” என்ற பெயர் உள்ள கவிஞர்களைத் தேடி பிடித்து அவர்களிடம் புகைப்படம், ஹைக்கூ கவிதைகளை வாங்கி, இராஜாக்களின் ஹைக்கூ கவிதைகளை இராஜாங்கம் என்ற பெயரில் தனி ராஜாங்கம் நடத்தி உள்ளார். இவரது இலக்கியப் பணி எதுவென்றாலும் உடன் துணை நிற்கும் பொதிகை மின்னல் ஆசிரியர் இனியவர் வசீகரன் இந்நூலிற்கு பதிப்பாளராக சம்மதித்து உள்ளார்.

இந்நூலை வாங்கிப் பார்க்கும் போது, இராஜா என்ற பெயர் 35 ஆண் கவிஞர்களும் பெண்மைக்கும் இடம் தர வேண்டும் என்ற நோக்குடன், திருமதி.கஸ்துரி ராஜா அவர்களின் புகைப்படமும் அனைவரின் புகைப்படங்களும் நூலின் அட்டையை முன்னும் பின்னும் அலங்கரிக்கின்றது.

இந்நூல் உறுப்புகளை தானமாக்கி மக்கள் மனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இதயேந்திரனுக்கு இந்நூலை காணிக்கையாக்குகிறோம்� என்று உள்ளது. இதயேந்திரனுக்கு காணிக்கையாக்கிய முதல் நூல் இராஜாங்கமாகத் தான் இருக்க வேண்டும். எல்லா ஹைக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும், 36 கவிஞர்களின் ஒவ்வொரு ஹைக்கூ மட்டும் உங்கள் பார்வைக்கு.

ஆ.ராஜா
தூர்வாரப்பட்டு விட்டது
வரைபடத்திலும்
ஆறுகள்

கன்னிக்கோவில் இராஜா
பெண் கல்வி அவசியம்
சுவரின் மீது
சாணி தட்டும் சிறுமி

பூபதி ராஜா
வல்லரசு கனவு
தகர்ந்து போனது
பிச்சைக் கேட்கும் சிறுவர்கள்

பா.ராஜா
இழவு வீடு
அழுவதற்கு
கூலியாட்கள்

கஸ்தூரி ராஜா
உளி பட்ட இதயம்
தெளிவான முடிவு
களிப்பான வாழ்வு

வசந்தராஜா
மின்வெட்டு இரவு
நல்லதொரு வாய்ப்பு
நட்சத்திரம்; பார்க்க

மு.ராஜா
பிணங்களிடம்
சிரிக்கின்றன
மலர்கள்

கவி.மா.ஷண்முகராஜா
அமைச்சர் தலைமையில்
அமைதி ஊர்வலம்
கலவரமாய் ஊர்

இதய ஏசராஜ்
எழுத்துக்கள் ஈட்டியாக
ஸ்கூட்டர் கேட்கும்
மருமகன் கடிதம்

அ.இலக்கிய ராஜா
வயிறு நிறைந்தது
கூடி விவாதித்தார்கள்
வறுமை ஒழிப்பு

செல்வராஜா
அள்ளிப்பருகினேன்
அடங்கவில்லை தாகம்
அறிவு அருவி

கொள்ளிடம் காமராஜ்
பல்லியிடம் சிக்கிய பூச்சியாய்
மார்வாடியிடம்
தமிழன்

க.இளையராஜா
தேசிய உணர்வு
கள்ள நோட்டிலும்
காந்தி

தோழன் ராஜா
காத்திருந்து கிடைத்தது
வேலை நியமனக் கடிதம்
அய்ம்பது வயதில்

சரவணராஜ்
மணமேடையில்
முதிர்க்கன்னி
மணமகள் தோழி

கண்டியூர் ராஜா
படிப்பும் பட்டமும்
உயர உயர
உயர்கிறது வரதட்சணை

வீ.பாரதிராஜா
மது ஒழிப்பு மாநாடு
கூட்ட முடிவில்
இலவச மது பாட்டில்

பொ.செல்வராஜ்
கல்லறை தான்
விழித்திருக்கிறது காதல்
தாஜ்மகால்

ராசை.கண்மணி ராசா
எல்லையைப் பற்றி
எள்ளளவும் பயமில்லை
கடல் மீன்கள்

ஆர்.நாகராஜ்
வெறும்புள்ளி
பெரும்புள்ளியாக்கியது
தேர்தல்

ஜெ.செண்பகராஜன்
கழி;ப்பறை இல்லாத கிராமம்
வீடு தோறும்
தொலைக்காட்சிப் பெட்டிகள்

வீ.தங்கராஜ்
விதையின் வாழ்க்கை
மரணத்தில் தொடக்கம்
உயிர்த்திடும் அற்புதம்

ஜனனி அந்தோணிராஜ்
உயிர் கொடுத்த தெய்வம்
ஊருக்கு வெளியே ஆலயம்
அனாதை இல்லம்

பொள்ளாச்சி குமரராஜன்
சாவு வீடு
தவறாமல் வந்து விடுகிறது
சாதி சண்டை

பவல் ராஜ்
வெயிலில் காயும்
நிழல் தரும்
மரங்கள்

ஜா.ஜெயராஜ்
கூட்டாஞ் சோறு
சுவையில்லை
அகதி மண்

சு.இராமராஜன்
அத்து மீறும் ஆசை
கையில் இனிப்பு
சர்க்கரை நோய்

இ.பாக்கியராஜ்
உழுவதற்கு
நிலமில்லை
சிறப்பு பொருளாதார மண்டலம்

துரை கோவிந்தராசன்
பிழை தான்
ரசிக்க முடிகிறது
மழலை மொழி

இரா.நாகராசன்
சாதிக் கலவரம்
பலன் கிட்டியது
அரசியல்வாதிக்கு

வெ.யுவராஜ்
நூறு விழுக்காடு
இட ஒதுக்கீடு
அடுப்படியில் பெண்ணுரிமை

இரா.சுந்தரராஜன்
இடுகாட்டுப் பள்ளி
இடைவேளை ஒய்வு
கல்லறை மேல்

ஒ.ஆர்.நாகராசன்
சுடப்பட்ட காந்தி
சிரித்தார்
ரூபாய் நோட்டில்

ஆ.சு.ராஜா
நம்பிக்கை வாக்கெடுப்பு
வெற்றி பெற்றது
கருப்புப் பணம்

பெ.கு.தங்கராஜ்
அவசர அவசரமாய்
நலம் விசாரிக்கும் உறவுகள்
விளம்பர இடைவேளை

சோ.ம.செயராசன்
மானாட
மயிலாட
ஆட்டுகிறது பணம்

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” போல,நம் கவிஞர்களின் 36 ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். இந்த ஹைக்கூ கவிதைகளைப் படித்தவுடன் நம் சிந்தையில் ஒரு மின்னல் ஏற்படுவது உண்மை. அது தான் ஹைக்கூ கவிதையின் வெற்றி 3 வரியில் முத்தாய்;;;;ப்பாக எப்படிப்பட்ட கருத்தையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல இரத்தினச் சுருக்கமாக ஹைக்கூ விருந்து படைத்துள்ளனர்.

இந்நூலில் ஹைக்கூ எழுதியுள்ள கவிஞர்கள் கன்னிக்கோவில் இராஜா, கொள்ளிடம் காமராஜ, பாரதிராஜா, இதய ஏசுராஜ, ஆர்.நாகராஜ் உள்பட பலர் குறுஞ்செய்தி மூலம் ஹைக்கூ கவிதை பரப்பும் ஹைக்கூ கொள்கை பரப்புச் செயலாளர்கள். அனைத்துச் கவிஞர்கள் பற்றியும் சிறுகுறிப்பு இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.

பாடுபொருளாக எதையும் விட்டு வைக்காமல் சகல பொருளிலும் பாடி உள்ளார்கள். கவிஞர்கள் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் அல்ல, சாதாரண கூலித் தொழிலாளி வரை தனது அனுபவத்தை ஹைக்கூவாக வடிக்க முடியும் என்று நிரூபித்துள்ள இந்த நூல் ஹைக்கூ வரலாற்றில் நல்ல இடம் பிடிக்கும். சமுதாய அவலங்களை துணிச்சலுடன் சாடி உள்ளனர். சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைந்திட உரக்கக் குரல் கொடுத்து உள்ளனர். கவிஞர்களின் கனவு நனவாக வேண்டும். நூல் நேர்த்தியான வடிவமைப்பு.

எனது பெயர் ரவி, ரவி என்றால் சூரியன். எனது பெயருக்காக பெருமைப்பட்டு இருக்கிறேன். பெயர் சூட்டிய தந்தையை உயர்வாக நினைத்து உள்ளேன். ஆனால் இந்த நூலைப் படித்து முடித்த போது இந்நூலில் நமது ஹைக்கூ இடம் பெறாமல் போய் விட்டதே. நமது பெயரில் ஒரு இராஜாவை தந்தை வைக்காமல் விட்டு விட்டோரே என்று உண்மையில் வருத்தப்பட்டேன் நூலில் ஓவியங்களும் மிகச் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

கருத்துகள்