கொஞ்சும் கவிதைகளும் மிச்சமிருக்கும் வார்த்தைகளும் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
* நூல் ஆசிரியர்கள் : திருமயம் பெ.பாண்டியன் , வேலூர் வெ.ராம்குமார் , வைகை ஆறுமுகம் , செல்வராஜா
நான்கு பேர் கூட்டணியில்,உருவாகி உள்ள இலக்கிய விருந்து இந்த நூல்.கவிஞர் பாண்டியன் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராக இருந்து கொண்டு தமிழுக்கும் முகவராக தமிழ்க்கவிதை வார்த்து உள்ளார். முதல் கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார்.
�எல்லா பறவைகளிடமும் ஏதெனுமொரு பாடலுண்டு- மரங்களைத் தாலாட்டுவதற்கு,
ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு குரலுண்டு- அவை மரங்களைத் தாலாட்டி தூங்க வைக்கின்றன� என இயற்கையைப் பாடுகிறார்.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயி என்கிறோம். ஆனால் முதுகெலும்பை முறிக்கும் விதமாகவே உலகமயம் அரங்கேறி வருகின்றது. அதனை விளக்கும் கவிதை,
நெல்லு போட்டோம், கம்பு போட்டோம்
போட்ட பணம் எடுக்கலை
பிளாட் போட்டோம் உடனடி விற்பனை
இந்நிலை இப்படியே தொடர்ந்தால் உணவு கிடைக்காத அவல நிலை விரைவில் வருவது உறுதி.
கோயிலில் வெட்டுப்பட்டு விருந்தாகிப் போன கிடாக்குட்டி வெட்டுப்படு முன் என்ன சொல்லிச் சபித்ததோ கடவுளை
பகுத்தறிவை விதைக்கும் நல்ல கவிதை, கடவுளுக்கு படையல் என்ற பெயரில் விலங்குகளைப் பலியிடுவது,மண் சோறு உண்பது கத்தியால்,கீறிக் கொள்வது உயிரோடு மணலில் புதைப்பது இப்படி பல்வேறு காட்டுமிராண்டித் தனங்கள் கணினி யுகத்திலும் நடைபெறுவது வேதனைக்குரியது. மொத்தத்தில் கவிதைகள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது.
கவிஞர் வெ.ராம்குமார் கட்டுரை, கதை, கவிதை, துணுக்கு என அனைத்தும் எழுதும் சகலகலா வல்லவர்.இன்றைய எழுத்தாளரின் மன நிலையை படம் பிடித்துக் காட்டும் அழகிய கவிதை இதோ,
வறுமைப் பிடியிலும்,குடும்ப வாழ்க்கையை விட
பேனாவை கையாள தெரிந்தவன்
பசியோடு உறவாடினாலும் தன்மானம் இழக்காதவன்
குடியே இழந்தாலும் வாசகர்களின் மனதிலே குடித்தனம்
செய்பவன்
இந்த வைர வரிகளை படிக்கும் போது எழுத்தை ஒரு தவமாக மேற்கொண்டு வரும் உன்னத எழுத்தாளர்கள் நம் மனக்கண் முன்னே வந்து விடுகிறார்கள். அது தான் கவிதையின் வெற்றி.
காதல் வயப்படாத இளைஞர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவரும் காதலில் வீழ்கிறார்கள்.
ஞானம்
புத்தருக்கு போதிமரம்
அசோகருக்கு கலிங்கப் போர்
இளைஞர்களுக்கோ காதல்
ஹைக்கூ கவிதைகளும் எழுதி உள்ளார். புதுக்கவிதையும் எழுதி உள்ளார்.இதோ அவரது சிந்தனை மின்னலை உருவாக்கும் ஹைக்கூ.
பால் கூட கசந்தது
மாடு விற்ற பணத்தில்
குடித்த போது
மாடு வளர்ப்பவர்கள் அதனை மாடாக வளர்ப்பதில்லை, தன் குடும்பத்தில் ஒருவரானவே வளர்ப்பார்கள். வறுமையின் காரணமாக மாட்டை விற்று,மனம் கலங்கும் ஏழையின் உள்ளத்து உணர்வை அழகாக பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள்!
கவிஞர் வைகை ஆறுமுகம் அஞ்சல் துறையில் பணிபரிந்து கொண்டே கதை, கவிதை,துணுக்கு எழுதி வரும் வித்தகர்.
அரசுக்கு கோடிகள் போதும், குடியால் கோடி திரட்டி, குடும்பங்களின் நிம்மதி பறிக்கும் செயலுக்கு கண்டனம் செய்வது போன்ற கவிதை இதோ,
குடித்தே செத்த அப்பாவின் இறுதி நாளில்
அம்மா அமுத அழுகை விடுதலை உணர்வின்
வெளிப்பாடாய்க் கூட இருக்கலாம்.
காதலைப் பாடுகிறார் கவஞர் ஆறுமுகம். என் எல்லாக் கவிதையிலும் வந்து விடுகிறார் என்னையும் மீறி,
இன்றைக்கும் கிராமங்களில் சாமி கும்பிடுகிறோம் என்ற பெயரில் நடக்கும் சண்டைகள்,சாதாரண பரிவட்ட துண்டுக்காக வெட்டுக்குத்து துப்பாக்கிச் சூடு தேர் வடம் பிடித்ததில் சண்டை இப்படி நடக்கும் வன்முறையைச் சுட்டும் கவிதை
126 ஆடுகள் 84 தோழிகள்
24 பன்றிகளோடு திருவிழாவில்
பலியான மனித உயிர்களின்
எண்ணிக்கை ஆறு.
மனித நேயம் வேண்டும் என வலியுறுத்தும் கவிதைகள். சிந்திக்க வைக்கும் சிறந்த வரிகள். நான்கு பேர் கூட்டணி முறித்து தனி நூலாக வெளியிட வேண்டும் என்பதே எனது ஆசை.4 நூல்களாக்கி கூட்டணி அமைத்து வெளியிடுங்கள்.
கவிஞர் செல்வராஜா தொலைத் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து கொண்டே இலக்கியத் தொடர்பும் வைத்து இலக்கியம் படைத்து வரும் படைப்பாளி
அடிமை
எல்லோருக்கும் தலைவன்
இப்போது நான் அடிமை
அடிமைத்தனத்தின் கொடுமையை உணர வைத்த
பட்டினி ராஜாவிடமிருந்து விடுவிக்க
படையெல்லாம் வேண்டாம்
ஒரு ரொட்டித் துண்டும்,கொஞ்சம் தேநீரும் போதும்
பசியின் கொடுமையை உணர்த்திடும் நல்ல கவிதை.
ஊடுருவல்
வித்தை காட்டும் பையனைப் பார்த்து
எல்லோரும் கை தட்டினார்கள்
கை தட்டலை கவினியாத அவனின் கண்களோ
தம்பி ஏந்திச் செல்லும் தட்டை ஊருடுவியபடி
வித்தையைப் பார்த்து விட்டு, காசு போடாமலும், கை தட்டாமலும், நெஞ்சம் படைத்த இயந்திர மனிதர்களும் உண்டு என்பதை உனர்த்துகின்றது.
ஏழ்மை
யாக நெருப்பில் பட்டுச் சேலை வேடிக்கைப் பார்த்து கந்தல் துணியோடு ஏழை குழந்தை
யாகம் என்ற பெயரில் தீ-க்கு இரையாக்கும் அவலத்தைச் சுட்டி ஏழ்மையின் கொடுமையை விளக்குகின்றது.இப்படி நூல் முழுவதும் சிந்தனையைத் தூண்டும் கவிதைகள் ஏராளம்,தாராளம். நான்கு பேருக்கும் நன்றி. வளர்ந்து வரும் கவிஞர் என்ற நிலையிலிருந்து வளர்ந்திட்ட கவிஞராக வலம் வரும் நால்வரும் இனித் தனித்தனி முழுநூலாக வெளியிட்டு முத்திரை பதிக்க வாழ்த்துக்கள். கவிதைக் கூட்டணி கற்கண்டு சொற்க்கனி.
கருத்துகள்
கருத்துரையிடுக