ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129e956a893fde73&attid=0.26&disp=inline&realattid=f_gbswj6q725&zw

ஆதிக்குடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் ம.ஞானசேகரன்

ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. நூலைப் படைத்து இருப்பதே வித்தியாசமாக உள்ளது. நன்றிக்கான புதுவைத் தமிழ்நெஞ்சன் புகைப்படமும் அவருக்கு ஒரு ஹைக்கூவும் மிக நன்று. நூலாசிரியர் என்னுரையில் உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை மறக்காமல் பதிவு செய்துள்ளார். இந்த நூலின் ஒட்டுமொத்த சாரத்தையும் “எள்ளல்களும் எரிமலை வெடிப்புகளும்” என மூன்றே சொல்லில் விளக்கி உள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். அவரது அணிந்துரை நூலின் மகுடமாக மின்னுகின்றது. அட்டைப்பட புகைப்படமே அற்புதம் குழந்தைகளை நேரடியாக பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. நல்ல வடிவமைப்பு நேர்த்தியான அச்சு இன்று ஹைக்கூ பரவலாக எல்லோராலும் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் லிமரைக்கூ வடிவம் தற்போது தான் உணரப்பட்டு பிரபல ஹைக்கூ கவிஞர்களும், கன்னிக்கோவில் இராஜா, புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோரின் ஊக்கத்தின் பேரில் எழுதி வருகிறார்கள்.சமீபத்தில் தொகுப்பு நூல் காக்கைகூடு வந்துள்ளது. ஆனால் ஒரே கவிஞரின் லிமரைக்கூ நூலாக ஆதிக்குடி வந்து இருப்பது கவிஞர் ம.ஞானசேகரன் அவர்களின் திறமையை பறை சாற்றும் விதமாக நூல் வந்துள்ளது. முந்தி செயலாற்றுவதில் செயல்வீரராக இருக்கிறார். நூலாசிரியர் பகுத்தறிவாளர் என்பதால் யாருடனும் சமரசம் செய்துகொள்ளாமல் மனதில் பட்டதை துணிவுடன் பதிவு செய்து லிமரைக்கூ விருந்து படைத்துள்ளார். புதவைத் தமிழ்நெஞ்சன் சீனு, தமிழ்மணி இவர்களது அணிந்துரை லிமரைக்கூ பற்றிய புரிதலை உருவாக்குவதுடன் நூலின் சிறப்பம்சத்தை நன்கு விளக்குகின்றன. விவசாயிகளின் ஏழ்மையை முதல் லிமரைக்கூவிலேயே புலப்படுத்துகின்றார்.

அடுப்பில் தூங்கும் பூனை

உழவன் வீட்டில் மிஞ்சியதெல்லாம்

உடைந்த சோற்றுப் பானை

நவீனயுகத்திலும் இன்றைக்கும் இரட்டைக்குவளை முறை சில கிராமங்களில் தொடர்வதாக செய்தி படிக்கும் போது நமது நெஞ்சம் குமுறுகின்றது அதுபற்றி ஒரு

லிமரைக்கூ

தொடருது மனக் கவலை

அறுபதாம் ஆண்டு விடுதலை நாளிலும்

தொங்குது இரட்டைக் குவளை

நூலில் உள்ள லிமரைக்கூ சிறப்பா? நூலில் உள்ள புகைப்படங்கள் சிறப்பா? என பட்டிமன்றமே நடத்திடலாம் அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக உள்ளது. பெண்ணைப் போகப் பொருளாக ஊடகங்கள் முழுவதும் சித்தரித்துவரும் காலத்தில் பெண் இனத்திற்காக உரக்கக் குரல் கொடுக்கும் கவிதை

ஆணுக்கு பெண் நிகர்

பாலுக்கு ஒரு நீதியுரைக்கு

மநு மடமை தகர்

உலகமயம், தாரளமயம், புதிய பொருளாதா மண்டலம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நன்மைச் சுரண்டிட அனுமதித்த அவலநிலையைச் சாடிடும்

லிமரைக்கூ

தாராளமயம் செய்த வேø

நா வறண்டு மாந்தன் சாகும் மண்ணில்

தண்ணீர் திருடுது ஆலை

பாரதிக்குப் புகழ் சேர்த்தப் புதுவை மண்ணில் வாழ்வதால், நூலாசிரியர் ம.ஞானசேகரன் கவிதைகளில் வீரியம் உள்ளது. வீரம் உள்ளது. சாடல் உள்ளது, எள்ளல் உள்ளது, ஈரம் உள்ளது, மண்வாசம் உள்ளது, எல்லாம் உள்ளது.

தமிழன் பண்பாட்டுச் சீரிழிவின் காரணமாக தனித்துவமான தனது அடையாளங்களை இழந்து வருவதற்கு தனது வலுவான கண்டனத்தை மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

நாயின் பேர் பீட்டர்

தமிழனின் வீட்டில் “அக்ஷை” “அபர்ணா”

குடிக்க மெட்ரோ வாட்டர்

இப்படி இந்நூலில் உள்ள லிமரைக்கூவில் எதைக் குறிப்பிடுவது? எதை விடுவது? என்பதே தெரியாத அளவிற்கும் அனைத்தும் சிறப்பாக உள்ளது.

லிமரைக்கூவை தனி நூலாக கொண்டு வந்த கவிஞரின் முயற்சி பாராட்டுக்குரியது. மற்ற ஹைக்கூ கவிஞர்களும் லிமரைக்கூ தனி நூலாக வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வண்ணம் முன்னோடியாகப் படைத்து விட்டார்.

ஒரு தாய் பிரசவத்தின் போது எத்தனை வலிகளைத் தாங்குகின்றாளோ? அத்தகைய வலியினை ஒவ்வொரு நூல் வெளியிடும் போது சில ஆயிரங்களை இழந்து பல வலிகளைத் தாங்கித்தான் வளரும் கவிஞர்கள் நூல் வெளியிட்டு வருகிறார்கள். நூல் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, பாராட்டு வரும் போது வலிகள்பறந்துவிடும். மகிழ்ச்சி பிறக்கும்.

கவிஞர்.ம.ஞானசேகரன் ஆதிக்குடி நூலை மிகச் சிறப்பாக படைத்துள்ளார். பாராட்டுக்கள். முற்போக்கு சிந்தனையுள்ள, சமுதாய அக்கரை உள்ள அனைவரும் விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல். இந்நூல் விற்பனை முடிந்த மகிழ்வில் அடுத்த நூலையும் வெளியிட வேண்டும். சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைக்க வேண்டும்

கருத்துகள்