திராவிட இயக்கச் சிந்தனைகள் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.9&disp=inline&realattid=f_gbswj6ok8&zw
திராவிட இயக்கச் சிந்தனைகள் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி


நூல் ஆசிரியர் : முனைவர் இ.கி.இராமசாமி

நூலின் முகப்பு அட்டை சிறப்பாக உள்ளது. பார்த்ததும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. "திராவிட இயக்கச் சிந்தனைகள்" என்ற நூலின் தலைப்பே நமக்குச் சிந்தனையை விதைக்கின்றது. இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வாங்கிப் படித்து அறியவேண்டிய கருத்துக் களஞ்சியமாக உள்ளது.

நூல் ஆசிரியர் முனைவர் இ.கி.இராமசாமி,மதுரை யாதவர் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ் உயராய்வு மையத்தின் தலைவராக பணியாற்றி இளம் ஆய்வாளர்கள் 31,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 7 ,நெறிப்படுத்தியவர். தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்களின் மாணவர் இவர்,என்பது கூடுதல் சிறப்பு. பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், இலக்கியப் பணியிலிருந்து என்றும் ஓய்வு பெறாமல் ஆய்வுரைகள் படைத்து வருவபர். பாண்டியன் சரஸ்வதி பொறியாளர் கல்லூரி,கல்வி நிறுவனங்களின் ஆலோசகராக பணிபுரிந்து வருபவர். இதயநோய் வந்த போதும், அதை எல்லாம் மறந்து விட்டு தேனியைப் போல உழைத்து வரும் உழைப்பாளி.

பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இளவல், அறிஞர்.க.திருமாறன் அவர்கள் வழங்கி உள்ள அணிந்துரை நூலிற்கு கோபுர வாசலாக உள்ளது என்று நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளார். சுருக்கமான அணிந்துரையானாலும், நூலின் சிறப்பை நன்கு விளக்குகின்றது.

சுயசிந்தனையாளர்களான பெரியாரையும், பெட்ரண்டு ரசலையும்,தமிழ் கடல் பாவாணரையும் , பாவேந்தர் பாரதிதாசனையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். நம்மில் பலருக்கு, பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பற்றி தெரியும்,ஆனால் மேனாட்டு அறிஞர் பெட்ராண்டு ரசலையும் தெரிந்து கொள்ளும் வண்ணம் மிகச் சிறப்பாக ஒப்பீடு செய்துள்ளார்.

நூலின் பத்து தலைப்புகளில் பயனள்ள கட்டுரையாக வடித்துள்ளார்.தந்தை பெரியார் பிறப்பதற்கும் 35 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் சீர்திருந்த்தச் சிந்தனைகளை விதைத்து சென்றவர் அயோத்திதாச பண்டிதர் என்ற தகவல் தொடங்கி , திராவிட இயக்கத்தின் வள்ர்ச்சி,கொள்கை,தளங்கல்,ஆய்வு அணுகுமுறை என விளக்கி உள்ளார். பாராதிதாசன் பரம்பரைக் கவிஞரை பட்டியலிட்டுள்ளார்கள். சுய சிந்தனையாளர்கள், நாத்திகர்கள், மாந்த நேயர்கள்,பகுத்தறிவாளர்கள், பொருள் முதல்வாதிகள்,முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்ற பல்வேறு வகைப்பட்ட அறிவியக்கத்தவரை உள்ளடக்கியது ஆகும் என்று குறிப்பிடுகிறார்.நோபல் பரிசுக்குறிய எல்லாத் தகுதிப்பாடும் கொண்ட தந்தை பெரியார்,புத்துலகம் கண்ட தொலை நோக்காளர் தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்,சமூக சீர்திருத்த இயக்கத் தந்தை, மூடநம்பிக்கைகளுக்கு எதிரி என்று யுனெஸ்கோவால் பாராட்டப் பெற்றவர் இப்படி பெரியார் பற்றி இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளும் வண்ணம் பல பயனள்ள தகவல்கள்,நூலாசிரியர் பேராசிரியர் .இ.கி. இராமசாமி பகுத்தறிவாளர் என்பதால்,தந்தை பெரியாரை நன்கு உள்வாங்கி,ரசித்து,ஆய்ந்து, அறிந்து பெட்ரண்டு ரசல் வரலாறும் நன்கு ஆய்ந்து ஒப்பீடு செய்துள்ளார். இருவரின் குடும்ப சூழ்நிலை தொடங்கி, பெண்ணுரிமை கடவுள், மதம் பற்றிய சிந்தனை இருவருக்கும் உள்ள ஒற்றுமையை மிகச் சிறப்பாக ஆய்வு செய்து அற்புதக் கட்டுரைiயாக வழங்கி உள்ளார்கள்.

கவிஞர் நாராயண கவி அளவுக்குத் திரைப்படப் பாடல்களில் பகுத்தறிவுக் கருத்துக்களைச் சொல்லியவர் எவரும் இலர் என்கிறார். இதனைப் படித்த போது அன்றைய திபை;படப் பாடல் மக்களிடையே பகுத்தறிவைப் பரப்பிடும் மிகச் சிறந்த சாதனமாக விளங்கியது என்பது தெளிவாகிறது. ஆனால், இன்றோ தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் விதமாகவே பாடல்கள் எழுதியும், தமிழ்மொழியைக் கொலை செய்தும் வருகின்றனர் என்பது சொல்லலொண்ணா வேதனை.

மறையவரோடு பள்ளுப் பறையரை நோக்கி
மத பேதத்தை ஒழித்திட்ட இரயிலே

என்ற வைர வரிகள், இரயில் சமத்துவத்தை நமக்கு விளக்குகின்றது. கட்டுரை என்ற பெயரில், நுனிப்புல் மேய்வது போல அல்லாமல் கட்டுரை தொடர்பான பல்வேறு நூல்களையும் விடுதலை நாளிதழையும் மேற்கோளாகக் கொண்டு ஆராய்ந்து மிக நுட்பாக வழங்கி உள்ளார்கள்.
பெரியாரின் பொன்மொழிகளை விளக்குகின்றார். அறம் என்றால் தடிப்பசங்களுக்குச் சாப்பாடு போடுவதோ, கோயில் கட்டுவதோ அல்ல மக்களுக்கு தம்மாலான நல்லவற்றைச் செய்வது. இந்தப் பொன்னான பொன்மொழியைக் கடைபிடித்தால் நாடு செழிக்கும்.

எந்தத் துறையில் ஆகட்டும், "சிந்திக்காதே நம்பு" என்று சொல்லி, சிந்திக்க விடாமல்; தடுப்பது, மனிதனை மிருகத்தை விடக் கீழான நிலைக்குக் கொண்டு செல்வதாகும். இப்படி தந்தை பெரியாரின் பயனுள்ள பொன்மொழிகள் நூலில் உள்ளது. அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.என்று அறிஞர் அண்ணா எப்போது எந்தச் சூழ்நிலையில் பாராட்டினார் என்ற ஆய்வு நூலில் உள்ளது.

அரிய மாயை நூல் 8 பதிப்புகள் வெளிவந்து பெருமளவில் விற்பனை ஆயிற்று. நூலிற்கு வந்த தடையும், பின் தடை நீக்கிய வரலாறும் நூலில் உள்ளது. தென் சொல், வட சொல் பட்டியலும் உள்ளது. புரட்சிக்கவிஞர் வைர வரிகள் இதோ,

சலுகை போனால் போகட்டும் என்
அலுவல் போனால் போகட்டும்
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.

என, புதுவை அரசுக்கு அறைகூவல் விட்டவர் பாவேந்தர். கவிப்பேரரசு வைரமுத்து வரிகளும் நூலில் உள்ளது.

என் கல்லறையில் தோற்றம் எழுதுங்கள் 13.07.1953 மறைவு ---------------- எழுதாதீர்கள்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நேரத்திலும் எனக்கு மரணமில்லை என்ற கண்ணதாசன் பாடல் வரிகளும் இங்கு எதிரொலிக்கின்றன.

இப்படி நூல் முழுவதும் பல்வேறு ஒப்பீடுகள், ஆய்வுகள், தகவல்கள் என கருத்துக் களஞ்சியமாக உள்ளது. படித்து விட்டு போடும் சராசரி நூல் இல்லை இது. படித்து விட்டு பாதுகாத்து வைக்கும் வரலாற்று ஆவணம்.நூல் ஆசரியர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்களின் கடின உழைப்பை உணர்த்தும் நூல். பாராட்டுக்கள்.

கருத்துகள்