ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
நூலாசிரியர் - கவிஞர் பரிமளம் சுந்தர்
அட்டைப்பட நவீன ஓவியமே நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வித்தியாசமான வடிவமைப்பு. ஹைக்கூ பற்றிய புரிதலை ஏற்படுத்தும் அற்புத நூல். நூலாசிரியர்,என்னுரையில் குறிப்பிட்டது போல,"ஹைக்கூ வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும்,ரசிக்க வேண்டும்" ஹைக்கூ உணர்விணை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். முனைவர் பட்ட ஆய்வேடுகள் எல்லாமே இனிமையானவை என்று சொல்ல முடியாது. தலைப்பு சார்ந்து அதில் உள்ள ஆர்வம் சார்ந்து இனிமை மாறுபடும். ஆனால் இந்த நூல் ஆய்வேடாக இருந்தாலும்,சராசரி மனிதர்காளலும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஹைக்கூ பற்றி குறைவான மதிப்பீடு உள்ளவர்கள் இந்நூல் படித்தால் மாறுவது உறுதி.
நூலாசிரியர் கவிஞர் பரிமளம் சுந்தர்,ஹைக்கூ படைப்பாளி என்பது கூடுதல் தகுதியாகி விடுகின்றது.அவரது ஹைக்கூ,
சிவனின்
நெற்றிப்பட்டை
ஹைக்கூ - வித்தியர்சமான சிந்தனை
படைப்பாளியாக இருந்து கொண்டு படைப்புகளை ஆய்வு செய்யும் போது புதிய பரிமாணம் தோன்றும். ஆது போலத் தான் நூல் முழுவதும் ஹைக்கூ கவிதைகள் பற்றி அலசி ஆராய்ந்து அவர் பெற்ற இன்பம் வையகம் பெறுக! என்ற உயர்ந்த உள்ளத்துடன் படைத்து இருக்கிறார்கள்.இந்த நூலிற்காக எத்தனை நூல்களை படித்து இருப்பார் என்று எண்ணிப் பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது. நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது.பின்குறிப்பு மட்டும் 111 நூல்கள்,272 மேற்கோள் இதழ்கள் என பட்டியலிட்டு உள்ளார்கள்..
ஹைக்கூ கவிதைகளை பட்டிமன்ற மேடைகளில் பிரபலப்படுத்திய ஒரே நடுவர் முனைவர் இரா.மோகன் அவர்கள்.ஹைக்கூ கவிதை குறித்து முதன் முதலில் பட்டிமன்றம் நடத்தியவர் மட்டுமல்ல,ஹைக்கூ கவிதைகளின் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியவர்.நூலாசிரியருக்கு முனைவர் பட்ட நெறியாளராக நெறிபடுத்தியது மட்டுமின்றி இந்நூலிற்கு மிகச் சிறப்பான அணிந்துரை நல்கி,பெருமை சேர்த்து இருக்கிறார்கள் இரா.மோகன் அவர்கள்.
"சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம்" என்று ஹைக்கூவிற்கான விளக்கம் மிக நன்று.
ஜப்பானிய ஹைக்கூ கவிதையின் வராலாற்றை ஆண்டுகளில் விளக்கி,வரைபடம் வரைந்து,ஜப்பானிய ஹைக்கூவிற்கான மூலங்கள் எவை? ஏன உணர்த்துகின்றார். பௌத்தம், தாவோயிசம்,கன்பூசியனிசம்,சீனக் கவிதை,ஜென் இவைகளின் கலவையாக ஜப்பானிய ஹககூ உருவான விதம் பற்றி நுட்பமாக விளக்கி உள்ளார்.
ஹைக்கூவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதியார்.1916ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியான சுதேசிமித்திரன் நாளேட்டில் ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். ஏனவே ஹைக்கூ கவிதை தமிழில் முதன் முதலில் அறிமுகமாகக் காரணமானவர் மகாகலி பாரதியார் என்ற கற்கண்டுச் செய்தியினை பதிவு செய்துள்ளார்.
"தமிழில் ஹைக்கூ" என்ற விதை இன்று மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து உள்ளது. ஒரு விதை எப்படி? விருட்சமானது என்ற விளக்கத்தை தனது கடின உழைப்பால்,ஆராய்ச்சியால் வரலாற்றை நன்கு பதிவு செய்து உள்ளார்கள்.ஹைக்கூ கவிதைகள் குறித்தான அத்தனை நூல்கள் பற்றியும்,கட்டுரைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். படித்து,ரசித்து,மகிழ எண்ணிலடங்கா ஹைக்கூ,நூலில் உள்ளன.அவற்றில் சில உங்கள் பார்வைக்கு,
தென்றலே பார்த்துப் போ
தெரு முனையில்
அரசியல் கூட்டம் சு.முத்து
தமிழை வளர்ப்பதில் ஈழத் தமிழர்களின் பங்கு போற்றுதலுக்குரியது.புலம் பெயர்ந்த வலி மிகுந்த வாழ்விலும்,தமிழை அவர்கள் மறப்பதில்லை.ஈழத்து கவிஞர் முரளிதரன் எழுதிய கூடைக்குள் தேசம் என்ற நூலில் இருந்து ஆசிரியருக்கு பிடித்த ஹைக்கு.
ஏய்! யாரங்கே ஆற்றில்
பாலைக் கொட்டிவிட்டு ஓலமிடுவது
நீர்வீழ்ச்சி
இந்த ஹைக்கூ-வை படிக்கும் போது நம் கண் முன் குற்றால நீர்வீழ்ச்சி மட்டுமல்ல, நயாகாரா நீர்வீழ்ச்சியும் தோன்றுவது உண்மை.இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. திரு.முரளிதரனின் நூலைப் பற்றி அறியும் வாய்ப்பை நல்கிய நூலாசிரியர் பரிமளம் சுந்தர் பாராட்டுக்குறியவர். ஆய்வு செய்து இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள் நல்ல பல ஹைக்கூ கவிதைகளை.
சிரித்தது நீ
என்குள் எப்படி
இறக்கைகள்?
நொண்டிகள் நடக்கிறார்கள
குருடர்கள் பார்க்கிறார்கள்
நற்செய்திக் கூட்டம் சுவரொட்டியில்
சடங்கு செய்ய வேண்டும் என்ன
சாதி சொல்லுங்கோ சாதிச்
சண்டையில் மாண்டவன்
ஹைக்கூ ஆர்வலர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல்.
நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளில்,"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
போல சில மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இந்த ஹைக்கூ கவிதைகளை படிக்கும் போதே ஹைக்கூ கவிதையின் வீச்சை நீங்கள் உணர முடியும்.ஜப்பானிய ஹைக்கூகளைப் போல இயற்கையை பாடுவதிலும்,சமுதாயத்தை சாடுவதிலும் சளைத்தவர்கள் அல்ல தமிழன் என நிரூபணம் செய்திடும் ஹைக்கூ.
காதலின் வெற்றி
இருவருக்கும் கல்யாணம்
தனித்தனியே
உன்னால் முடிகிறது குயிலே
ஊரறிய அழுவதற்கு
நான் மனிதப் பெண்
Aபடப் போஸ்டரைப் பார்த்து
வெட்கப்பட்டது
குட்டிக் கழுதை
வீட்டு வாசலில் போர்டு
வெல்கம் என்கிறது
கேட்டில் நாய்கள் ஜாக்கிரதை
அணிலே நகங்களை வெட்டு
பூவின் முகங்களில்
காயங்கள்
போர்வை எடுத்து வா
குளிரில் நடுங்கும்
ரோஜா
மலரை யார் பறித்தது
கண்ணீர் வடிக்கிறதே
காம்பு
பூ உதிர்ந்த காம்பில்
வண்ணத்துப் பூச்சி
ஓ! காதல் கவிதை
யாரது
குளத்தில் கல் விட்டெறிந்தது
ஊடைந்ததே நிலா முகம்
நடுப்பகல்
சுடுமணல்
பாவம் என் சுவடுகள்
பழுத்த இலை
மலர்ந்த பூ
ஒரே காற்று
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் அழகாக மொழி பெயர்த்து,நூலாசிரியரின் மொழிப்புலமையை நிரூபித்து உள்ளார்.இப்படி ஹைக்கூ உணர்வை ஏற்படுத்தும் நூல் இது. ஹைக்கூ வரலாற்றை படம் பிடித்துக் காட்டும் அற்புது நூல்.ஹைக்கூவில் என்ன உள்ளது என்று சொல்பவர்களுக்கு விடை சொல்லும் நூலாக உள்ளது.
"என்ன வளம் இல்லை இந்த ஹைக்கூவில்,ஏன் குறை சொல்ல வேண்டும் ஹைக்கூவை" !! என்பதை உணர்த்தும் உன்னதப் படைப்பு.
அருமை... 👌👌👏👏👏😊😊
பதிலளிநீக்கு