கருகும் பிஞ்சுகள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.6&disp=inline&realattid=f_gbswj6ob5&zwகருகும் பிஞ்சுகள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.ஜீவா


நூலின் அட்டைப்படம் நூலின் பெயருக்கேற்றபடி கருகும் பிஞ்சுகளின் சோகத்தை உணர்த்துகின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் இரா.ஜீவா மிகச் சிறந்த மனிதரான ஜீவாவின் பெயரை வைத்து இருப்பதால் மிகச்சிறந்த கருத்துக்களை கவிதையாக்கி உள்ளார். பேராசிரியர் த.இராஜாராம் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது. புலர் மு.தமிழ்கூத்தன், திருமதி. காந்திமதி ஆகியோரின் வாழ்த்துரை வளம் சேர்க்கின்றது.


“கவிதை ஆழ்மனத்தின் வெளிப்பாடு, உள்ளுள் கனன்று கொண்டிருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு சமூக அவலங்களுக்கு எதிரான போர்முரசு ஆம் தம்பி இரா.ஜீவாவின் கவிதைகள் இத்தகையது தான்” என்று புலவர்” மு.தமிழ்க்கூத்தனின் வைர வரிகள் நூலிற்கு தரத்தை பறைசாற்றுகின்றது.


வீர வணக்கம்


சமூக அவலத்தை வேரோடு சாய்க்க வந்த
ஈரோட்டு கிழவனுக்கு
என்று வித்தியாசமாக நூலை காணிக்கையாக்கி உள்ளார்
.


குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்போம் என அறிவிப்புகள் சொல்கின்றன. சட்டங்களும் சொல்கின்றன.ஆனால் நம் நாட்டில் நடைமுறையில் எண்ணிலடங்கா ஏழைக் குழந்தைகள் உழைத்து உயிர் வாழ வேண்டிய அவல நிலை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.


மத்தாப்புக்கள் சிரிக்கின்றன
எங்கள் சிவகாசிக் குழந்தைகளின் அழுகையில்
கல்வி மறுக்கப்பட்ட இவர்கள்
தயாரிப்பதோ சரஸ்வதி சரவெடி


இந்த இரண்டு வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. குழந்தைகளுக்கு ஊதியம்
கூட கொடுக்காமல், கொத்தடிமைகளாக வேலை வாங்கும் அவலம் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. எனக்குத் தோன்றிய உடன் ஒரு வரி,


லட்சுமியே கொடுக்காமல் லட்சுமி வெடி செய்ய சொல்கிறார்கள்.


னுட்டி ஜப்பான் என்று சொல்லப்படும் சிவகாசியில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்து விட்டதாக உதட்டளவில் சொன்னாலும் நடைமுறையில் இன்னும் சில இல்லங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.


இவர்கள் வாசிக்கவும் யோசிக்கவும் முடியாது
சுவாசிப்பதே வெடி மருந்துக் காற்று தான்
.


இன்றைக்கும் தீ விபத்து ஏற்பட்டு விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதும், பிஞ்சுகளும் பலியாவதும் தொடர்கதையாக நடைபெற்று வருகின்றது.


உங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தான் தீபாவளி
எங்களுக்கு தினம் தினம் தீ வலி தான்


வார்த்தை விளையாட்டுப் போல, தீபாவளி, தீ வலி என்ற சொற்களில் பிஞ்சுகளின் மனவலியை உணர்த்துகின்றார் நூலாசிரியர் கவிஞர் இரா.ஜீவா.


தீபாவளி என்ற பண்டிகை நடந்து முடிந்து மறு நாளில் செய்தித் தாளில் தீ விபத்து,காயம் பலி என்ற செய்தி வராமல் இருந்ததே இல்லை. இந்தச் செய்தியைப் படிக்கும் போது தீபாவளி ஏன் வருகின்றது. அப்படியே வந்தாலும் ஆபத்து விளைவிக்கும் பட்டாசு தேவையா?என முற்போக்காளர்கள் சிந்திப்பது உண்டு.


நீங்கள் விற்பது பட்டாசு வியாபாரமா?
இல்லை பிள்ளைக் கறியா?
குழந்தைகளின் உழைப்பைக்
கோணிப்பையில் அள்ளுகிறீர்கள்-சரி
அவர்களின் உடலையுமா?


இப்படி சிந்திக்க வைக்கும் கேள்விகளின் மூலம் பிஞ்சுகளின் வாழ்வில் வசந்தம் வராதா? என ஏக்கத்தை விதைத்து விடுகிறார்.


எல்லோரும் இறைவன் குழந்தைகள் என்று பொன்மொழி பேசுகின்றோம். ஆனால் கோயில்களில் காணிக்கை என்ற பெயரில் பணங்களையும், தங்கத்தையும் கொட்டுவார்கள்.


ஆனால் ஒரு ஏழைக் குழைந்தைக்கு உதவ வேண்டுமென்ற மனித நேயம், பலருக்கு இருப்பதில்லை. அதனை உணர்த்தும் கவிதை இதோ!


கடவுளின் குழந்தையானாலும்
கந்தக் கிடங்கில் கஞ்சிக்குப் போராட்டம் தான்.


இன்றைக்கு கோடிக்கணக்கானோரின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது முற்றிலும் உண்மை, உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் சிறிய தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்தி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டனர்.


சிவகாசியில் நிறைய சிறுவர்,சிறுமிகள் விபத்துக்கு உள்ளானார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த அச்சுபூமியைத் தோண்டிப் பாருங்கள், பிஞ்சுகளின் பிணங்கள் நிறைய கிடைக்கும்.


சிவகாசியும் ஒரு “நொய்ல்டா”
என்று எழுதி நொய்ல்டாவில் நடந்த மொட்டுக்களின் படுகொலைகளையும் நமக்கு உணர்;த்துகின்றார் நூல் ஆசிரியர். கும்பகோணத்தில் பிஞ்சுகளைக் கொன்ற தீயையே கவிஞர் வெறுக்கிறார்.


நெருப்பால் செய்த உணவும் எனக்கு வேண்டாம்
அதுதான் கும்பகோணத்தில் எங்கள் குழந்தைகளை
எரித்துக் கொன்றது.


பச்சையாக வேக வைக்காததை சாப்பிடுவதே நல்லது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே நாமும் கடைபிடிக்கலாம்.


நூல் முழுவும் பிஞ்சுகளுக்காக உரக்கக் குரல் கொடுத்து உள்ளார். கவிஞரின் கோபம் நியாயமானதே கோபம் தணிக்க சமுதாயமும் அரசும் முன் வர வேண்டும்.

கருத்துகள்