நூலின் பெயர் : களவு போன காலங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி |
நூலின் ஆசிரியர் : கவிஞர் கு.சிவசுப்பிரமணியன் நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. பாலைவனத்தில் ஒரு அழகிய பெரிய மரம். களவு போன காலங்கள் பாலைவனமாகவும், காலம் களவு போகாமல் இருந்திருந்தால் மரமாக செழித்து இருக்கும் வாழ்க்கை என்று சொல்வது போல் உள்ளது. நூலாசிரியர் கவிஞர் கு.சிவசுப்பிரமணியன் கொஞ்சு தமிழ்க் கோவையின் நற்றமிழ்ப் பாவலர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிக் கட்டுப்பாடு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் இலக்கிய பணியிலிருந்து ஓய்வு பெறாமல் உழைத்து வரும் உழைப்பாளி. எழுந்திரு பாப்பா இவரின் முதல் படைப்பு. இந்நூல் இரண்டாவது படைப்பு. ஒவியா பதிப்பகத்தின் தரமான வெளியீடாக வந்துள்ளது. மரபு அறிந்து மரபு மீறு என்பார்கள். நூலாசிரியருக்கு மரபும் வருகின்றது. புதுக்கவிதையும் வருகின்றது. மரபை ரசித்துப் படித்தவர்கள் புதுக்கவிதையை எளிதில் ஏற்பதில்லை. மரபுக் கவி விரும்பிகளுக்கு விருந்தாக உள்ளது நூல். அரிமா டாக்டர் பூவண்ணன் அணிந்துரை, கவிஞர் வதிலை பிரபாவின் வாழ்த்துரை முத்தாய்ப்பாக உள்ளது. வருடம் தோறும் அற்புதமாக தொகுப்பு நூல் வெளியிட்டு தமிழன்னைக்கு அணிகலன் பூட்டும் கோவை வசந்தவாசல் கவி மன்றத்தைச் சேர்ந்தவர் நூல் ஆசிரியர் என்பது கூடுதல் சிறப்பு. "தாயே தமிழே" என்ற தொடங்கி திருக்குறளின் முப்பால் போல மூன்று பகுதியாக பிரித்து 66 கவிதைகளின் அணிவகுப்பு அழகான சொற்களின் சுரங்கமாக உள்ளது. தாயே தமிழே உலகின் மூத்த உயர் தனிச்செம்மொழி மலையென உயர்ந்து கடலென விரிந்து வானெனப் பரந்த வண்டமிழ்த் தாயே! தேனமு தாகும் தொண்மொழித் திருவே! உலகின் முதல் மனிதனான தமிழன் பேசிய தமிழ் மொழியின் சிறப்பை நன்கு விளக்குகிறார். கதிரவன்,நிலவு,காற்று,பனித்துளி மலையருவி தூய நன் வெண்மைப்படலம் துளிர்ந்திடும் தண்ணீர்த் திவலை வேய்ங்குழல் மூங்கில் பட்டு விதவித இசை பரப்பி காய்ந்திடும் பாறை மோதி கடுமொள காவிற் பரப்பி பாய்ந்திடும் தெண்ணீர் வெள்ளப் பனித்திரள் அழகே அருவி கவிஞர் அருவியை கண்டுகளித்து கவிதையாக்கி இருக்கிறார். வாசகர்களும் இது போன்ற கவிதை நூல்களை வாங்கிப் படித்தால் கவிதை பற்றிய புரிதலும் புதிய சொற்களும் விளங்கும். வாசகர்கள் புகழ்பெற்ற கவிஞர்கள் கவிதையை மட்டுமே படிப்பதால் புத்தகக் கடைகளில் வளரும் கவிஞர்களின் படைப்பை வாங்கி வைக்கவே யோசிக்கின்றனர். வாசகர்களும் வளரும் கவிஞர்களை ஆதரிக்க முன்வர வேண்டும். தொடக்கம் அன்னை வயிற்றில் அன்பின் வடிவாய் அடைபடு குழந்தைச் செல்வம் தன்னை விடுத்துத் தாரண காணும் பிறப்பது வாழ்வின் தொடக்கம் உருவெழில் பெற்று ஒவியம் நிகர்ந்த உவந்திடும் புதுமணப் பாவை பருவக் கோலம் பெற்றனன் மன்றல் புகுவதும் வாழ்வின் தொடக்கம். இந்தியாவில் 61-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குத்தாட்ட நடிகைகளின் கும்மாளத்தை ஆபாச நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து பரவசப்பட்டு பொழுது கழித்தனர். ஆனால் இன்னும் வறுமை ஒழிந்தபாடில்லை. கொத்தடிமைத் தனங்களும் ஒழிந்தபாடில்லை. அதனை உணர்த்தும் அழகிய கவிதை இதோ! கொத்தடிமை நித்தம் பணியாற்றி நீங்காத வறுமையினால் கொத்தடிமை ஆனார் குடும்பத்தை அடகு வைத்து மாடாக உழைத்தார் மனைவாழ்வில் நலங்கணார் பாடுமிகப் பட்டும் பயன்துய்க்க வழி காணார் இந்தியாவில் இன்னும் முழுமையாக கொத்தடிமை ஒழிக்கப்படவில்லை என்பதை உணர்த்திடும் கவிதை தெய்வத் தமிழ் அமுதூறும் பாக்களினால் அற்புதங்கள் பலகாட்டி தமிழால் இறையோனைத் துதிபாடி உயர்ந்தனரே மீண்டும் கோவில்களில் மடைதிறந்த வெள்ளமென ஆண்டவன் புகழ்பாட அருந்தமிழில் பாடுவமே எல்லாம் அறிந்த கடவுளுக்கு உலகின் முதன்மொழி தமிழ்மொழி எனது தாய்மொழி புரியாதா? புரியாது என்றால், என் மொழி புரியாத கடவுள் எனக்கு எதற்கு? என்று ஒரு பாமரன் சொன்னான். ஆதுபோல தமிழ்நாட்டில் தமிழர்களின் காணிக்கைகளால் நடக்கும் திருக்கோயில்களில் தமிழிலேயே அர்ச்சனைகள் நடைபெற வேண்டும். தமிழிலும் அர்ச்சணை செய்யப்படும் என்பது மாறி, தமிழில் மட்டுமே அர்ச்சனை நடக்கும் என்ற நிலை வர வேண்டும் என்ற ஆவல் கவிஞருக்கு இருப்பது கவிதைகளில் புலப்படுகின்றது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை வர வேண்டும். உயர் நீதிமன்றங்களிலும் தமிழ் இடம் பெற வேண்டும். கடலும் வானும் என்ற தலைப்பில் கவிதை நாடகம் நூலில் உள்ளது. நல்ல நடை தெளிந்த நீரோடை போன்ற கவிதைக்கு விளக்கவுரை தேவையின்றி எளிமையாக எல்லோருக்கும் புரியும் விதத்தில் கவிதை படைத்த கவிஞர் கு.சிவசுப்பிரமணியன் பாராட்டுக்குரியவர். தொடர்ந்து பல நூல்களை எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள். |
கருத்துகள்
கருத்துரையிடுக